மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !


கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், தமிழ்மாநிலக் குழு, சிபிஐ(எம்).

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் 407 பேர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்தஒட்டுமொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தனனிகரில்லா தியாகங்களும் கொண்டதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு குறித்தும், அதன் தலைமையில் நடைபெற்ற எண்ணற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்களும்,ஆய்வு ஆவணங்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த இயக்கத்தின் நூறாண்டு நிறைவு நிகழ்வினை ஒட்டி கட்சியின் அதிகாரபூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி அவற்றின் சாரத்தை வரலாற்று வரிசைக் கிரமமாக 2019 அக்டோபர் முதல் வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. ‘குறுகத் தறித்த குறளாக’ வெளிவந்த இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கம்யூனிச கருத்துக்கள் பரவத் தொடங்குகையில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்தப் பணியை முதன்முதலில் முன்கையெடுத்துச் செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் ஆவார். 1925ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் (கான்பூரில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பேறு பெற்ற தோழர் சிங்காரவேலர், அன்றைய மதராஸ் மாகாணத்தில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், அறிவியல் இயக்கம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் என்ற பெருமையும் மிக்கவர்.

சிங்காரவேலரின் வழிகாட்டுதலில் 1923ஆம் ஆண்டில் மே தினம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி, அதே நாளில் தொழிலாளர்- விவசாயிகள் கட்சியும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர்கள் சிங்காரவேலர், பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் தமிழ் மண்ணில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை. பின்னாளில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தளபதியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964இல் உருவான போது அதன் முதல் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்த தோழர் பி. சுந்தரய்யாவின் அரசியல் பயணமும் அன்றைய மதராஸ் நகரில் இருந்தே தொடங்கியது.

1920 அக்டோபர் 17ஆம் தேதி, முன்பிருந்த சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் (இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகர்) இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ‘முதல் கிளை’ உருவானபோது அதில் சென்னையைச் சேர்ந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியா எனும் எம்.பி.பி. ட்டி ஆச்சாரியா அவர்களும் ஓர் உறுப்பினர். அப்படி உருவான கிளை இந்தியாவில் சிறு அளவுகளில் இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து, இந்திய நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க முயற்சி எடுத்தது. அவ்வாறு அது தொடர்பு கொண்டு இணைக்க முயற்சித்த குழுக்களில் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த குழுவும் ஒன்று. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அறியப்படும் சிங்காரவேலர் தலைமையிலான குழுதான் அது.

சிங்காரவேலர் தலைமையிலான சென்னை குழு, எஸ். ஏ. டாங்கே தலைமையிலான பம்பாய் குழு, முசாபர் அகமது தலைமையிலான கல்கத்தா குழு ஆகியவற்றோடு பெஷாவர்,லாகூர், ஜலந்தர், கான்பூர், காசி, அலகாபாத் ஆகிய மையங்களில் இயங்கிய சிறு குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க எம்.என். ராயும் அவரது தோழர்களும் முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சியைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் இந்திய காலனி அரசு சகலவிதமான எதிர்நடவடிக்கைகளையும் எடுத்தது. அடுத்தடுத்து சதிவழக்குகளை தொடுத்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய காலனியாதிக்க அரசு எடுத்த முயற்சிகளை முறியடித்து வெடித்து வெளிவந்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

செம்பூவாய் மலர்ந்த இயக்கத்தை காலனிய அரசு தனது ராணுவ, போலீஸ் பூட்சுக் கால்களால் மிதித்து நசுக்கி அழிக்க முயற்சித்தது. தாஷ்கண்டில் மார்க்சிய பாலபாடம் கற்றுத் திரும்பியவர்களை வளைத்துப் பிடித்து பெஷாவர் சதி வழக்கில் சிக்கவைத்து பல ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. பின் மீண்டும் கான்பூர் சதி வழக்கில் எம்.என்.ராய், சிங்காரவேலர், எஸ்.ஏ. டாங்கே, முசாபர் அகமது, செளகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்டோரை தண்டிக்க முயற்சித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் கடும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். இதனையெல்லாம் மீறி 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

