மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இன்றைய அரசியலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றும்


டி.கே. ரங்கராஜன்

(மத்தியக் குழு உறுப்பினர்)

இந்திய அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் உண்மையான பொருள் என்ன? இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? இத்தகைய ஆபத்தான அரசியல் வளர்ச்சி போக்கை தடுப்பதற்கு ஒரு வர்க்க கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையின் மையமான அம்சமாகும்.

இந்துத்துவா எனும் சித்தாந்தத்தை முன்வைத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் பாஜக மறுபுறத்தில் மக்களின் பொருளாதார வாழ்விலும் பெரும் நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளையும் வேகமாக அமலாக்கி வருகிறது. இப்பின்னணியில் நாம் இரண்டு முனைகளிலும் நமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். முக்கியமான நான்கு அம்சங்களை இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

1. இந்துத்துவா – பன்மைத்துவத்திற்கு எதிரான சித்தாந்தம்

இந்திய அரசியலை பொறுத்தவரை, வலதுசாரி சித்தாந்தம் என்பது ஒற்றை கலாச்சாரத்தை முன்வைக்கும் இந்துத்துவா சிந்தாந்தமே ஆகும். அது பழமைவாதத்தையும், நவீன பிற்போக்குத்தனத்தையும் ஒரே சேர தூக்கிப்பிடிக்கிறது. இந்திய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற  காங்கிரஸ் இயக்கத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் விடுதலைக்கு பிறகான சுதந்திர இந்தியா எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பதில் இருவிதமான கருத்துக்கள் இருந்தன. சுதந்திர இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டுமென்பது காங்கிரஸ் கட்சியின் பார்வையாக இருந்தது. ஆனால் அரசியல் விடுதலையோடு இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக – பொருளாதார விடுதலையையும் உறுதி செய்ய வேண்டுமெனில், இந்தியா ஒரு சோஷலிச தத்துவத்தை அடிப்படையாக கொண்ட குடியரசாகவும் இருக்க வேண்டியது அவசியம் எனும் முழக்கத்தை கம்யூனிஸ்டுகள் எழுப்பி வந்தனர்.

ஆனால் விடுதலை போராட்டத்தில் எவ்வித  பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா ஆகிய அமைப்புகள் இந்தியாவை மதக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டதொரு நாடாக மாற்ற வேண்டுமென விரும்பினார்கள். அதற்காக அவர்கள் முன்வைத்த கோஷமே அகண்ட இந்து ராஷ்டிரமாகும். இதை அடிப்படையாக கொண்டு, தங்களின் சிந்தாந்தத்தை வலுப்படுத்தும் விதமாக வகுப்புவாத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார்கள்.   இந்திய  – பாகிஸ்தான் பிரிவினையை தூண்டி விடவும், மதச் சிறுபான்மையினரிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கவுமான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். பிரிவினைக்கு பிறகு விடுதலை அடைந்த இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசாக தனது பாதையை தேர்வு செய்து கொண்டது.

அன்றைக்கு இந்துத்துவா அடிப்படைவாதிகளின் வலு குறைவாக இருந்த நிலையில் அவர்களால் தாங்கள் நினைத்தை செய்ய முடியாமல் போனது. ஆனாலும் விடுதலைக்கு பிறகு  தொடந்து அவர்கள் மேற்கொண்டு வந்த வகுப்புவாத நடவடிக்கைகள், மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்மமான வெறுப்பு பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் அரசியல் ரீதியாக வலுப்பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது மதச்சார்பற்ற இந்தியாவை சிதைத்து ஒரு ”இந்து ராஷ்டிரமாக” மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகவே ”ஒற்றை கலாச்சாரம் – ஒற்றை அடையாளம்” ஆகியவற்றை முன்வைக்கின்றனர். இந்துத்துவா சிந்தாந்தத்தின் அரசியல் முகமாக உள்ள பாஜக இப்போது தனக்கு கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தை அதற்காக பயன்படுத்தியும் வருகிறது.

