ரோசா லக்ஸம்பர்க் 150: தீர்க்கதரிசனமும் கயமைத்தனமும்


[ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 1919 ஜனவரி 15) - செவ்வியல் நூல் அறிமுகம்: புரட்சியா? சீர்திருத்தமா?]
ச.லெனின்

மார்க்சியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே திருத்தல்வாதப் போக்குடன் பலர் மார்க்சியத்தைச் சிதைக்க முற்பட்டனர்; முற்படுகின்றனர். மார்க்சின்  போதனைகளை  ஊடறுத்துப் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டே மார்க்சியத்தின் மீது அவர்கள் தாக்குதலையும் தொடுப்பர். அத்தாக்குதலையே மார்க்சிய கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பர். ஜெர்மனியில் மார்க்சியத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை லக்ஸம்பர்க் நடத்தினார்.

 லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமாபுரட்சியா?” என்கிற நூல் அவரின் இந்த  கருத்துப்போராட்டத்தை எடுத்துரைக்கிறதுஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்தில்  எட்வர்ட்  பெர்ன்ஸ்டைன் முன்வைத்த சீர்திருத்தம்சந்தர்ப்பவாதம்திருத்தல் வாதம்  என  அறியப்பட்டவற்றை எதிர்த்த கருத்துருவே இந்நூலாகும்.

 ஜெர்மன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இத்தகைய திருத்தல்வாதப் போக்கை நியாயப்படுத்த  எங்கெல்சின் கடைசி கட்டுரையே பயன்படுத்தப்பட்டது.  மார்க்ஸ்  எழுதிய  “ஃப்ரான்சில்  வர்க்கப் போராட்டம்” என்கிற நூலின் மறுபதிப்பிற்காக எங்கெல்ஸ் தனது இறுதிக்காலத்தில் ஒரு அறிமுகவுரையை எழுதினார். இதுவே எங்கெல்சின் கடைசி கட்டுரையாக அமைந்துவிட்டது.  அக்கட்டுரையில் “தற்காப்பு அடிப்படையில்  படிப்படியாக உள்வாங்குதல் என்னும் பழைய புரட்சிகர தடுப்பரண் வியூகங்கள், இராணுவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் நவீன  நகரமைப்பு திட்டங்களினாலும் காலாவதியாகிவிட்டது. எதிர்கால எழுச்சிகள் மாறுபட்ட தன்மையில் வழிநடத்தப்பட வேண்டும். எதிரிகளின் இராணுவ சக்திக்கு எதிராக மக்கள் திரளின் சக்திவாய்ந்த எதிர்த் தாக்குதலாக அது முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இக்கட்டுரை வெளியிடப்படவிருந்த நேரத்தில்தான் ‘புரட்சிகர சூழ்ச்சிகளுக்கு எதிரான ஒரு மசோதா முன் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே ஜெர்மனியின் பிற்போக்கு அராஜக ஆட்சி கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்த்து. இக்கட்டுரை மேலும் கூடுதலான அடக்குமுறைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும் என்று அஞ்சி “எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டங்கள் தோன்றக்கூடிய (கட்டுரையின்) அனைத்து சான்றாதாரங்களையும்  துடைத்து எறிந்தனர்.” துவக்கத்தில் எங்கெல்ஸ் இதை எதிர்த்தபோதும், ஒரு நல்லெண்ணத்துடன்  ஏற்றுக்கொண்டதாக பால் ஃப்ராலிச் பதிவு செய்கிறார்.  ஜெர்மனியில்  கம்யூனிஸ்ட்  இயக்கத்தில் திருத்தல்வாதத்தை தீவிரமாக முன்வைத்த எட்வர்ட்  பெர்ன்ஸ்டைன்  எங்கெல்சின்  இறுதிக்காலத்தில் அவரோடு மிக நெருங்கிய தொடர்பைப் பராமரித்து வந்தார். அதைக் கருத்து ரீதியான உடன்பாடாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை.  ஆனால்,  எங்கெல்சின்  மறைவுக்குப் பிறகு அதையே திருத்தல் வாதத்தை  உரிமையோடு  முன்வைப்பதற்கான  பலமாக  பெர்ன்ஸ்டைன் பயன்படுத்தவும் செய்தார். எங்கெல்சின் அக்கட்டுரையை அவரின் இறுதி விருப்ப ஆவணம் (Testament) என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தினர்.

