சோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்


என். குணசேகரன்

அந்தோனியோ கிராம்ஷி மார்க்சியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த மார்க்சிய சிந்தனையாளர். மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்”எனக் குறிப்பிடுகிறார்.

கிராம்ஷியின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது சிந்தனை உருப்பெற்ற சூழலை அறிவது அவசியம். 1917-ல் ரஷியப் புரட்சிக்குப் பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலியில் புரட்சி வருவதற்கான சூழல் இருந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் சமூகப் புரட்சிக்கு சாதகமாக இருந்தன. ஆனால் புரட்சிகர எழுச்சி எதுவும் ஏற்படவில்லை; மாறாக, முசோலினி தலைமையில் பாசிசம்தான் அதிகாரத்திற்கு வந்தது.

இது இத்தாலிய மார்க்சியர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரண்டு கேள்விகளுக்கு விடை தேட வேண்டியிருந்தது. ஒன்று, ரஷியப் புரட்சி ஏன் இதர நாடுகளுக்கு பரவவில்லை? மற்றொன்று, ரஷிய வழிமுறை பொருந்தவில்லை என்றால், இதர நாடுகளுக்கு ஏற்ற வகையில் சோசலிச மாற்றத்தை கொண்டுவர, எப்படிப்பட்ட மாற்று உத்திகளைக் கையாள்வது? இந்த தத்துவார்த்தத் தேடலில்தான் கிராம்ஷியின் புதிய சிந்தனை உருவானது.

ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதோடு நின்று விடுவதில்லை; மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த கருத்துக்கள், சிந்தனைமுறை அனைத்திலும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இடையறாது முயற்சிக்கின்றனர். இது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ள கிராம்ஷியின் , “கருத்து மேலாண்மை” (Hegemony) ”குடிமைச் சமூகம்” ”பொதுப்புத்தி” போன்ற கருத்தாக்கங்கள் உதவுகின்றன.

கருத்துரீதியாக முதலாளித்துவ மேலாதிக்கம் மக்களின் பொருளியல், கருத்தியல் என இரண்டு வாழ்நிலைகளிலும் நீடிப்பதோடு, அதனை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளும் இடையறாது நடைபெறுகின்றன. இதற்கு அரசு முக்கிய கருவியாகவும்,ஆயுதமாகவும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு பயன்படுகிறது.

அரசு குறித்து கிராம்ஷி

அரசு செயல்படும் விதம், அதன் கட்டமைப்பு, ஆட்சி நடைபெறும் தன்மை, அரசியல் இயக்கங்களின் தன்மைகளும், செயல்பாடுகளும் என பல வகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார் கிராம்ஷி. இதன் விளைவாக, மார்க்சிய அரசியல் தத்துவத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் புதிய கருத்துக்கள் ,சோசலிசத்தை வென்றடைவதற்கான புதிய உத்திகள் கொண்ட கிராம்ஷியின் சிந்தனை உருவானது.

அரசு இரண்டு அங்கங்கள் கொண்டது. வன்முறை வழியில் ஒடுக்கும் அரசு நிறுவனங்களாக காவல்துறை, ராணுவம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. இதர நிர்வாகப் பிரிவுகள் அனைத்தும் நேரடி வன்முறை இல்லாமல் மறைமுகமாக ஒடுக்கும் நிறுவனங்களாக செயல்படுபவை. அரசின் இந்த இரண்டு அங்கங்களுமே முதலாளித்துவ மேலாதிக்கத்தை பாதுகாக்கின்றன.

இவை அல்லாமல் மக்களிடையே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. சாதி, மத நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், மக்கள் அமைப்புக்கள் என பல செயல்படுகின்றன. குடிமைச் சமூகம் எனப்படும் இந்த தளத்தில் பல சித்தாந்தக் கருத்துக்கள் இயங்குகின்றன. குடிமைச் சமூக தளத்திலும், முதலாளித்துவ சித்தாந்தம் கருத்து மேலாண்மை செலுத்துகிறது.

இதற்கு எடுத்துக்காட்டு, இன்றைய பாஜக ஆளும் மத்திய அரசு. வாழ்வாதார பறிப்பு கொள்கைகள், பெரும் கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்யும் கொள்கைகள் என்று மக்கள் நலனுக்கு விரோதமாக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் இந்து மதத்தை பாதுகாப்பது சங்கப்பரிவாரம்தான் என்ற கருத்துக்கு ஆட்பட்டு மோடி அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எதையும் விமர்சனமற்ற வகையில் பார்க்கிற மக்கள் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரத்திற்கு ஆட்படுகின்றனர்.