தீவிரமான வகுப்புவாத சிந்தனைகளை கொண்டுள்ள பாஜகவின் பொருளாதார கொள்கைகள் நிலப்பிரபுத்துவ, பெருமுதலாளித்துவ நலன்களுகானதாக உள்ளது.. அவர்களின் பொருளாதார பாதை ஏதோ இன்றைக்கு திடீரென உருவானதல்ல. பாரதீய ஜனதா கட்சி அன்றைக்கு ஜனசங்கமாக இருந்த போது, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்திற்கு எதிராகவும், தனியாருக்கு சொந்தமான வங்கிகளை பொதுத்துறைகளின் கீழ் தேசியமயமாக்குவது எனும் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்தார்கள்  என்பதிலிருந்து இவர்கள் எந்த வர்க்கத்திற்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நிலப்பிரபுத்துவ சிந்தனையின் பிற்போக்குத்தனங்களை வெளிப்படுத்தும் வகையில் இவர்களின் அணுகுகுறைகள் உள்ளன.  சாதீய கண்ணோட்டத்தை உயர்த்தி பிடிப்பது, ஒடுக்கப்பட்ட தலித் பழங்குடி மக்களுக்கு எதிரான இவர்களின் அரசியல் சித்தாந்தம், பெண்களை இரண்டாம் பட்சமாகவும், அவர்களை ஒரு உடமைப் பொருளாக மட்டுமே கருதும் பழமைவாத சிந்தனை ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குவதே  இந்துத்துவா சிந்தாந்தமாகும். பெரும்பான்மை இந்து மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் இவர்களின் சித்தாந்தம் உண்மையில் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் எதிரான சித்தாந்தமேயாகும்.

மதப் பகைமையை உருவாக்குவதும், சிறுபான்மை மக்களை தூண்டிவிடக்கூடிய நுண்ணரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் இவர்களின் பிரதான பணியாகும். இத்தகைய ஆபத்தான வலதுசாரி அரசியல் போக்கிற்கு எதிரான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதே தற்போது நமக்கு முன்னால் உள்ள மிகப் பிரதானமான அரசியல் கடமையாகும். வலதுசாரி அரசியலை பின்னுக்கு தள்ளுகிற சித்தாந்த உறுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே உண்டு. எனவேதான் அனைவருக்குமான சமூக – பொருளாதார உரிமையை முன்வைக்கிற கம்யூனிஸ்டுகளை இந்துத்துவா சக்திகள் தங்களின் பிரதான எதிரிகளாக கருதுகிறார்கள். இந்தியாவின் பன்மைத்துவத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமே ஒற்றை கலாச்சாரத்தை முன்வைக்கும் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியும்.

2. வளரும் எதேச்சாதிகார போக்கு

வலதுசாரி சித்தாந்தம் வகுப்புவாத சிந்தனையை அடிப்படையாக கொண்டிருந்தாலும்,  உண்மையில் முதலாளித்துவ கொள்கைகளின் மற்றுமொரு வடிவமேயாகும். அடிப்படையான பிரச்னைகளுக்கு தீர்வையோ, மாற்றையோ முன்வைப்பதில் வலதுசாரி சித்தாந்தம் தோல்வியடைகிறபோது ஒரு தனிநபரை மீட்பராக சித்தரித்து முன்னிறுத்துவது அவர்களின் வழக்கமான பாணியாகும். ஹிட்லர், முசோலினி உள்ளிட்ட வலதுசாரி சிந்தனையாளர்கள் எவ்வாறு முன்னிறுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். இவர்கள் தற்போது நரேந்திர மோடியை மீட்பராக முன்வைத்து கொண்டாடுகிறார்கள். ஒற்றை மனிதனை சுற்றியே அனைத்தும் எனும் எதேச்சாதிகார போக்கும் வளர்ந்து வருகிறது.

