மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !


ஆசிக் அலி, அங்சுமன் சர்மா

(ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

குரல்: தேவி பிரியா

இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த உற்பத்தியையும், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவதையும் மேற்கொள்கின்றன. இவ்வகையில், கார்ப்பரேட் மயமாதல் போக்கு வேளாண் துறையில் பொதுவாக நிலவுகிறது.

நவ-தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் 1991 ஆம் ஆண்டில் தொடங்கின. அப்போதிருந்தே வேளாண்மையை சார்ந்து வாழும் சமூகங்கள் தொடர்ந்து இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் வேளாண்மையை சார்ந்து வாழும் மக்களின் சதவீதம் 1991ஆம் ஆண்டில் 59 ஆக இருந்தது, 2011ஆம் ஆண்டில் அது 54.6 ஆகியது. 2019-2020 காலகட்டத்தில் இது 45.6 சதவீதமாகியுள்ளது. வேளாண்மை சார்ந்த, மேற்குறிப்பிட்ட மக்கள் தொகையிலும் கூட,சாகுபடியாளர்களின் சதவீதம் 59.7 (1991ஆம்ஆண்டில்) என்பதிலிருந்து 45.1 என்பதாக (2011ஆம் ஆண்டில்) குறைந்துவிட்டது.

பெருந்தொற்றிற்கு முன்பே:

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன், 2019ஆம் ஆண்டிலேயே, வேளாண்மை சார்ந்த ஒரு குடும்பத்தின் சராசரி கடன் ரூ.74 ஆயிரத்து 121 என இருந்தது. விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் இப்போதைய பின்னணியில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. தீவிரமான வேளாண் நெருக்கடி அதிகரித்துள்ளதனால், வேளாண்மை சார்ந்த குடும்பங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 30 தற்கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி வேளாண்மையைக் கைவிட்டு வெளியேறுகிறார்.

பணப்பயிர் விவசாயிகளிடையே தற்கொலை விகிதங்கள் அதிகமாக உள்ளன. அவர்கள்தான் நவதாரளமய பொருளாதார சூழலில் மோசமான இடர்களை எதிர்கொள்கிறார்கள். உலகமயமான சந்தைச் சூழல் காரணமாக ஏற்படும் தாறுமாறான விலை நிர்ணயம், உற்பத்தி பொருட்களின் விலையேற்றம், கடுமையான கடன் நிலைமைகள் என அனைத்தும் ஒன்றாக அவர்களின் வாழ்க்கைநிலையை தாழ்த்துகின்றன.

காற்றில் பறந்த வாக்குறுதி:

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கொள்கைகளால், 2014 ஆம் ஆண்டு முதல் வேளாண் நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. அதிகாரத்தில் உள்ள இந்த இந்துத்துவக் கட்சி,குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. (உற்பத்திச் செலவில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலான விலையை கொடுப்போம் என்று அவர்கள் வாக்குறுதியளித்திருந்தனர்). மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன.

2016ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் திடீரென,நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கும் திட்டத்தை முன்னெடுத்து, புழக்கத்தில் இருந்த நோட்டுக்களை திரும்பப் பெற்றார்கள். இதன் காரணமாக உள்ளூர் சந்தைகளும்,வேளாண் கடன் பின்னல்களும் மோசமான தாக்கம் பெற்றன. பொதுத்துறை வங்கிகளில் இருந்து கிடைக்கக் கூடிய நிறுவனக் கடன்களும் கூட வேளாண்மை சார்ந்த ‘தொழில்களை’ நோக்கி சாயத்தொடங்கின. மோடியின் தலைமையை பின்பற்றி, பாஜக ஆட்சி நடத்தும் மாநில அரசாங்கங்களும், லாபத்தைக் குவிக்கும், ஊக நில வணிகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் நிலங்களை கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இந்திய தொழிலாளர் சட்டங்களை அரசாங்கம் மாற்றியமைத்தது; சங்கமாகச் சேர்வதற்கான தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன; 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டது; தொழிலாளர்களுக்கு இதுவரை இருந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. மேலும், 2020ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று வேளாண்சட்டங்களை அரசாங்கம் வேக வேகமாக கொண்டுவந்தது. இப்போது அந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்ட இயக்கம், விவசாயிகளை ஓட்டாண்டிகள் ஆக்கி, கார்ப்பரேட்டுகள் கையில் விவசாயத்தைக் கொடுக்கும் போக்கிற்கு எதிரான எழுச்சியாகும். இப்படியான பின்னணியில்,கேரளாவின் அனுபவங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெறுகின்றன.

