பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பற்றி முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து


பிரபாத் பட்நாயக்

தமிழில்: அபிநவ் சூர்யா

ஆர்.சி.இ.பி (RCEP) எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசாங்கம் வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு வாதம் எழுந்துள்ளது: “பிற நாடுகளை ஒப்பிடுகையில், ஒரு சில சரக்குகளை உற்பத்தி செய்து விற்பதில் இந்தியாவிற்கு போதிய போட்டியிடும் திறன் இல்லையென்றால், அதனால் தான் அந்த சரக்குகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர் என்றால், அப்படி போதிய திறன் இல்லாத நிலையில், அந்த சரக்குகளை நாம் ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்”? இதனுடன் தொடர்புடைய மற்றுமோர் வாதம்: “இவ்வாறு போதிய திறனற்ற உற்பத்தியாளர்களை பாதுகாப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட மலிவான சரக்குகளை வாங்கியிருக்கக் கூடிய நுகர்வோரை அரசாங்கம் வதைக்கிறது – இது அநீதி இல்லையா”?

முதல் கேள்விக்கு உடனே வெளிப்படையான பதில் உள்ளது (இரண்டாவது கேள்வியை பின்னர் காணலாம்) – பெரும்பாலும் நடைமுறையில் உலக அரசுகள் தங்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளாலும், தங்களின் நாணயமாற்று வீதம் (Exchange Value) குறை மதிப்பீடு செய்வதாலுமே இந்த “விலைவாசியில் போட்டியிடும் திறன்” வளர்கிறது. இது வெளிநாட்டு சந்தைகளை கைப்பற்ற அந்த அரசுகள் கையாளும் உத்தி (குறிப்பாக தங்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மலையளவு சலுகைகள் வழங்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள்). இங்கு பேசப்படும் ஆர்.சி.இ.பி (RCEP) ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும், உற்பத்திப் பொருட்களில் ஆதிக்கம் செலுத்தும் கிழக்கு ஆசிய நாடுகளும் இந்த சலுகைகள் வழங்கும் உத்தியை கடைபிடிக்கின்றன. ஆகையால் “விலைவாசியில் போட்டியிடும் திறன்” என்ற வாதம் சரியான கண்ணோட்டத்தை அளிப்பதல்ல ; எந்த ஒரு நாட்டின் விலைவாசியில் போட்டியிடும் திறனும், அந்நாட்டால் கடைபிடிக்கப்படும் நிதிக் கொள்கைகள் மற்றும் நாணயமாற்று வீதக் கொள்கைகளோடு பின்னிப் பிணைந்ததே ஆகும் – உண்மையான திறமையின் வெளிப்பாடு அல்ல. இவ்வாறு சலுகைகள் வழங்கப்படும் அந்நிய நாடுகளின் மலிவான இறக்குமதிகளுடன் போட்டியிடச் செய்து, நம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை சர்வதேச சந்தைக்கு இறையாக்குவது அநியாயம்!

இந்த நடைமுறைக் காரணங்களைத் தாண்டி, இன்னும் அதிகமாக விவாதிக்கப்பட வேண்டிய கோட்பாட்டுக் காரணங்களும் உண்டு. இது போன்ற “தாராள வர்த்தக” வாதங்கள் அனைத்துமே மோசடி வாதங்களே: இந்த வாதங்கள் எல்லாம், அனைத்து நாட்டு பொருளாதாரங்களும் தாராள வர்த்தகத்திற்கு திறந்து விடப்பட்ட பின்னர், அந்த எல்லா பொருளாதாரங்களும், “உழைப்பு” உட்பட, தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் முழுமையாக பயனுக்கு உள்ளாக்கி, முழு வேலைவாய்ப்பு (வேலையின்மை அற்ற) சமநிலையை அடைந்து விடும் என்று அனுமானித்துக் கொள்கின்றன. வேறு மொழியில் சொன்னால், தாராள வர்த்தக வாதமானது தன் அனுமானத்தாலேயே தாராள வர்த்தகத்தால் வேலையின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து விடுகிறது. இந்த அனுமானம் எவ்வளவு போலியானது என்பது இந்தியாவின் பிரிட்டிஷ் காலனியாதிக்க கால அனுபவங்கள் காட்டுகின்றன. காலனியாதிக்க காலத்தில் தாராள வர்த்தகத்தால் இந்திய தொழில்துறை அழிக்கப்பட்டு, பெருமளவில் உண்டாக்கப்பட்ட வேலையின்மையே இன்றைய நவீனகால வறுமைக்கு மூலக் காரணம்.