கட்சியின் முடிவுப்படி நாட்டின் தென்பகுதிக்கு வந்து செயல்பட்ட தோழர் எஸ்.வி. காட்டே, அமீர் ஹைதர் கான் ஆகியோர் தோழர் சுந்தரய்யாவை கட்சிக்கு கொண்டுவந்தனர். பின்னர் எஸ்.வி.காட்டேயும் சுந்தரய்யாவும் தமிழகத்தின் முதல் கிளையாக தோழர்கள் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, ஏ.எஸ். கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ், சி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொண்ட கிளை உருவாக உதவினர். இவ்வாறு இந்த 100 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தின் பொதுவுடமை இயக்க வரலாறும் ஊடுபாவாக பின்னிப் பிணைந்து விளங்குவது பெருமைக்குரியது. தொடக்கத்தில் இருந்தே சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதி, நாடு தழுவிய கட்சியின் ஒரு அங்கம் என்ற உணர்வோடு, இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர்கள் இயங்கி வந்துள்ளனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு என்பதோடு சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே இருந்தும், வெளியிலும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்திய கம்யூனிச இயக்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டம் என்பதோடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் அமைந்தது. இதனை கூரிமைப்படுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களை அணிதிரட்ட அகில இந்திய அளவிலான தொழிற்சங்கம், எழுத்தாளர்கள், பண்பாட்டு போராளிகளை அணிதிரட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய நாடக மன்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர், மாதர், வாலிபர் அமைப்புகள் உருவாக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், பதிப்பகங்களும் உருவாகின. இவ்வாறு ஆங்கில காலனிய அரசை எதிர்த்தும், பின்பு இங்கு அமைந்த பெரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டு அரசை எதிர்த்தும் வலுவான வலைபின்னல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் செயல்பட்டு வந்த நூற்பாலைகள், சணல் ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், இரும்பு உருக்காலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கி ரயில்வே, தபால்-தந்தி, போக்குவரத்து ஊழியர்கள் வரை கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய எண்ணற்ற போராட்டங்களும், அதில் அவர்கள் செய்த தியாகங்களுமே தொழில் தகராறு சட்டம், 8 மணி நேர வேலை, போனஸ் போன்ற பல்வேறு உரிமைகள் சலுகைகளுக்கான சட்டங்களை இயற்ற வழிவகுத்தன.

அதைப் போன்றே கிராமப்புறங்களில் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, பண்ணை அடிமைகளை, பழங்குடிகளை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நாடெங்கும் அணிதிரட்டிப் போராடியதன் விளைவாகவே நில உச்சவரம்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம், கட்டாய இலவச உழைப்பு முறை ஒழிப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை விவசாய சங்க இயக்கத்தால் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்தது.

கடையரிலும் கடையராய், தீண்டத்தகாதவராய் சமூகத்தால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, சாணிப்பால், சவுக்கடியை ஒழித்துக் கட்டிய பெருமையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரியது. அதன் வீச்சை கீழத் தஞ்சை மாவட்டத்திலும், கேரளாவில் தொடங்கி வடகிழக்கே அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, திரிபுரா வரை நம்மால் இன்றைக்கும் காண முடியும்.

சாதிய பிளவுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கிராமப்புறங்களில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, களத்தில் இறங்கி வெற்றி கண்ட ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. தேச விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது இந்திய பொதுவுடைமை இயக்கம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்பு மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே மாநிலங்கள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் சிபாரிசின் அடிப்படையில் சென்னை, கேரளம், கர்நாடகம் என்ற மாநிலங்கள் 1956 நவம்பர் 11இல் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர்மாற்ற வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை அன்றைய நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். ஒன்றுபட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் தமிழ், மலையாளம், தெலுங்கு என அவரவர் தாய்மொழியில் பேசினர். அதுவரை ஆங்கிலமே சட்டமன்ற அலுவல் மொழியாக இருந்த நிலையில் தாய்மொழிக்காக குரல் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதும் வரலாறாகும்.

1947இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்றபிறகும் சில பகுதிகளில் காலனி ஆதிக்கம் நீடித்தது. பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய ஆட்சிப் பகுதிகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தி இன்றைய புதுச்சேரி, கோவா பகுதிகளை காலனிஆதிக்கத்திலிருந்து விடுவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். நெல்லை சதிவழக்கு தொடங்கி 16க்கும் மேற்பட்ட சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சேலம் சிறையில் துப்பாக்கிச் சூடு, கடலூர் சிறையில் துப்பாக்கிச் சூடு, சின்னியம்பாளையம் தியாகிகள், வீர வெண்மணி தியாகிகள் என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தாலும் இவர்களின் தலைமையின் நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாகவும், 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சிக் கட்டிலில் அமர மக்கள் அளித்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியாபாரம் தட்டிப் பறித்து விட்டது.