கேரள முன்மாதிரி:

இந்திய ஒன்றிய அரசின் எதிர்ப்பையும், நாடு முழுவதும் நடந்துவரும் வலதுசாரி திருப்பத்தையும் எதிர்கொண்டு, இடதுசாரிகள் அதிகாரத்தை பிடித்துள்ள ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இந்த மாநிலம் வெகுமக்கள் செயல்பாடுகளாகும், தொழிலாளர் ஒற்றுமையினாலும், வலுவான சமூக-ஜனநாயக வளர்ச்சி நெறிமுறைகளினாலும் செழித்த மாநிலம் ஆகும்.

மக்களை உள்ளடக்கிய இந்த மாநிலத்தின் கூட்டுறவு இயக்கமானது, தொழிலாளர் இயக்கத்துடனும், பிற சமூக சீர்திருத்த இயக்கங்களுடனும் வலுவான பிணைப்புக் கொண்டதாக, சமுதாய ரீதியான முயற்சிகளை முன்னெடுப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று. நவ தாராளமயத்தினால் உருவாகிய வேளாண் நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் கருப்பெற்றது இந்த முயற்சி.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட நவ தாராளமய திருப்பத்தின் காரணமாக, பணப்பயிர்கள் சர்வதேச சந்தையுடன் இணைக்கப்பட்டன. அவற்றின் விலை தாறுமாறாகியது. இதனால் கேரளாவின் வேளாண் பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கங்கள் ஏற்பட்டன. ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களான காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய், பாக்கு கொட்டை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கேரளாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 60 சதவீதத்தில் பயிர் செய்யப்படுகின்றன. வயநாடு மாவட்டத்தில் சாகுபடியாகும் முக்கிய பயிர்கள் மிளகும்,காபியும் ஆகும். 1997-98 முதல் 2003-04 வரையிலான காலகட்டத்தில் காபியின் விலை 59 சதவீதமும் மிளகின் விலை 69 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விலை வீழ்ச்சிகளின் காரணமாக விவசாயிகள் வட்டிக்காரர்களிடம் பெற்றிருந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை. இந்த கடன் வலையில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மதிப்புமிக்க நிலங்களை இழந்தார்கள்.

10 ஆயிரம் தற்கொலைகள்:

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி சூழலும், பயிர் நோய்களும், அங்கே இந்த நிலைமையை மேலும் மோசமாக்கின. துயரம் சூழ்ந்த கடுமையான இந்த சூழலின் காரணமாக அந்த மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை ஒரு துயரஅலையாக எழத் தொடங்கியது. 1996-2005 காலகட்டத்தில் 10 ஆயிரம் தற்கொலைகள் நடந்திருந்தன.

இந்தப்பின்னணியில்தான் சுல்த்தான்பத்தேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வர்க்கீஸ் வைத்தியர் (கம்யூனிஸ்ட்), உள்ளாட்சி நிர்வாகங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை வயநாடு மாவட்ட அளவில் கூட்டி, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தார். அதே நேரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், குடிமைச் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து தன்னார்வலர் குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அவர்கள்,வயநாடுமாவட்டத்தின் விவசாய சமூகங்களோடு உரையாடி பொருத்தமான திட்டத்தை வகுத்தார்கள்.