உலகம் முழுமைக்கும் (அல்லது தாராள வர்த்தக உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குழுமம் முழுமைக்கும்), வளங்கள் அனைத்தும் பயனுக்கு உள்ளாக்கப்படும் வரை (முதலாளித்துவத்தில் வேலையின்மை பூரணமாக ஒழிக்க இயலாது என்பதால், “ரிசர்வ் ஆர்மி” (Reserve Army) எனப்படும் குறைந்தபட்ச வேலையில்லா பட்டாளம் அடையும் வரை), மொத்த கிராக்கியை மேல்நோக்கித் தள்ள அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு இருந்தால், வேலையின்மை இல்லாமல் இருக்கும் (இந்த குறைந்தபட்ச அளவைத் தவிர). ஆனால் அவ்வாறு கிராக்கி குறைபாட்டை தடுக்க அதிகாரம் படைத்த அமைப்பு ஏதும் இல்லை. ஆகையால் (குறைந்தபட்ச அளவையும் தாண்டி) ஓரளவு வேலையின்மை கண்டிப்பாக எப்போதும் இருக்கும். தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த வேலையின்மை பளுவை, ஒரு நாட்டிலிருந்து மாற்றி வேறொரு நாட்டின் முதுகில் சுமத்துவதைத் தான் செய்கின்றன.

நிலவும் நாணயமாற்று வீதம் மற்றும் கூலி அளவில், நாடுகளிடையே விளங்கும் “விலைவாசியில் போட்டியிடும் திறனில்” இருக்கும் வேறுபாடு என்பது உண்மையாகவே நாடுகளின் இடையே விளங்கும் “உழைப்பின் உற்பத்தித் திறனில்” உள்ள வேறுபாட்டின் வெளிப்பாடு மட்டுமே என்று அனுமானித்துக் கொண்டால் கூட, அதாவது சலுகைகள் மூலம் விலை குறைப்பு இல்லை என அனுமானித்துக் கொண்டால் கூட, தாராள வர்த்தகம் உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக உள்ள நாட்டில் பல உழைப்பாளர்களை வேலையிலிருந்து தூக்கி எரியும் என்று தர்க்க ரீதியாகவே நமக்கு விளங்குகிறது.

இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன: உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் நாடு, அதன் போட்டியிடும் திறன் போதுமான அளவு அதிகரிக்கும் வரை தன் நாணயமாற்று வீதத்தை குறைத்துக் கொண்டு, வேலையின்மையை ஒழித்துக் கொள்ளலாமே? நாணயமாற்று வீதக் குறைப்பு என்பது உண்மைக் கூலியின் அளவைக் குறைக்கும் என்பதால், இந்த வாதம் கூற வருவது என்னவென்றால், ஒரு நாடு அதீத வேலையின்மையில் மூழ்காமல் தவிர்க்க, அந்நாட்டின் போட்டியிடும் திறன் போதுமான அளவு உயரும் வரை அதன் கூலி அளவு குறைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான்.

ஆனால் இது தவறான சிந்தனை: அந்நாட்டில் குறையும் கூலியாளவு, அனைத்து நாடுகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், மொத்த கிராக்கி அளவை உயர்த்தப் போவதில்லை. ஆகையால் நாணயமாற்று வீதக் குறைப்பை கையாளும் ஒரு நாடு, அடிப்படையில் வேறொரு இடத்தில் வேலையின்மையை அதிகரிப்பதன் மூலமே தன் உள்நாட்டு வேலையின்மையை குறைக்க முடியும் – அதாவது வேலையின்மையை “ஏற்றுமதி” செய்தல். இப்படிப்பட்ட “ஏற்றுமதி”, வேலையின்மையை “இறக்குமதி” செய்யும் நாட்டிடமிருந்து பதிலடியை எதிர்கொள்ளும் – அந்த நாடும் வேலையின்மை அதிகரிப்பதை தடுக்க தன் நாணயமாற்று வீதத்தை குறைத்து கூலியை குறைத்துக்கொள்ளும். இது ஒவ்வொரு நாடும் போட்டிபோட்டுக் கொண்டு தன் கூலியளவை குறைத்துக்கொண்டு, கூலியை பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு “நாணயமாற்று வீதப் போர்” உருவாக்கும். ஆகையால் இது தாராள வர்த்தகத்தால் ஏற்படும் வேலையின்மைக்கு தீர்வை அளிக்கும் முறை இல்லை.

