தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் – ‘தத்துவவாதி லெனின்’ நூல் விமர்சனம்


குரல்: தேவிபிரியா

இ. எம். எஸ். நம்பூதிரிபாட்  

தமிழில்: ச. லெனின்

தனது பல்வேறு படைப்புகள் மூலம் இந்திய தத்துவ பாரம்பரியம் என்பது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு நெருங்கிய தொடர்புடை யது என்பதை நிறுவியவர்களில்  தேவிபிரசாத் சட்டோபாத்யாயா முன்னோடியாக திகழ்கிறார். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளை போல், இந்திய தத்துவவாதிகளும் பொருள்முதல்வாதி கள் தான் என்பதை “உலகாயதம்”, “இந்திய தத்துவத்தில் நிலைத்தனவும்-அழிந்தனவும்”,  “பண்டைய இந்தியாவின் அறிவியலும்-சமூக மும்” போன்ற தனது நுல்களில் மிகத் தெளிவாக தேவிபிரசாத் நிறுவியுள்ளார். பண்டைய இந்திய சமூகத்தின் இந்த பொருள்முதல்வாத தத்துவ பாரம்பரியத்தை பிற்காலத்தில் வந்த, பார்ப்பனிய மேலாதிக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட வர்க்க சமூகம் கடுமையாகத் தாக்கியது.

மோசமான இந்த பார்ப்பனிய கலச்சாரத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட, பண்டைய இந்திய தத்துவத்தின் பொருள்முதல்வாத பாரம் பரியத்தை கையிலெடுப்பதே இந்திய இயக்க வியல், வரலாற்று பொருள்முதல்வாதிகளின் வேலை என்பதை சட்டோபாத்யாயா சுட்டிக்காட்டு கிறார். இந்தியா என்பது ஆன்மீக தத்துவத்தின் மண்; இங்கு மேற்கத்திய பொருள்முதல்வாதத் திற்கு இடமில்லை என்று கூறும் பார்ப்பனிய மேலாதிக்க சாதிய சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் தத்துவ ஆயுதமாக இந்திய தத்துவத்தின் பொருள்முதல்வாத பாரம்பரியம் விளங்குகிறது என்கிறார் அவர்.

மேற்கண்ட அம்சங்களை தனது வளமையான முந்தைய நூல்களில் விளக்கியுள்ள சட்டோ பாத்யாயா, தத்துவவாதி லெனின் என்ற தனது புத்தகத்தை லெனினுடைய தத்துவார்த்த படைப்பு களுக்கான வழிகாட்டி போலவும், அறிமுகம் போலவும் வழங்கியுள்ளார். லெனினுடைய படைப்புகளை படிக்க வாசகர்களை வழிநடத்த வும், லெனினின் தத்துவ சிந்தனைகள் குறித்த ஆரம்ப நிலை அறிமுகம் மட்டுமே உள்ளவர் களுக்கு சில விளக்கங்களையும், குறிப்புகளையும் வழங்குவதே இந்நூலின் நோக்கம் என்கிறார் அவர்.

இந்தியா தற்போது கடக்கும் கடுமையான, கவலையும், அச்சவுணர்வும் நிறைந்த சூழலில், சோசலிசமே உண்மையான விடியலுக்கான ஒரே வழி என்பதை எடுத்துரைக்க, அதை நோக்கி முன்னேற முன்நிபந்னையாக விளங்கும் சோசலி சம் குறித்த சரியான, உணர்வுபூர்வமான அறி தலை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியமாகும். அதற்கு லெனினுடைய தத்து வார்த்த பார்வையை உள்வாங்குவது கட்டாய மாகும். அதற்காகவே இந்நூல் எழுதப்பட்டதாக சட்டோபாத்யாயா கூறுகிறார்.

லெனினுடைய தத்துவார்த்த எழுத்துக்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமே இந்நூலின் நோக்கமா என்கிற கேள்வி எழலாம். “ரஷ்யாவில் முதலாளித்துவத்தின்  வளர்ச்சி”, “என்ன செய்ய வேண்டும்”, “சமூக ஜனநாயகத் தின் இரண்டு போர்த் தந்திரங்கள்”, “ஏகாதிபத் தியம்”, “அரசும் புரட்சியும்” போன்ற பிரபல மான, அதிகம் அறியப்பட்ட  நூல்களை வாசகர் களுக்கு அறிமுகப் படுத்தவேண்டிய அவசியம் இல்லை. வெற்றிகரமான சோசலிச புரட்சியின் நாயகனும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒருங்கிணைப் பாளரும், நடைமுறை புரட்சியாளருமான லெனின் தத்துவம், நடைமுறை ஆகியவற்றின் அனைத்து அம்சங்கள்  குறித்தும் பேசியுள்ளார். எனவே, திருத்தல்வாதத்திற்கு எதிராக களமாடியதில் முன்னின்ற  லெனினுடைய எந்த படைப்பையும்  இந்திய சோசலிச புரட்சியாளர்கள் எவரும்  புறக்கணித்துவிட முடியாது. 