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்குமான சந்தை:

இந்த கூட்டு முயற்சியில் விளைந்ததுதான் பிரம்மகிரி பண்ணை திட்ட அறிக்கை. வர்க்கீஸ் வைத்தியர், இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்தார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பண்ணைகளுக்கு உதவி செய்வதும், பதப்படுத்தும் அமைப்பைக் கொண்ட ஒரு இறைச்சிக் கூடத்தை ஏற்படுத்துவதும் அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி அமைச்சரவை, இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் ரூ.25 லட்சம் நிதி கொடுத்தது. 1999, மார்ச் 31 ஆம் தேதியன்று இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வேளாண்-தொழில்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தும் முறைகளைப் பின்பற்றி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் இயங்கியது. கேரளத்திலும்,அருகமை மாநிலங்களிலும் இனப்பெருக்க பண்ணைகள், கால்நடை பண்ணைகள், தீவன ஆலைகள் ஆகியவைகளைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்ததன் வழியாக தங்களுடைய சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தது. கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியதுடன் அவை இறந்து போனால் காப்பீட்டிற்கும் வழி செய்யப்பட்டது.

விவசாயிகளிடமிருந்து கோழிகளையும், கால்நடைகளையும் நியாயமான விலையில் கொள்முதல் செய்தார்கள். கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் பொருட்களைக் கொண்டு உறையவைத்த இறைச்சி, உலர்த்திய இறைச்சி, கோழிக்கறியில் செய்த கட்லெட், மாட்டிறைச்சியில் செய்த கட்லெட், ஊறுகாய், பஜ்ஜி, நக்கெட், சாசேஜ் மற்றும் வேஃபர் ஆகியவைகளை பலவகை இறைச்சிக் கூடத்தில் தயாரித்து சந்தைப்படுத்தினார்கள். இந்த கூட்டுறவு சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள், ஒரு முறைக்கு தலா 2,500 முதல் 3,000 கோழிகளை வளர்க்கிறார்கள். இப்படி ஆண்டுக்கு ஆறுமுறை கோழிகள் கொள்முதல் நடக்கிறது. கிலோ ரூ.11 என்ற விலையில் அவற்றை சங்கம் வாங்கிக் கொள்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.31,500 முதல் 37,000 வரை வருமானத்தை உறுதி செய்கிறார்கள்.

தேயிலை, காபிக் கொட்டை மற்றும் சமுதாய வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களை கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்கிறது. ஏராளமான விவசாயிகள் இதில் ஒரு சங்கிலித்தொடராக இணைந்துள்ளார்கள். விவசாயிகளும், விவசாயதொழிலாளர்களும் கூட்டான உரிமை பெற்ற விரிவான சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் மலபார் இறைச்சிப் பிரிவு மட்டும் 110 விற்பனைக் கூடங்களை வைத்திருக்கிறது.

போட்டிக்கு மாற்றாக கூட்டுறவு:

பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை உறுதி செய்யப்படுகிறது. இடைத்தரகர்களின் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. விற்பனைச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தப்ப முடிகிறது. பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் விற்பனை வாய்ப்புக்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். விவசாயிகள் வர்த்தக சந்தை (எஃப்.டி.எம்) ஒன்றை உருவாக்கியதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்திற்கு சொந்தமான கடைகளில் இருந்து வயநாடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட்டன.

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் பின்னணியாக அமைந்த கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடைய தலைவர்கள், இந்த முயற்சியினை வர்க்கப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த சமூகக் கூட்டுறவாக முன்னெடுத்தார்கள். எனவே விவசாய சமூகங்களின் நலனே லாபத்தை விடவும் முதன்மை பெற்றது. மூலப் பொருட்கள் வாங்கவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், சந்தைப்படுத்துவதற்கும் ஆகும் செலவுகள் போக, மீதமுள்ள உபரியைக் கொண்டு விவசாயத்தை நவீனப்படுத்தவும், கூட்டுறவு சந்தையை விரிவாக்கவும் எடுக்கப்படும் முடிவுகள் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண் உற்பத்தியாளர்களும், தங்களிடம் உள்ள உபரியினை நல்ல ஊதியமாகவும், கூடுதல் விலை கொடுப்பதன் மூலமும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அனுபவங்களில் கற்ற பாடம்:

இந்திய கூட்டுறவுச் சங்கங்களின் கடந்த கால அனுபவங்களை பார்க்கும்போது, அவை அரசின் கட்டுப்பாட்டினாலும், அதிகாரத்துவம் காரணமாகவும் – கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொருப்பினை ஆதிக்க சாதியினரும், உள்ளூர் பணக்காரர்களும், அரசியல் மேட்டுக்குடியினரும் கைப்பற்றியதன் காரணமாகவும் சீரழிவைச் சந்தித்தன. இவைகளில் இருந்து பிரம்மகிரி சங்கம் பாடங்களைக் கற்றுக் கொண்டது. பணியாளர்களின் சுய மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இயங்குகிறது. முடிவெடுப்பதில் குறுக்கு வெட்டு வழிமுறையை முன்னெடுக்கிறது. இவ்விதத்தில் உறுப்பினர்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை முடிவு செய்கிறார்கள். கொள்கை முடிவுகளையும் மேர்கொள்கிறார்கள். இது உற்பத்தி உறவுகளில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் பணியிடங்களில் வர்க்கங்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை மேம்படுத்துகிறது.

அரசின் தலையீட்டில் சிக்காத வகையில் தன்னாட்சியை உறுதி செய்வதற்காக இந்த சங்கம் தொண்டு நிறுவன சட்டங்களின் விதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமானது சமூக இயக்கங்களோடும், கூட்டுறவு சங்கங்களோடும், உள்ளாட்சி நிர்வாகங்களோடும் அணி சேர்ந்து ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மைப் பெற்றுள்ளது. அதே சமயம் தனது தனித்தன்மையையும் பாதுகாத்துக்கொள்கிறது.

வயநாடு மாவட்டத்தில்,குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களோடும், பிற அரசு திட்டங்களோடும் இணைந்து பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமும் பணியாற்றுகிறது. இப்பணிகளை வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக 1998 ஆம் ஆண்டில் கேரள இடது ஜனநாய முன்னணி அரசு தொடங்கியது. 2017-18 ஆண்டுகளில், குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களின் மூலம் 60 ஆயிரம் காய்கனி விதைப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 557 கூடுதல் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. 2018-19 ஆண்டில், பிரம்மகிரி சங்கம் 5 லட்சம் காய்கனி விதைநாற்றுக்களை வயநாடு மாவட்டத்தின் உள்ளாட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

இடைத்தரகர்கள் இல்லை:

இந்த கூட்டுறவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசின் தொடக்க கால ஆதரவாகும். 2.7 கோடி ரூபாய் நிதி உதவியை அரசாங்கம் வழங்கியது. பிரம்மகிரி சங்கம் தனது உறுப்பினர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் 6.3 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இப்போது, இந்த சங்கத்திற்கு கூடுதலாக நிதி வழங்குவதாக அரசாங்கம் உறுதி கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில்,பிரம்மகிரி சங்கமும் இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவையும் ‘கேரளா கோழிக்கறி’ திட்டத்தை உருவாக்கினார்கள். கறி உற்பத்தியில் தன்நிறைவை எட்டுவதுதான் அந்த திட்டத்தின் நோக்கம். கோழிப்பண்ணைகளை ஊக்கப்படுத்துவது, விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்குவது என திட்டமிட்டார்கள். விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்கும் புதிய நவீன வடிவிலான பரிசோதனை முயற்சியாக அது அமைந்தது. உயிருடன் கோழிக்கறி ரூ.180 முதல் 210 வரை விற்பனையாகிறது. பிரம்மகிரி கேரளா கோழிக்கறி ரூ.140 முதல் 155 வரை விலையில் விற்கப்படுகிறது. சந்தையில் இடைத்தரகர்கள் இல்லாததால் இது சாத்தியமாகிறது.