அண்மையில் கூடிய பாஜக வின் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்துத் துறைகளிலுமான  அரசின் தோல்வியை மறைப்பதற்கான உத்தியாக நரேந்திர மோடியை புகழ்ந்து முன்நிறுத்தியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் நரேந்திர மோடி என  அவரது ஆதரவாளர்கள் அவரை கொண்டாடினாலும் கூட நிதர்சனம் என்பது வேறு மாதிரியாகவே இருக்கிறது.. அண்மையில் ஃபிரீடம் ஹவுஸ் எனும் ஒரு அமைப்பு வெளியிட்ட விவரத்தில் இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு எனும் தகுதியை இழந்து விட்டது. குறுக்கப்பட்ட ஜனநாயக  (Partly Freedom) நாடாக இந்தியா தற்போது மாறியிருக்கிறது. வி-டெம் எனும் மற்றொரு நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் இந்தியா தேர்தல் எதேச்சாதிகாரத்தை நோக்கி திரும்புள்ளதாக வரையறுத்துள்ளது. தேர்தலில் பெறுகிற வெற்றியின் மூலமே அனைத்தையும் தீர்மானிக்க முடியும் என்பதாகவும், மாற்றுக் கருத்துடையவர்களின் குரலுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். பேச்சுரிமை, சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை என அனைத்தும் முற்றாக மறுக்கப்படுகிற சூழல் உருவாகியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரால் 7,000 ற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. UAPA எனும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை என்பது கடந்த காலங்களை ஒப்பிடும் போது 72 % அளவிற்கு அதிகரித்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 86 % பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2020 இல் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சிறுபான்மையினர் எண்ணிக்கை 53 ஆகும். உலகம் முழுவதும் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட 153 இணையதள சேவை முடக்கங்களில் இந்தியாவில் அதன் எண்ணிக்கை 109 ஆகும்.

மிகவும் ஆபத்தான முறையில் வளர்ந்து வருகிற இத்தகைய எதேச்சதிகார போக்கு என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஆபத்தை உருவாக்குகிறது. எதேச்சாதிகாரமென்பது சுதந்திரமான ஜனநாயக அமைப்புகளை விழுங்கவும் தயங்குவதில்லை.  அரசியல் சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் சோஷலிச எனும் அம்சங்களை சிதைக்க பாஜக முயல்வதோடு, ஜனநாயகத்திற்கும் பேராபத்தை உருவாக்குகிறது. எனவே இத்தகைய எதேச்சாதிகார போக்கை எதிர்த்த போராட்டத்தில் கருத்தொற்றுமை கொண்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்பதும் நமது அரசியல் கடமையாகும்.

3. முற்றும் நெருக்கடிகள்

பாஜகவின் எட்டாண்டு ஆட்சியில் நெருக்கடியென்பது அதிகரித்துள்ளன. விவசாய அரங்கில் நெருக்கடி, தொழில் துறை மந்தம், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பில் வீழ்ச்சி, கோவிட் 19 ஐ கையாள்வதில் தோல்வி, மக்களின் வாழ்வாதார தேவைகளை புறந்தள்ளுவது என அனைத்திலும் இவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

விவசாய அரங்கில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியென்பது, பாஜகவின் கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகளால் உருவான நெருக்கடியே ஆகும். நாடாளுமன்றம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை முற்றாக புறக்கணித்து விட்டு அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டத்திருத்தங்கள் பல்வேறு பாதகமான அம்சங்களை உருவாக்குகிறது. விவசாயிகளின் நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது என்பது இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தங்களில் 18 பி எனும் பிரிவு வளரும் நாடுகளின் விவசாயத்தை ஏகாதிபத்திய நாடுகள் கைப்பற்றிக் கொள்வதற்கான அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளன.