“மார்க்சின் இறப்புக்கு பின்னர் சர்வதேச  சோஷலிசத்தின்  அறிவுரையாளராகவும்  பொறாமைப்படக் கூடிய வகையில் மார்க்சியத்தின் பாதுகாவலராகவும்  எங்கெல்ஸ்  திகழ்ந்தார்.  அவரது இறப்பால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் (திருத்தல் வாதம்)  முன்னேறுவதற்கு இருந்த ஒரே தடையும் நீங்கியது.” உலகெங்கும் மார்க்சிய இயக்கங்களுக்குள் பலவேறு காலகட்டங்களில் இப்படியான திருத்தல் வாத போக்குகள் தலைதூக்குவதும் இயக்கத்திற்குள் குறிப்பிட்ட காலம் அது ஆதிக்கம் செலுத்துவதும் நிகழ்ந்துள்ளது. “ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவர்களின் வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடும்.  பின்பு புனித திருப்பெயர்களாக்கும். அவர்களின் தத்துவத்தின் புரட்சி முனையை  மழுங்கடித்துக் கொச்சைப்படுத்தும்” என்று “அரசும் புரட்சியும்” நூலில் லெனின் குறிப்பிடுகிறார்.  ஆனால் இதுபோன்ற முயற்சிகள், உண்மைகளையும் இயக்கவியல் அணுகுமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு செயலாற்றிய மார்க்சியர்களால் வீழ்த்தப்பட்டன. ஜெர்மனியில் அத்தகைய பணியை ரோசா லக்ஸம்பர்க் செய்தார்.

எங்கெல்சின் அக்கட்டுரையான “இறுதி விருப்ப ஆணையின்”  உள்ளடக்கத்தை  ரோசா  லக்ஸம்பர்க் மறுத்தார். அது எங்கெல்சின் கருத்து என்பதையும் அவர் நிராகரித்தார்.  ரியாஜனோவ் என்பவர் அக்கட்டுரையின்  எங்கெல்சுடைய  சொந்த  கையெழுத்துப்  பிரதியை  1924 ஆம் ஆண்டு வெளிக்கொண்டுவந்து அதை பதிப்பித்த பிறகே இதில் தெளிவு ஏற்பட்டது.  இது எங்கெல்சை முன்வைத்து திருத்தல் வாதிகள் செய்த மோசமான செயல்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சீர்திருத்த வாதம்

உற்பத்தி கருவிகளை ஒரு ஒற்றை வரலாற்று நடவடிக்கையின் (புரட்சியின்) மூலம் நிகழ்த்த முடியாது என்று சீர்திருத்தவாதிகள் கூறுகின்றனர். சட்டத்தின் உதவியால் படிப்படியாக சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம். மெதுவாக முன்னேறினாலும் அதன் மூலம்  சோஷலிசத்தை  அடைந்துவிடலாம் என்றனர். சீர்திருத்தங்களைத் தொடர் சங்கிலிபோல் வலியுறுத்தி  புரட்சியை  தேவையற்ற ஒன்றாகச் சித்தரித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு இப்படியானதொரு போக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவியதை நாம் அறிவோம்.