இவ்வாறு விமர்சனமற்ற வகையில் ஆளும் வர்க்க கருத்துக்கள் அடித்தட்டு வர்க்கங்களால் ஏற்கப்படுவது “பொதுப்புத்தி” எனகிறார் கிராம்ஷி. இந்த பொதுப்புத்தி சார்ந்த சிந்தனைகளோடு போராட்டம் நடத்த வேண்டும். உழைக்கும் மக்கள், பகுத்தறிவு அறிவியல் சார்ந்த நிலைபாடுகளுக்கு வந்தடைய வேண்டும். இது “நிலைப்பாட்டுக்கான போர்” (war of position) என்கிறார் கிராம்ஷி.

பாட்டாளி வர்க்க இயக்கம் இந்தப் போரை இடையறாது மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், முதலாளித்துவ தரப்பில் சுரண்டல் நிலைப்பாடுகளை மக்களின் “பொதுப்புத்தி”யில் பதித்திடும் போர் இடையறாது நடக்கிறது. குடிமைச் சமூகத்தில் கல்வி நிலையம், 24-மணிநேர காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் இதற்காக இடையறாது இயங்கி வருகின்றன.

எனவே, ஆளும் வர்க்கங்கள் வன்முறை சார்ந்த அதிகாரத்தை மட்டும் நம்பியிருப்பதில்லை. அடக்கி ஒடுக்கப்படும் மக்களிடையே “கருத்து மேலாண்மை” செலுத்தி அவர்களின் “சம்மதத்தை” நிறுவி, தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். இதுதான் இத்தாலியில் நிகழ்ந்தது. இதனால்தான் புரட்சிகர சூழலை மாற்றி நீண்ட தூரம் பின்னோக்கிய பாசிசப் பாதையில் இத்தாலியை கொண்டு செல்ல ஆளும் வர்க்கங்களால் முடிந்தது.

தற்போது அதிகாரம் செலுத்தும் முதலாளித்துவம் இந்த அதிகாரத்தை எளிதாகப் பெறவில்லை. தொடர்ச்சியான, உணர்வுப்பூர்வமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்பாடுகளால்தான் இந்த அதிகார ஆதிக்க நிலையை அது அடைந்துள்ளது.எனவே, ஒரு வர்க்கம் தனது பொருளியல்ரீதியான தேவை சார்ந்த எல்லைகளோடு நின்றிடாமல் அரசியல்ரீதியாக வர்க்கங்களிடையே மேலாண்மை பெற முயற்சிக்க வேண்டும் என்கிறார் கிராம்ஷி. இது புரட்சிகர மாற்றம் நிகழ்த்த முனையும் தொழிலாளி வர்க்கத்திற்கு முக்கியமான வழிகாட்டுதல்.


இந்திய நிலைமைகள் இத்தாலிய சூழலிலிருந்து வேறுபட்டவை. எனினும், இத்தாலியில் ஏற்பட்ட பாசிச திருப்பம் போன்று இந்தியாவிலும் 1990-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. இந்துத்துவா வடிவத்தில் ஒரு வலதுசாரி பிற்போக்குத் திருப்பம் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் எழுந்தது.

இந்திய விடுதலைப் போராட்ட சூழலில் வெகுமக்கள் இயக்கமாக உருவான காங்கிரஸ் முதல் பொதுத்தேர்தல் நடந்த காலத்திலிருந்தே, தனது மேலாதிக்கத்தை சிறிதுசிறிதாக இழக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் சர்வாதிகார நடவடிக்கைகளில் இறங்கி தனது பிடியை தக்க வைத்துக்கொள்ள முயன்றது. தனக்கு ஏற்பட்ட சரிவை நாட்டின் நிலைத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் நேர்ந்த ஆபத்தாக சித்தரித்தது. இந்திராகாந்தி மறைந்த சூழலில் தேச ஒற்றுமைக்கு ஆபத்து என பிரச்சாரம் செய்து மீண்டும் அதிகாரத்தினைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால்,அதற்குப் பிந்தைய காலங்களிலும் அதன் சரிவுப் படலம் தொடர்ந்தது.

ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு சரிவின் போதும், புரட்சிகர மாற்றம் வராமல் தடுத்திட மக்களிடையே “கருத்து மேலாண்மை” பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். இந்துத்துவா ஒரு பகுதி மக்களிடம் “கருத்து சம்மதம்” உருவாக்கியே தங்களை அதிகாரத்திற்கான போட்டியாளர்களாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையை புரிந்து கொள்ளவும் செயலாற்றிடவும் கிராம்ஷி இன்றும் தேவைப்படுகிறார்.

சித்தாந்தம்

மார்க்சியத்தில் சித்தாந்தம் பற்றிய நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மார்க்ஸ். ஏங்கெல்ஸ் எழுத்துகளில் சித்தாந்தம் பற்றி வரையறுப்புகள் விரவிக் கிடக்கின்றன. அந்த வரையறுப்புகளை லெனின் வளர்த்தெடுத்தார். மாசேதுங் உள்ளிட்டவர்கள் அதற்குப் பங்களிப்பு செய்துள்ளனர்.

முக்கியமான பங்களிப்பினை அந்தோனியா கிராம்ஷியின் எழுத்துகளில் காண முடியும். இத்தாலி நாட்டைச் சேர்ந்த ட்ராசி (Tracy) போன்றவர்களும் ரஷிய நாட்டைச் சேர்ந்த புக்காரின் போன்றவர்களும் சமூக இயக்கத்தில் சித்தாந்தத்தின் பங்கு பற்றி மதிப்பீடு செய்துள்ளனர். அதில், அவர்களுக்கு இருந்த போதாமையைச் சுட்டிக் காட்டி கிராம்ஷி தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார்.

சிக்கலான பல நிகழ்வுப் போக்குகளையும், கருத்துநிலைகளையும் சிறையில் இருந்தபோது அவர் பதிவு செய்துள்ளார். அவரது சிந்தனையின் முழுப்பரிமாணத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. அவரது சிந்தனைகளைத் தொகுத்து வெளிவந்த ‘‘சிறைக் குறிப்புகள்’’ எந்தப் புரட்சி இயக்கமும் புறக்கணிக்க இயலாத ஒரு நூலாக இன்றும் திகழ்கிறது.

சித்தாந்தம் என்ற கருத்தாக்கத்தின் வரலாறு, வளர்ச்சி, செயல்பாடு குறித்தெல்லாம் மிக ஆழமாக ஆராய்ந்துள்ளார் கிராம்ஷி. எவ்வாறு ஒவ்வொரு கருத்தும் ஒரு சமூகத்தின் சிந்தனையில் உருவாகிறது என்கிற கேள்வி கிராம்ஷிக்கு முன்பு ஆராயப்பட்டு வந்தது. கிராம்ஷி சித்தாந்தம் என்பது ‘‘கருத்துகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு’’ (System of ideas) என்கிறார்.

சித்தாந்தக் கருத்துகள், சமூகத்தைப் போன்றே இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ஏற்பட்ட சித்தாந்த மாறுதல்களை கிராம்ஷி உன்னிப்பாக ஆராய்ந்துள்ளார்.

சித்தாந்தம் உருப்பெறுவது ஒரு நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அது ஒரு நிகழ்வுப் போக்கு. அது உருப்பெற்ற பிறகு, அதன் அரசியல் தன்மை மேலோங்குகிறது. இறுதியாக அது விமர்சனத்துக்கு ஆளாகிறது. பிரெஞ்சுப் புரட்சியில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சித்தாந்தம் என்பது சுயேச்சையாக மாறும் தன்மை கொண்டதல்ல. அது குறிப்பிட்ட வரலாற்று, அரசியல் நிகழ்வுகளோடு இணைந்தது. எனவேதான் அது மேல்கட்டுமானம் என்று மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கருதுகிறது.

ஆனால், சமூகத்தின் அடிப்படையான பொருளியல் உற்பத்தியின் நேரடி பிரதிபலிப்பே சித்தாந்தம் என்பது வறட்டுத்தனமானது. இவ்வாறு வாதிட்ட மார்க்சியர்களின் கருத்தை கிராம்ஷி ஏற்கவில்லை. சித்தாந்தம் சுயேச்சையாக இயங்குவதில்லை என்று கூறும் கிராம்ஷி, சித்தாந்தத்தின் வலுமிக்க தாக்கத்தை சரியாக வரையறுக்கின்றார்.