சாதாரண வாசகர்களுக்கு தத்துவார்த்த விஷயங்கள் பேசுவதென்பது எளிதில் புரிந்து கொள்ளமுடியாதது போலவும், நடைமுறை புரட்சிகர பணிக்கு தொடர்பற்றது போலவும் நினைக்கின்றனர். ஆனால்  மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் உள்ளிட்டோருக்கு தத்துவ போராட்டம் என்பதே வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.    சட்டோபாத்யாயா தனது புத்தகத்தில்  தத்துவார்த்த புரிதலின் தாக்கத்தால் ரஷ்ய சோஷலிச கட்சியில் ஏற்பட்ட தீவிரமான தத்துவார்த்த குழப்பங்கள், இதன் விளைவாக லெனின் கட்சியில் இருந்த முக்கியமான தத்துவவாதிகள் எல்லாம் எவ்வாறு மார்க்சிய  தத்துவத்தை புறக்கணித்தும் , அதனை சிதைத்தும் வந்தனர் என்பதை விளக்குகிறார். 

 அடுத்து தங்களை  ‘மார்க்சிஸ்ட்’ என்று சொல்லிக்கொள்ளும் பல எழுத்தாளர்கள் உண்மையில் மார்க்சியத்திற்கு எதிரான பிரச் சாரத்தையே பரப்புகின்றனர். கடந்த அரை ஆண்டில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை தாக்கியே நான்கு புத்தகங்கள் வந்துள்ளன. மார்க்ஸ், எங்கெல்சின்  தத்துவங்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையிலானது என்பதை அறியாதவர்கள் அல்ல  இவர்கள். ஆனால்  அவர்களின் அரசியல் பார்வையிலிருந்து இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு விரோத மாக அணிசேர்கின்றனர். அதே நேரம் தங்களை மார்க்சியர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.  மார்க்சியத்திலிருந்து முற்றாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை துறந்து விட்டு, தங்களது பின்வாங்கலை மறைக்க பொருள்முதல்வாதத்தின் ஒரு பகுதியையோ, அந்த இடத்தில் வேறொன்றையோ வைத்து தந்திரமாக பேசி மார்க்ஸ் – எங்கெல்சின் எண்ணி லடங்கா இயக்கவியல் பொருள்முதல்வாத பகுப்பாய்வுகளை நிராகரிக்கின்றனர். இது அப்பட்டமான தத்துவ திருத்தல்வாதமாகும். மார்க்சியத்தின் அடிப்படைகளை இவர்கள் கைவிட்டதாலும், வெளிப்படையாக, அயர் வின்றி தங்களின் கருத்துக்களை முன்வைத்து தெளிவுபடுத்துவதற்கான திராணி அற்றவர்களா கவும் இருப்பதால் இந்த திருத்தல்வாதிகள் மிக மோசமான அவப்பெயர்களை பெறுகின்றனர்”   என்று லெனின் தனது ”பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும்” என்கிற புத்தகத்தில் குறிப் பிட்டுள்ளதை சட்டோபாத்யாயா குறிப்பிடுகிறார்.

லெனினின் எழுத்துக்கள் அவரது மாணவர் கள் அனைவருக்கும் தெரிந்தது போல் அவரின் எல்லா எழுத்துக்களும் அது பெரிய புத்தக மானாலும், சிறிய கட்டுரையோ, கடிதமோ எதுவானாலும்  பாட்டாளி வர்க்க தத்துவத்திற்கு எதிரான கருத்துநிலையோடு சமர் புரியும் ஆயுதமாகவே, மார்க்சிய பாட்டாளி வர்க்க தத்துவத்திற்கு வலுவான ஆதாரமாகவே அமைந் திருக்கும். “ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்கிற படைப்பு மார்க்சிய நிலைக்கு எதிரான நரோத்னிக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஸ்தாபனம் குறித்த வலது சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே “ என்ன செய்ய வேண்டும்” என்ற நூல் வந்தது.  “இரண்டு போர் தந்திரங்கள்” “அரசும் புரட்சியும்” உள்ளிட்ட படைப்புகள் அனைத்துமே திருத்தல்வாதத்திற்கு எதிராகவும், சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தின் வழியே பிறந்தது தான். ஓர் உண்மையான மார்க்சியவாதியாக, மார்க்சியத்தின் அடிப்படை கருத்துக்களை விளக் கியதோடு, புரட்சிகர இயக்கத்தின் தேவைக் கேற்பவும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ற வகையி லும் லெனின் அதை மேலும் வளர்த்தெடுத்தார்.