ரோசா லக்ஸம்பர்க்கோ சீர்திருத்தத்தின் தேவையையும் புரட்சியின் அவசியத்தையும் உணர்ந்து செயலாற்றினார். “சீர்திருத்தமும் புரட்சியும் சமூக முன்னேற்றத்தை அடைவதற்கான இரண்டு உணவு வகைகள் அல்ல. சமூக புரட்சியும் சட்ட சீர்திருத்தமும் காலத்தால் வேறு வேறானது என்பதோடு  அடிப்படையில் வெவ்வேறு கூறுகளை கொண்டவை” சீர்திருத்தங்கள் என்பது இருக்கும் சுரண்டல் அமைப்பிற்குள்ளாகவே சிற்சில மாற்றங்களோடு திருப்தி கொள்கிறது.  புரட்சியோ சமூகத்தை வரலாற்றின் ஒரு நிலையிலிருந்து முற்றாக வேறொரு நிலைக்கு மாற்றுவதாகும்.   

கூலி உயர்வு மற்றும் சில உரிமைகளைப் பெற்று தங்களது வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான தொழிற்சங்க போராட்டங்களும் சமூக  சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற போராட்டங்களும் ஜனநாயகமும் சுதந்திரமும் பாட்டாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டிய அரசியல் அதிகாரம் எனும் இறுதி லட்சியத்தை நோக்கிச் செயல்படாமல் போனால் அவை  சோஷலிச  தன்மையை பெறவே முடியாது என்கிறார் ரோசா.

சமூக ஜனநாயகத்தின் இறுதி லட்சியமான சமூக மாற்றத்தைப் புரட்சியின் மூலம்  அடைவதைக்  கைவிடும்படியும் சமூக சீர்திருத்தத்தையே வர்க்க போராட்டத்தின் வழிமுறையாக சமூக  சீர்திருத்தவாதிகள் கூறியதை லக்ஸம்பர்க் சாடினார். சமூக ஜனநாயகம் என்பது சீர்திருத்தங்களுக்கு எதிரானதல்ல. ஆனால் நமது இறுதி இலக்கான புரட்சிகர சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை நிச்சயம் சீர்திருத்தங்களுக்குச் சமமாக பார்க்க முடியாது என்றார் லக்ஸம்பர்க்.

புரட்சியின் சம்மட்டி அடி

வளர்ந்து வரும் முதலாளித்துவ பொருளாதார அராஜகமும் மேன்மேலும்  சமூக மயமாக்கப்பட்டு வரும் உற்பத்தி நடைமுறைகளும் அதிகரித்துவரும் பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபன மயமாக்கல் மற்றும் உணர்வு நிலைகளுமே புரட்சிக்கான செயல் துடிப்புள்ள காரணிகளாகும். ஆனால் இவற்றிலிருந்து பெர்ன்ஸ்டெயின் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் விலகிச்செல்வதாக லிக்ஸம்பர்க் விமர்சிக்கிறார். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை மட்டும் நிராகரிக்கவில்லை. மாறாக முதலாளித்துவ வீழ்ச்சியின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர் என்கிறார்.

அரசு குறித்த மார்க்ஸ் எங்கெல்சின் தீர்க்கமான நிலைபாடுகளுக்கு எதிரானதாகவே சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் அமைந்திருந்தன. முதலாளித்துவம் தனது  சுரண்டலைத்  தக்கவைத்துக் கொள்ளவே அரசை முன்னிறுத்துகிறது. “ வர்க்க பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருப்பதை நிரூபிக்கும் விதமாகவே அரசு உள்ளது.  ஒரு  வர்க்கத்தைப்  பிறிதொரு வர்க்கம் ஒடுக்கி, அதன் மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் உறுப்பே அரசு” என்று மார்க்ஸ் கூறியதற்கு எதிராகவே சீர்திருத்தவாதிகளின் நிலை இருந்தது.