மேலும், நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், நாணயமாற்று வீதக் குறைப்போ (தாராள வர்த்தகம் ஏற்படுத்தும் வேலையின்மையை சமாளிக்க அரசாங்கம் இம்முறையை கையாள எதிர்பார்க்கப்படும்), அல்ல நாணயமாற்று வீதக் குறைப்பின் எதிர்பார்ப்பு கூட நிதி மூலதனத்தின் வெளியேற்றத்தை உருவாக்கி பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும். ஆகையால் தாராள வர்த்தகம் உருவாக்கு வேலையின்மையை சமாளிக்க நாணயமாற்று வீதக் குறைப்பு உதவாது.

ஆனால் இங்கு இரண்டாவது கேள்வியும் எழுகிறது: “அதிக செலவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை தாராள வர்த்தகம் கொண்டு வெளியேற்றுவதில் என்ன தவறு? அதிக செலவில் உற்பத்தி செய்யும் அவர்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் திறனை இழந்தனர்” என்று கேட்கப்படக் கூடும். இதற்கான விடை எளிமையானது: அவ்வாறு சில தொழில்கள் மூடப்படுவதால் வெளியேறுவோர் வேறு ஏதேனும் தொழில்களில் உள்வாங்கப்படுவர் என்றால், அப்படிப்பட்ட வெளியேற்றம் கவலையளிக்காது; ஆனால் அப்படிப்பட்ட உள்வாங்கல் நிகழாது என்பதால் வேலையின்மையை அதிகரிக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதை எந்த வாதத்தாலும் நியாயப்படுத்த முடியாது. ஆகையால், ஒரு நாடு அதன் வேலைவாய்ப்பை கணக்கில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்தில் சில கெடுபிடிகள் விதிக்க வேண்டும்; அவ்வாறு கெடுபிடி விதிக்க வேண்டுமென உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கோருவது முற்றிலும் நியாயமானதே!

இப்படி நாம் வாதிடுவது “செயல்திறன்” (Efficiency) வாதத்திற்கு எதிரானது போல் தோன்றலாம், அதாவது எங்கு மிகச் சிறந்த செயல்திறனுடன் உற்பத்தி நடக்குமோ, அங்கு தான் உற்பத்தி நடக்க வேண்டும் என்ற வாதம். ஆனால் “செயல்திறன்” வாதம் குறிப்பிட்ட நிலையில் மட்டுமே செல்லுபடியாகும்: வளங்கள் முழுமையாக பயனுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், ஒரு நாடு ஒரு சில பொருட்களின் உற்பத்தியை கைவிட்டு வேறு சில பொருட்களின் உற்பத்தியில் சிறப்பிப்பதன் மூலம், வர்த்தகத்தால் பயனடைய வேண்டும். அதாவது, தாராள வர்த்தகம் துவங்குவதற்கு முன் இருந்ததை விட அதிகமான பொருட்களின் திரளை நுகர முடியும் என்றால் மட்டுமே அவ்வாறு கைவிடுதல்-சிறப்பித்தல் முறையை கையாள வேண்டும். ஆகையால், தாராள வர்த்தகத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் “செயல்திறன்” வாதம் வளங்களின் முழு பயன்பாட்டினை அனுமானித்துக் கொள்கிறது. இது நடக்காத பொழுது, “செயல்திறன்” வாதத்தை முன்வைத்து பலதரப்பட்ட தொழில்களையும் முடக்குவது அறிவின்மையே ஆகும்!

ஆனால் இங்கு இன்னொரு கேள்வி வரும்: “அதிக செலவில் உற்பத்தி செய்யும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க, மலிவான இறக்குமதியை தடுத்து, நுகர்வோர்களை அதிக விலை கொடுக்க நிர்பந்திப்பது நியாயமா”? இந்த வாதம் நியாயமானது போல் தோன்றினாலும், இது உற்பத்தியாளர்கள்-நுகர்வோர் இடையே ஒரு தவறான பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் ஒரு வாதம் ஆகும்.