உதாரணமாக, அமெரிக்காவிற்கும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் தேவைப்படுகிற  வெப்ப மண்டல பயிர்களை இந்திய விவசாய நிலங்களிலிருந்து எவ்வித தடைகளுமின்றி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த சட்டத் திருத்தங்கள் அளிக்கின்றன. விவசாயிகளுக்கு நிலம் சொந்தமென்றாலும் அவர்களை எத்தகைய பயிர்களை விளைவிக்க வேண்டுமென கட்டளையிடுவதே அச்சட்டங்களின் நோக்கமாகும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் நிர்பந்தங்களால் நிறைவேற்றப்படும் இத்தகைய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலையை (MSP) மறுக்கின்றன. ஆனால் இதே முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையையும், ஏராளமான மானியத்தையும் தருகின்றன. ஆபத்தான சட்டங்களால் இந்தியாவில் பெரும் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

பணக்கார நாடுகளுக்கு தேவையானவற்றை விளைவிப்பதால் நமக்கு தேவையான உணவு தானியங்களின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும். உதாரணமாக 2019 ஜூலை முதல் 2020 ஜூன் வரையிலான உணவு உற்பத்தி ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தியின் அளவு 295.5 மில்லியன் டன்களாகும். ஆனால் அதே காலத்தில் தான் உலக பட்டினி குறியீடு அட்டவணையில் உள்ள  116 நாடுகளில் இந்தியாவின் இடம் 101 வது இடத்தில் உள்ளது. இத்தகைய நிலைமைகளின் தொடர்ச்சியாக தற்போது அமலில் உள்ள பொதுவிநியோக முறை முற்றாக முடக்கப்பட்டு ரேஷன் கடைகளும் மூடப்பட்டுவிடும்.

தொழில்துறையில் உருவாகியுள்ள நெருக்கடி பெருமளவு அதிகமாகியுள்ளது. சிறு குறு தொழில்களை (MSME) அடியோடு அழிப்பதற்கான கொள்கைகளையும் பாஜக அரசு அமலாக்கி வருகிறது, முட்டாள்தனமான பணமதிப்பு நீக்கத்தால் சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் அளவும் 30% வரை குறைந்து விட்டதாகவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் எனும் அமைப்பு (Centre for Monitoring of Indian Economy) தெரிவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும்  சிறு குறு தொழில்களை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. ஆனால்  மறுபுறத்தில் இந்தியாவிலுள்ள டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 102 லிருந்து 140 ஆக அதிகரித்துள்ளது என்பதிலிருந்து இவர்களின் கொள்கைகள் யாருடைய நலன்களுக்கானவை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் அன்னிய மற்றும் உள்நாட்டு பெரும் மூலதனத்திற்கு ஏற்றதொரு தொழிலாளர் கொள்கைகளை (Flexible Labour Policy) அமலாக்கும் விதமாகத்தான் 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் என்றைக்கும் இல்லாத அளவில் வேலைவாய்ப்பு மிகவும் சுருங்கியுள்ளது. மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளின் மீதான குரல் எதுவும் ஒன்றிய அரசின் காதுகளில் விழுவதில்லை. அல்லது விழுந்தாலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் பாஜக அரசு முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அமலாக்கப்பட்டு வரும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கும் கூட பாஜக குழி தோண்டுகிறது.  