முதலாளித்துவ அரசுகள் செய்யும் சிற்சில சீர்திருத்தங்களை தொழிலாளி வர்க்க அரசியல் பார்வையோடு அவர்கள் பார்க்க தவறினர். அரசின் தலையீடும் சில சட்ட பாதுகாப்புகளும் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்ல. மாறாக அவை சுரண்டல் மீதான சாதாரண கட்டுப்பாடு மட்டுமே என்றார் ரோசா. எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போதைய அரசானது ஆளும் வர்க்கத்தின் அமைப்பாகும். அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிக்குச் சாதகமான பணிகளை மேற்கொள்கிறது என்று லக்ஸம்பர்க் கூறும் வரிகள், அப்படியே முதலாளித்துவத்தின் நலன்களுக்காக இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதையும் தொழிலாளர் நலச்சட்டங்கள்  உருவாக்கப்பட்டதையும் கண்முன் கொண்டுவருகிறது. இந்த ஒத்திசைவும் முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைதான் தாக்குப் பிடிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மட்டத்தை எட்டியதும் ஒரு வர்க்கம் என்கிற வகையில் முதலாளித்துவம் தனது வர்க்க நலனை  முன்வைத்துச்  செய்யும் அடுத்தகட்ட வேலைகள் மோதல்களை உருவாக்குகிறது என்று லக்ஸம்பர்க் விவரிப்பது இன்றைய பொதுத்துறை விற்பனை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் சீர்குலைக்கப்படுவது ஆகியவற்றுடன் பொருந்திப்போவதைப் பார்க்க முடிகிறது.

 இருக்கும் முதலாளித்துவ அமைப்பின் செயல்பாட்டை மேலும் ஜனநாயகப்படுத்தி படிப்படியாக  சோஷலிசத்தை எட்டிவிடலாம் என்று சீர்திருத்தவாதிகள் கூறுவதை, முதலாளித்துவ அரசின் மோசமான வளர்ச்சிப்போக்குகள் அப்பட்டமாகக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இவர்களின் நம்பிக்கை என்பது கடல்கள் அனைத்தையும் எலுமிச்சை சாறாக ஆக்குகின்ற அருமையான சிந்தனைதான். ஆனால் முதலாளித்துவத்தின் கசப்பான கடலை சமூக சீர்திருத்தம் எனும் எலுமிச்சை சாறை ஊற்றி இனிப்பான சோஷலிசமாக மாற்றும் சீர்திருத்தவாதிகளின் முன்மொழிவு என்பது கற்பனை நயமிக்க சிந்தனை மட்டுமே. முதலாளித்துவ உறவுகள் சமூகத்தில் சீராக உயர்ந்துவரும் ஒரு சுவரை  எழுப்பிவிட்டது. “புரட்சியின் சம்மட்டி அடிதான், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன்  மூலம்தான்  அந்தச்  சுவரை  தகர்த்தெறிய முடியும்” என்றார் லக்ஸம்பர்க்.

 போராட்டங்களே அனுபவங்கள்

ஜனநாயகத்தின் கோவில் என்று வர்ணிக்கப்பட்டாலும் நாடாளுமன்றம் என்பது  சுரண்டலைப்  பாதுகாக்கும் ஒரு வடிவமாகவே நிலைத்த நிற்கிறது. “ஜனநாயகம், தன் வர்க்க  குணாம்சத்தை  மறுதலித்து மக்களின் உண்மையான நலன்களுக்கான ஒரு சாதனமாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் போக்கைக் காட்டும்போது முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசு பிரதிநிதிகளும் அந்த ஜனநாயக வடிவங்களை பலியிட்டு விடுகின்றனர்”  என்று  லக்ஸம்பர்க்  குறிப்பிடுகிறார். கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசை நேருவின் காங்கிரஸ் அரசு கலைத்தது; இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தது; மோடியின் தற்போதைய ஜனநாயக விரோத போக்குகள் ஆகியவை லக்ஸம்பர்க்கின் வார்த்தைகளில் உள்ள உண்மைத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