அது முன்வைப்பது என்னவென்றால், மலிவான இறக்குமதியால் உற்பத்தியாளர்களில் ஒரு குழுவினர் (தொழிலாளர்கள் மற்றும் சிறு/குறு விவசாயிகள்) வருமானத்தை இழந்தாலும், இன்னொரு நுகர்வோர் குழுவினர் உள்ளனர், அவர்கள் இந்த மலிவான இறக்குமதியால் மேன்மையடைவர் என்கிறது. வேறு மொழியில் சொன்னால், தாராள வர்த்தகத்தால் உற்பத்தியாளர்களின் வருமானம் குறைந்தாலும், அது நுகர்வோரின் வருமானத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இந்த வாதம் கருதுகிறது.

இது அபத்தமான வாதம். உற்பத்தியாளர்களே நுகர்வோரும் ஆவர். அதையும் தாண்டி, வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களைத் தவிர, இதர நுகர்வோரின் வருமானமும் குறையும். இது முதலில் ஒரு குழு உற்பத்தியாளர்கள் வெளியேற்றப்படுவதன் பொருளாதார தொடர் நிகழ்வுகளின் விளைவு. காலனிய இந்தியாவின் எடுத்துக்காட்டு இதை தெளிவுபடுத்தும்.

பிரிட்டனில் ஆலைகளில் எந்திரங்களால் உற்பத்தியான பொருட்களால் இந்திய கைவினைத் தொழில்கள் அழிந்து கொடுமையான வறுமை கூடினாலும், இது முதலில் சிறு விவசாயிகள் புசிக்க மலிவான இறக்குமதிப் பொருட்கள் கொண்டுவந்ததாகத் தோன்றியது. ஆனால் நாளடைவில், வேலையிழந்த கைவினைத் தொழிலாளர்கள் ஊராகச் சந்தையில் வேலைத் தேடி குவியத் துவங்கியவுடன், நிஜக் கூலி குறைந்து வாடகை உயர்ந்து, மலிவான இறக்குமதியால் “பயனடைந்ததாகக்” கூறப்பட்ட சிறு/குறு விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு “Deindustrialisation” எனப்படும் உற்பத்தித் துறையின் அழிவின் விளைவு காட்டுத்தீ போல் பரவி, மொத்த உழைக்கும் வர்க்கத்தையும் பாதித்தது. இந்த காலனிய அரசு ஏற்படித்திய அழிவின் பயனாளிகள் பெரும்பாலும் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட, பிரிட்டிஷ் அரசின் ஏவல் ஆட்களாக திகழ்ந்த மிகச்சிறிய “நிலப்பிரபு” வர்க்கமாக மட்டுமே இருந்தனர்!

ஆகையால், வேலையின்மையை பெருக்கி, சிறு/குறு விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எந்தச் சூழலிலும் நியாயப்படுத்த முடியாது; ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசு வெளியேற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே!

இன்று நாட்டில் அறிவுசார் விவாதக் களத்தில் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. அதனால் வேலையின்மையை பூரணமாக ஒழிப்பது சாத்தியமற்ற கனவாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசியலிச நாடுகளில் வேலையின்மை முழுதாக ஒழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த பொருளாதாரங்களில் வேலையாட்களுக்கான பஞ்சம் இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள், தாங்கள் உற்பத்தி செய்வதை தாங்களே நுகர்ந்தும் முதலீடும் செய்தால், வேலையின்மை உருவாக எந்தக் காரணமும் இருக்காது. குழுவில் உள்ள ஒரு சிலர், குழுவின் வேறு சிலர் உற்பத்தி செய்ததை வாங்க மறுத்து, குழுவிற்கு வெளியே உற்பத்தி ஆவதை வாங்க விரும்புவதே வேலையின்மை உருவாக முக்கியக் காரணம். அவ்வாறு ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தால் உருவாகும் என எதிர்நோக்கப்பட்ட வேலையின்மையானது தடுக்கப்பட வேண்டிய ஒன்றே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.