. ‘’..அடித்தளத்திற்கும் மேல்கட்டுமானத்திற்கும் பிணைப்பு உண்டு. மனித உடலின் தோலுக்கும், எலும்புக் கூட்டிற்கும் உள்ள பிணைப்பு போன்றது இது. ‘எலும்புக்கூடு இல்லாமல் தோல் இருந்தால்போதும்; மனிதன் எழுந்து நடக்க முடியும்’ என்று கூறுவது அபத்தமானது. அதற்காக தோல் என்பது ஒரு தோற்றம் அல்லது மாயை என்று கூறிட முடியாது….’’மனித உடல் பற்றிய இந்த எடுத்துக்காட்டை நவீன சமுதாய இயக்கத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் கிராம்ஷி.

எவ்வாறு மனித உடலில் தோலுக்கும், எலும்புக்கூட்டிற்கும் உறவு இருக்கின்றதோ, அதே போன்று … (பொருளியல்)அடிப்படைக்கும், சித்தாந்தத்திற்கும் பரஸ்பர உறவு இருக்கின்றது. மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கத்தில் தோல் எவ்வாறு பங்களிக்கிறதோ, அதேபோன்று சித்தாந்தம் சமூக இயங்குமுறைக்குப் பங்காற்றுகிறது. இரண்டும் ஒன்றாகவே இயங்குகிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

போராட்டங்களும் பொருளாதாரவாதமும்

சாதாரணமாக பல பிரச்சினைகள் எழுகிற போது மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன . தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், மாணவர்கள், வாலிபர்கள் என பல்வேறு பிரிவினர் நடத்துகிற போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தே தொடர்ந்து இப்படிப்பட்ட மக்களின் எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவை சோசலிச போராட்டங்களாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி.

மார்க்சிய இயக்கத்தில் இந்த விவாதம் முக்கியமானது. லெனின் காலத்திலேயே அன்றாட பொருளாதார பிரச்சனைகளுக்கான போராட்டங்களோடு நிறுத்திக் கொண்டால் போதுமானது என தொழிற்சங்க இயக்கங்களும் வேறு பல மக்கள் இயக்கங்களும் கருதின. பொருளாதார வாதம் என்கிற இந்த போக்கினை எதிர்த்து லெனின் ஏராளமாக எழுதியுள்ளார். அவரது வழியில் கிராம்ஷி நுணுக்கமாக ஆராய்ந்து பல கருத்தாக்கங்களை உருவாக்கி இருக்கின்றார்.

முதலாளித்துவ சமூகத்தில் இயல்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளமாக உள்ளன. ஏனெனில், முதலாளித்துவம் தனது இலாப வேட்டைக்காகவும் மூலதனக் குவியலுக்காகவும் உழைக்கும் மக்களுடைய உழைப்பைச் சுரண்டி தங்களை பலப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, போராட்டப் பாதையை தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்படுகிறது. இதனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் போராட்டங்கள் இயல்பாக, தன்னெழுச்சியாக நடப்பதற்கான அடிப்படை உள்ளது. இடையறாத போராட்டங்கள் நடைபெறவில்லை என்றாலும் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அதிருப்தியும் எதிர்ப்பும் வருகிற சூழலில் போராட்டம் என்கிற வெடிப்பு ஏற்படுகிறது.

ஆனால் சோஷலிஸ சக்திகள் இவற்றை அரசியல் போராட்டமாக, சமூக மாற்றத்திற்கான போராட்டமாகக் கொண்டு செல்லவில்லை என்றால், போராட்டங்கள் நீர்த்துப் போகும் நிலை ஏற்படும்.

பொருளாதாரவாதம் பல முகங்களைக் கொண்டது. 1902 ஆம் ஆண்டு லெனின் ரஷ்யாவில் தோன்றிய பொருளாதாரவாதத்தை எதிர்த்து கடுமையாக போராடினார். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற கொந்தளிப்பின் விளைவாக பொருளாதாரப் போராட்டங்கள் எழுகின்றன. பல போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெறுகின்றன. ஆனால், மார்க்சிய இயக்கங்களில் ஒரு பிரிவினர் இந்த போராட்டங்களை மதிப்பீடுகிறபோது ஒரு தவறு செய்கின்றனர்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி இடையறாது நிகழும் என்கிறது மார்க்சியம். ஆனால், உற்பத்தியின் பலன்கள் உற்பத்திக் கருவிகளின் உடைமையாளர்களுக்கு செல்வதும் உழைப்பைச் செலுத்தும் வர்க்கங்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி அடைவதும் முதலாளித்துவத்தில் நிகழ்கிறது. புதிய தொழில்நுட்பம் போன்ற காரணங்களால் உற்பத்தித் திறன் அதிகரித்து முதலாளிகளுக்கு மேலும் இலாபம் கூடுகிறது. ஆனால், தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுவதும் இடையறாது நடக்கின்றன. இதனால் மூலதன உரிமையாளர்களுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இயல்பாக முரண்பாடுகள் வெடிக்கின்றன. இது மேலும் கடுமையாகி தானாகவே சோசலிசம் மலரும் என சிலர் நம்பிக்கை கொள்கின்றனர்.