தொழிற்சங்கப் போராட்டங்களும் நாடாளுமன்ற முறையும்  ஆட்சியதிகாரத்தைக்  கைப்பற்றுவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அது சாத்தியமற்றதும் பயனற்றதுமாகும். தொழிற்சங்க மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் சோஷலிச இயக்கத்திற்கு மிக முக்கியமானதே. இவை சோஷலிசத்தை எட்டுவதற்கான அகக் காரணியை உருவாக்க உதவுகிறது. ஆனால் தொழிற்சங்க மற்றும் நாடாளுமன்ற செயல்பாடு என்பது உடனடி பலன்களுக்கான செயல்வடிவம் மட்டுமே. உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வில் ஒரு முழுமையான மாற்றத்தைக் காண, அனைத்துவிதமான அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் கைப்பற்றுவது தவிர்க்க இயலாதது என்கிற புரிதலை நாடாளுமன்ற மற்றும்  தொழிற்சங்கப்  போராட்டங்கள் வழங்கும். அத்தகைய புரிதலை உருவாக்கும் வகையிலேயே நமது பணி அவற்றில் அமையவேண்டும் என்கிறார் ரோசா. 

பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை  கைப்பற்றுவதற்கான  அவசியத்தைப்  பற்றி  மார்க்சுக்கோ எங்கெல்சுக்கோ எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. முதலாளித்துவ சமூகத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறுவதற்கான கருவியாக  நாடாளுமன்றத்தை  சீர்திருத்தவாதிகள் பிரகடனப்படுத்துவது அவர்களின் தனிச்சுதந்திரமே அன்றி வேறில்லை  எனறார் லக்ஸம்பர்க்.

லக்ஸம்பர்க் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் அல்ல. சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பது எதிர்வரும் புரட்சிக்கு தொழிலாளி வர்க்கத்தினரை தயார்ப்படுத்தும். அடிமைத் தளையிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்கு பயிற்றுவிக்கும். அவர்களை ஒருங்கிணைக்கும் சாதனமாக அது இருக்கும். மேலும்  கூலி அடிமைத் தனத்திலிருந்து முழுமையான விடுதலையடைய வேண்டுமெனில், முதலாளித்துவத்தை முற்றாகத் தூக்கி எறிவதால் மட்டுமே சாத்தியம் என்பதை நடைமுறை அனுபவம் மூலமாக இப்போராட்டங்கள் மக்களுக்கு உணர்த்தும் என்ற புரிதலையே லக்ஸம்பர்க் வலியுறுத்தினார்.

 அவர்கள் “பாதி தீர்க்கதரிசிகளாகவும், பாதி கயவர்களாகவும் இருந்தனர்” என்கிற மார்க்சின் ஒரு வரியின் மூலமே சீர்திருத்தவாதிகளை லக்ஸம்பர்க் குறிப்பிடுகிறார். கூலி உயர்வுக்கான தொழிற்சங்கத்தின் போராட்டம் சுரண்டலை ஒழிப்பதற்கான போராட்டம் அல்ல. மாறாக அது சுரண்டலின் அளவை குறைப்பதற்கான போராட்டமே என்றார் மார்க்ஸ். ஆனால் அது சுரண்டலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் அணிதிரள்வதற்கும் உணர்வு  பெறுவதற்கும்  வழிசெய்கிறது. அதுபோலவே, சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பது  சோஷலிசத்திற்கான  போராட்டத்திற்கு உழைக்கும் மக்களை தயார்ப்படுத்தும் ஒரு வழிமுறைதானே தவிர,  வர்க்கப்  போராட்டத்திற்கான மாற்றாக அதை கைக்கொள்ள முடியாது என்பதை மிகத்தெளிவாக நிறுவுகிறார் லக்ஸம்பர்க்.

உதவிய நூல்கள்:
 ரோசா லக்ஸம்பர்க்: வரலாறும் கட்டுரைகளும், (தமிழில் – மிலிட்டரி பொன்னுசாமி)  பாரதி புத்தகாலயம், சென்னை, 2014.
 ரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும், பால் ஃப்ராலிச், (தமிழில் – கொற்றவை)  சிந்தன் புக்ஸ், சென்னை, 2018. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.