அவசரநிலை பிரகடனத்தால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காங்கிரஸ் அரசு தட்டிப் பறித்தபோதும், சாதி மோதல்களால் பட்டியலின மக்கள் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளான போதும், மதவெறி அரசியலால் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்ட போதும் தயக்கமின்றி இம்மக்களுக்குக் கேடயமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை தமிழகத்தின் நெடிய அரசியல் வரலாறு எடுத்துக் கூறும்.

இன்றைய தாராளமயப் பொருளாதார யுகத்தில் உழைக்கும் வர்க்கம் கடந்த நூறாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மதத்தின் பேரால் மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை, பிளவுபடுத்தி, வகுப்புவாத விஷத்தை ஊட்டி வருகின்ற, சுதந்திரப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை அடியொற்றிச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் விடுதலைப் போராட்ட நாட்களில் முன்னெடுக்கப்பட்ட விழுமியங்கள், நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மக்களின் இடைவிடா உழைப்பினால் பேணி வளர்க்கப்பட்ட பொதுத்துறை அமைப்புகள் ஆகியவற்றை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் அகோரப் பசிக்கு இரையாகப் பலி கொடுப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, கையளவு பணக்காரர்களின் நலனுக்காக நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்துவரும் பாஜகவின் மோடி அரசை எதிர்த்துப் போராட வேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கு உரியது. அந்த வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் நேச சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மக்கள்விரோத அரசை தூக்கியெறிய தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை வலதுசாரி சக்திகள் தங்களுக்கு சாதகமாக திரட்டும் போக்கு வலுவடைந்துள்ளது. மதவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் பிரிவினை கோஷங்களை முன்னிறுத்தி ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி திருப்பத்தை உருவாக்கி பல நாடுகளில் தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ள காலமாக இது உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வலதுசாரி சக்திகள் சாதி, மத மற்றும் பழமைவாத கருத்துக்களை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இச்சவால்களை சந்திப்பதில் இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

எனினும், இந்தியப் பொதுவுடமை இயக்கம் அதன் 100 ஆண்டு வரலாற்றில் வளர்ச்சியையும், வீழ்ச்சிகளையும் சந்தித்தே வந்துள்ளது. அத்தகைய அனுபவங்களின் வெளிச்சத்தில் இன்றைய நிலைமைகளை மதிப்பிட்டு, நாம் மேற்கொள்ள வேண்டிய பாதையை, நடைமுறை உத்திகளை சீரமைத்து முன்னேற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகின்றது.

இந்நூலை தோழர் வீ. பா. கணேசன் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 1978ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்த்து வந்தவர் என்பது மட்டுமின்றி, இடதுசாரி சிந்தனையை பரப்ப உதவும் வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்தும், வங்க மொழியிலிருந்தும் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழில் ஆற்றொழுக்கான எழுத்துத் திறனும் கொண்டவர். அவ்வகையில் “இந்திய கம்யூனிச இயக்கத்தின் ஒரு நூறாண்டுப் பயணம்” என்ற இந்த நூலையும் தெள்ளிய தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார். அவருக்கு நமது இனிய தோழமை வாழ்த்துக்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.

இந்தப் போராட்ட வரலாற்றை, கட்சியின் இளம் தலைமுறைக்கு உத்வேகம் தரும் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரித்துரைக்கிறத. ”ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி!” என்று நவம்பர் புரட்சி பற்றி இங்கு முரசறைந்த மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டும், இந்தியர்களின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டும், தமிழக கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ள இந்தத் தருணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, வர்க்கச் சுரண்டலால் புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க நினைக்கின்ற, அதற்கு முன் வருகின்ற தோழர்களும், நண்பர்களும் இதனைப் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என துணிந்து சொல்ல முடியும். அவ்வகையில் கட்சியின் இளந்தலைமுறையினரிடையே இந்த மதிப்பிற்குரிய ஆவணத்தைக் கொண்டு செல்வது நம் அனைவரது கடமையாகும்.

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் ( பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் வெளிவந்த தொடர்க்கட்டுரைகளின் தமிழாக்கம்) தமிழில்: வீ. பா. கணேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

பக்கங்கள்: 448 விலை: ரூ. 420



Leave a comment