மார்க்சியத்தின் பெயரால் விதைக்கப்படும் இந்த நம்பிக்கையை, கிராம்ஷி இயந்திர கதியிலான தீர்மானவாதம் (machanical determinism) என்று குறிப்பிடுகிறார். கடந்த நூற்றாண்டில் இரண்டாவது அகிலம் என்று சொல்லப்படுகிற அந்த அமைப்பில் அங்கம் வகித்த பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தகைய நம்பிக்கை கொண்டு இயங்கின. பொருளாதார முரண்பாடுகள் எதிர் வருகின்ற நிலையில் பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் ஊதியம், ஊதிய உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருந்தால் போதுமானது; சோஷலிசம் தானாக மலரும் என்ற வகையில் அவர்கள் பேசி வந்தனர். முக்கியமாக , ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தனர். கிராம்ஷி பிறந்து வளர்ந்த இத்தாலியிலும் கூட, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த நோய்க்கு ஆட்பட்டு இருந்தது. லெனின் இதனை தொழிற்சங்க உணர்வு என்று குறிப்பிடுகிறார். இது போன்ற சங்க உணர்வு மட்டுமே கொண்டு போராட்டங்களை நடத்துவதால் சில சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு கிட்டலாம் . அல்லது முதலாளித்துவ அரசாங்கம் தீவிர அடக்குமுறையை ஏவிடலாம். இந்த இரண்டில் எது நடந்தாலும் சோசலிசத்திற்கான போராட்டம் முன்னேறாது.

இத்தாலி மற்றும் ஜெர்மனியின் வரலாற்று அனுபவம் என்னவென்றால் மிகப் பெருமளவுக்கு தொழிலாளி வர்க்க போராட்டங்கள் நடந்தாலும் பொருளாதார வாதம் எனும் நோய் பீடித்திருந்த காரணத்தினால் சோசலிசத்திற்கான கருத்தியல், களப்போராட்டம் நடக்கவில்லை. அதாவது வர்க்க ரீதியாக திரட்டுவதும் தொழிலாளி – விவசாயி வர்க்க கூட்டணி அமைப்பதும், கட்சியை விரிவாக கட்டுவதும், அரசியல் தத்துவார்த்த முயற்சிகளின் விளைவாக வர்க்க அணி சேர்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி புரட்சிக்கு வர்க்கங்களை தயார் செய்வதும் கைவிடப்பட்டன. இதனால், இந்த வர்க்கங்களை இன, அடையாள அடிப்படையில் திரட்டுவதற்கான கதவுகள் முசோலினிக்கு திறந்து விடப்பட்டன. பாசிஸம் குரூரமாக வளர்ந்தது.

பொருளாதார கோரிக்கைக்கான போராட்டங்களில் கோடிக்கணக்கில் மக்கள் திரண்டாலும் அரசியல் தத்துவப் பணிகள் நடக்கவில்லை என்றால் வர்க்கங்கள் திசை மாறிட வாய்ப்பு உள்ளது.பொருளாதாரவாதத்தில் மூழ்கி இருப்பது வளர்ச்சியை தடுக்கும். இது நீடித்தால் பாசிசம் தழைக்கும் ஆபத்து உள்ளது . இதற்கு ஏற்கனவே இத்தாலி, ஜெர்மனி போன்ற வரலாற்று உதாரணங்கள் உள்ளன. சமகாலத்திலும் இதனை காண்கின்றோம். விரிவான அளவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பினை உருவாக்கி, ஆளும் முதலாளித்துவ வர்க்கங்கள் உழைக்கும் மக்களோடு கொண்டுள்ள தகாத அணி சேர்க்கையை தகர்த்திட வேண்டும். புரட்சிகர அணிசேர்க்கையை வலுப்படுத்த வேண்டும். இது கிராம்ஷியின் முக்கிய போதனை. இன்றைக்கும் இது பொருத்தமான வழிகாட்டுதல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.