கோவிட்-ஐ கையாள்வதில் மோடி தலைமையிலான அரசின் அணுகுமுறை பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளானது. முதலில் தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க முடியாது என நிலையெடுத்த அரசு மக்களிடையே எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக பணிந்தது. அரசு பொதுத்துறைகளில் தடுப்பூசிகளை தயாரித்து அனைவருக்கும் விரைவாக வழங்குவதற்கு பதிலாக இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி எனும் நிலைப்பாட்டின் மூலம், மக்களின் உயிரை விட கார்ப்பரேட்டுகளின் நலனே இவர்களுக்கு பிரதானம் என அம்பலப்பட்டு நின்றார்கள். இதை விட வேடிக்கை என்னவெனில் முதல் அலையின் போது இவர்கள் விளக்கை அணைக்க சொன்னதும், கைகளை தட்டச் சொன்னதும் ஊடகங்களாலும், மக்களாலும் பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. வெறும் நம்பிக்கைகளை கொண்டு அறிவியலை புறந்தள்ளுகிற போக்கை கடைப்பிடிக்கிற இவர்களின் அணுகுமுறை பெரும் ஆபத்தானதாகும். ஏகாதிபத்திய உலகில் மூடக்கருத்துக்களின் பரவல் என்பது ஒரு சர்வதேச இயல் நிகழ்வாகும் என அறிஞர் ஜார்ஜ் லூகாக்ஸ் அவர்கள் பகுத்தறிவை அழித்தொழித்தல் எனும் புத்தகம் வாயிலாக விடுத்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்வது இத்தருணத்தில் மிக மிக முக்கியமானதாகும்.

4. வலுவான போராட்டங்களும் வர்க்கத் திரட்டலும்

இந்திய அரசியலின் ஆபத்தான வலதுசாரி அரசியல் போக்கை வலுவாக எதிர்ப்பதும், உழைப்பாளி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதுமான இரு பிரதான இலக்குகளையும் உள்ளடக்கியதாகவே நமது எதிர்கால போராட்டங்கள் அமைந்திட வேண்டும். இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்து நமது கட்சித் திட்டம் கூறுவதாவது..

”பெருமுதலாளித்துவத்தின் தலைமையிலான, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ

வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்திலுள்ள கருவியே இந்திய அரசு”

என கட்சித் திட்டம் இந்திய ஆளும் வர்க்கம் குறித்து தெளிவு படுத்துகிறது. விவசாயத்தில் தாராளமயம் புகுத்தப்படுவதால் விவசாயிகளுக்கும் பெரும் நிதி மூலதனத்திற்குமான முரண்பாடுகள் தற்போது முற்றுகின்றன. கட்சித் திட்டம் சுட்டிக்காட்டும் மக்கள் ஜனநாயக புரட்சியை நிறைவேற்ற வேண்டுமெனில், விவசாயப் பிரச்சனைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பிரச்சனையாக அழுத்தம் கொடுப்பதோடு அன்றி, அதில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கவும் வேண்டியிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள நில உறவு முறைகளில் அடிப்

படை மாற்றங்களை கொண்டு வராமல் மக்கள் ஜனநாயக புரட்சி சாத்தியமில்லை. அதேபோல இந்திய பெருமுதலாளித்துவம் என்பது அந்நிய மூலதனத்துடனான கூட்டு நடவடிக்கைகளையும், ஏகாதிபத்தியத்துடனான சமரத்தையும் ஏற்படுத்திக் கொண்டு வளங்களை கொள்ளையடிப்பதிலும், கடுமையான உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதிலும் ஈடுபடுகிறது. பெருமுதலாளித்துவத்தின் இத்தகைய அணுகுமுறைகளால்தான் நெருக்கடியென்பது நாளுக்கு நாள் முற்றுகிறது. வலுப்பெற்று வளர்கிற நிதிமூலதனம் பன்னாட்டு நிதி மூலதனத்தோடு இணைந்து நிற்பதால் இவர்களுக்கும் பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகளுக்குமான முரண்பாடுகளும் அதிகரிக்கின்றன. எனவே தீவிரமடையும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களோடு, மேற்கண்ட முரண்பாடுகளுக்கும் எதிராகவும் போராடுவது அவசியமாகிறது.