சுரண்டலுக்கு எதிராக:

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தில் 13 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களில் 19 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆவர். சமூக கூட்டுறவின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது ஒரு லட்சம் ஆகும். 2020-21 ஆண்டு காலத்தில் இதன் உறுப்பினர்களுடைய மொத்த வரவு செலவு ரூ.32.5 கோடிகளாக இருந்தது. இவ்வகையில் விவசாயிகள் மீதான சுரண்டலை பண்ணை அளவில் மட்டுமல்லாது இடை நிலை நிறுவனங்களிலும் (mid-level institutions) எதிர்கொள்கிறார்கள். சில்லறை வணிகம், மாநிலம் முழுவதும் விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலின் மூலம் – முதலாளித்துவ சந்தை உறவுகளால் எழும் அநீதிகளை எதிர்கொள்கிறார்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை இழப்பதற்கு வழிவகுக்கும் நவ தாராளமயத்தின் ஒப்பந்த விவசாய முறையிலிருந்து மாறுபட்டதும், நடைமுறைச் சாத்தியமானதுமான ஒரு முன்னுதாரணத்தை பிரம்மகிரி மேம்பாட்டுச் சங்கம் வழங்குகிறது. இருப்பினும், இந்திய விவசாய-முதலாளித்துவத்தின் சமனற்ற வளர்ச்சியை கவனத்தில் கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம், இப்போதுள்ள விவசாய நெருக்கடிக்கான ஒரே தீர்வாக சமூக கூட்டுறவுகளை மட்டுமே முன்வைக்கவில்லை. வேளாண் துறையில் நடக்கும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிர்ப்பை கட்டமைக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று என்று பார்க்கிறார்கள். இவ்வகையில், முதலாளித்துவ அமைப்பிற்குள், அதற்கு எதிராக முன்னெடுக்கும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சமூக கூட்டுறவுகள் அமைகின்றன. விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஏற்பாட்டினால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இது, முதலாளித்துவத்தை வீழ்த்தி மேற்கொள்ளவிருக்கும் பொருளாதார மறுகட்டுமானத்தின் (post-capitalist economic restructuring – என்பதை) முக்கியமான பகுதியாகவும்அமைகிறது.

முடிவாக:

ஒட்டுமொத்தத்தில், பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் வழியாக விவசாயிகளைத் திரட்டுவதுடன் உற்பத்தியிலும், கொள்முதலிலும், சரக்கு உற்பத்தியிலும் பணியாற்றும் வேளாண்மை சார்ந்த தொழிலாளர்களைத் திரட்டுவதும் சாத்தியமாகியுள்ளது. இந்திய வேளாண் துறையில் இடைத்தரகர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமைத்துள்ள சுரண்டல் ஆதிக்க வலைப்பின்னலுக்கு இது சவால் விடுக்கிறது. தினக்கூலி தொழிலாளர்கள் என்ற நிலையில் இருக்கும் வேளாண் தொழிலாளர்களை, நிரந்தர மாத வருமானம் கொண்ட நவீன விவசாயிகளாக ஆக்குகிறது. நவதாராளமய கொள்கைகளின் காரணமாக, ஊரக இந்தியாவில் விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்படும் போக்கினை இது சிறப்பாக எதிர்கொண்டுள்ளதுடன், வயநாடு மாவட்டத்தில் வேளாண்மையை நவீனப்படுத்தவும், நவீன வேளாண்மை சார்ந்த தொழிலாளி வர்க்கம் உருவாகவும் வழிவகுத்துள்ளது.

முற்போக்கு இயக்கங்களுடைய அரசியல் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பது தொழிலாளி-விவசாயி ஒத்துழைப்பும், ஒருமைப்பாடும் ஆகும். தற்போதிருக்கும் கொடுமையான வேளாண் நெருக்கடி சூழலிலும் கூட, மேற்சொன்ன அந்த ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முன்னெடுப்பதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான வருவாயை உறுதி செய்யும் சாத்தியம் கொண்டதாக, விவசாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் உதாரணமாக காட்டியுள்ளது.

இந்திய சமூகத்திலும், அரசியலிலும் காணப்படும் பிற்போக்குத் தனங்களின் காரணமாக, நமது நாட்டின் பெரும்பான்மை வர்க்கங்கள் ஒரு கடுமையான கால சூழலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், போட்டியும், சுரண்டலும் அதிகரித்த நிலைமைக்கு மாற்றான – ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும் என்ற – நம்பிக்கையை சமுதாய சிந்தனையில் விதைப்பதற்கு இந்த கேராள முன்மாதிரி உதவும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வளர்த்துக் கொள்ள இந்த முயற்சி துணை செய்யும்.

தமிழில்: இரா.சிந்தன்



Leave a comment