நமது கட்சித்திட்டம் சுட்டிகாட்டியுள்ள அடிப்படையில் விரிவான மக்கள் ஜனநாயக அணியை கட்டாமல், அதாவது புரட்சிக்கான வர்க்க அணிதிரட்டலை மேற்கொள்வதில் வெற்றி பெறாமல் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இத்தகைய வர்க்க அணிதிரட்டல் என்பது ஒரு இடதுசாரி பார்வை கொண்டதாக இருப்பது அவசியமானதாகும். மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதென்பது நமது இலக்கு எனில், இடது ஜனநாயக அணியை கட்டுவது என்பது நமது உடனடியான அரசியல் கடமையாகும். நமது அடிப்படை வர்க்கங்களின் கோரிக்கைகளை பிரதானமாக உள்ளடக்கி விரிவானதும், வலுவானதுமான போராட்டங்களை நடத்துவதன் மூலமே இந்திய அரசியலில் நாம் முன்னேற முடியும். அத்தகையதொரு வலுவான போராட்டங்களே வர்க்கத் திரட்டலுக்கு உதவிடும் எனும் வகையில் இக்கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

இந்த அணிதிரட்டலின் ஒரு பகுதியாகவே தில்லி எல்லைப்பகுதியில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் அமைந்திருந்தது. ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பொதுத் தளமாக ஐக்கிய கிசான் மோர்ச்சா அரசின் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு முன்னெடுத்த அனைத்துக் கோரிக்கைகளிலும் வெற்றி பெற்றது என்பது அதை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக மாற்றியுள்ளது. பொது எதிரியை அடையாளம் கண்டு ஒற்றுமையோடு போராடிய விவசாயிகளால் கம்பீரமானதொரு வெற்றியைப் பெற முடிந்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய சாதனை என்பது எதிர்காலப் போராட்டங்களுக்காக விவசாயிகள் மத்தியில் வலுவானதொரு வர்க்க உணர்வை உருவாக்கியதே ஆகும்.

இந்தப் போராட்டத்தின்போது உருவான தொழிலாளி-விவசாயி வர்க்க ஒற்றுமையை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் நமது இன்றைய கடமையாகும்.

ஃஃஃ

இடது ஜனநாயகத் திட்டத்தின் 11 அம்சங்கள்

  • முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விவசாய உறவு களில் ஜனநாயகப்பூர்வ மாற்றம்.
  • வளர்ச்சிக்கு சுயச்சார்பு பாதை, சர்வதேச நிதிமூலதனப் பாய்ச்சலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங்களை தேசியமயமாக்குவது, திட்டமிட்ட மற்றும் சமச்சீரான வளர்ச்சி.
  • சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பது, ஏகபோகத்தைத் தடுப்பது, பொதுத்துறையை மேம்படுத்துவது, செல்வத்தை மறுவிநியோகம் செய்ய நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள்.
  • ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அரசியல் முறை; மத்திய – மாநில உறவுகளைச் சீரமைத்தல் மற்றும் வலிமையான ஜனநாயகபூர்வ அதிகாரப் பரவல்; ஜனநாயகத்தை ஆழமாக வேர் பிடிக்கச் செய்ய அரசியல் சட்ட மாற்றங்கள், சர்வதேச உடன்பாடுகளை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கை;
  • உயர்மட்ட ஊழலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை; தேர்தல் சீர்திருத்தம், பகுதிப் பட்டியல் முறையோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துவது.
  • அரசியல் சாசனத்தின் அடிநாதமாக அமையும் வகையில் மதச்சார்பின்மை நெறி முறையின் அடிப்படையில் மதத்தையும் அரசியலையும் பிரிப்பது; வகுப்புவாத சக்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
  • நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பிற்கான உறுதி, நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்.
  • உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த பொது விநியோக முறைத்திட்டம்.
  • பொது மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த பொதுக்கல்வி மற்றும் பொது சுகாதார முறையை வளர்த்தெடுப்பது.
  • சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம் சமூக நீதியை உறுதிப்படுத்துவது, பெண்களுக்கு சம உரிமை, தலித்துகள் சிறு பான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி, தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பெறுவதில் சமவாய்ப்பு.


Leave a comment