தங்களை மார்க்சியவாதிகள் என்று கூறிக் கொண்டே மார்க்சியத்திற்கு விரோதமான  கருத்துக்களை  முன்வைத்த காலத்தை  “கருத்து முதல்வாதத்தின்  மறுமலர்ச்சிக்  காலம்” என்கிறார் சட்டோபாத்யாயா.  பதினெட்டாம் நூற்றாண்டின்  பொருள் முதல்வாதமே ஐரோப்பிய கருத்து முதல் வாதத்தை அடித்து வீழ்த்தியது. இயக்கவியல், வரலாற்று பொருள்முதல்வாதமே முன்னேறிய, அறிவியல் ரீதியான தத்துவம் என்பது நிரூபணம் ஆனது. மார்க்சிய மூலவர்கள் சொன்னவற்றை கற்றுத் தேறாமல் திருத்தல்வாதிகளின் கருத்துக் களை மறுக்கவோ,  மார்க்சியத்தை பற்றி நின்று மீண்டும் அதை மேலும் வளர்த்தெடுக்கவோ முடியாது. இந்த புரிதலே லெனினை “பொருள்முதல் வாதமும் அனுபவவாதமும்” என்ற நூலை படைக்க வைத்தது.

இப்புத்தகம் குறித்த விரிவான ஒரு விளக்கத்தை சட்டோபாத்தியாயா வழங்கியுள்ளார்

“மார்க்சிய நிலையை விளக்கியும், திருத்தல் வாதத்திற்கு எதிராகவும் லெனின் போராடும் பொழுது மார்க்ஸ், எங்கெல்ஸ்  காலத்திற்கும் தற்போதைய சூழலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர்ந்தே இருந்தார். மார்க்சும்  எங்கெல் சும் தத்துவார்த்த களத்தில் நுழைந்த  காலம் என்பது பொருள்முதல்வாதம் தத்துவத்தை ஆட்சி செய்த காலமாகும். பொதுவாக அனை வராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்திடமும்  செல்வாக்கு பெற்ற காலமாகும். எனவே, அவர்கள் பழைய தத்துவங்களில் நேரத்தை செலவழித்ததை விட பொருள்முதல்வாதத்தை வளர்த்தெடுத்து, வரலாற் றோடு பொருத்திப்பார்த்து தத்துவத்தின் மாளி கையினுடைய  உச்சிக்கு அதை கொண்டு சேர்த் தனர் என்கிறார்  லெனின். அவர்கள் ஃபாயர் பாக்கின் தவறுகளை திருத்துவதிலும், கேலிக் குரிய வெற்று டூரிங்கின் பொருள்முதல்வாதத்தை சரிசெய்வதிலும், பச்னரின் தவறுகளை விமர்சித்த தோடு, இயக்கவியலின் அவசியத்தையும் வலி யுறுத்தினர். பொருள்முதல்வாதத்தின் உண்மைத் தன்மையை விளக்கவேண்டிய கட்டாயம் அவர்ளுக்கு எழவில்லை” என்கிறார் லெனின்.

மார்க்ஸ், எங்கெல்ஸ்  போல் லெனினுக்கும் இயக்கவியலை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்ற ஹெகல் மீது உயரிய மரியாதை  உண்டு. ஆனால்  மார்க்ஸ், எங்கெல்ஸ்  காலத்தில் கருத்து முதல்வாதத்திற்கு எதிரான போராட்டம் கிட்டத் தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. தத்துவவாதிகள் அநேகம் பேர் பொருள்முதல்வாதிகளாகி விட்ட னர். ஆனால்,  அவர்கள் இயக்கவியலை முழுமை யாக வந்தடையாமல் இருந்தனர். கருத்துமுதல் வாதத்தின்  இயக்கவியல் முறை ஹெகல் காலத் திலும், இயங்கா நிலையிலான பொருள்முதல் வாதம்  ஃபாயர்பாக் காலத்திலும் வந்தடைந்தது. இதை இயக்கவியல் பொருள்முதல்வாதமாக வெளிக் கொணர்வதற்கான பணியே மார்க்சுக்கும், எங்கெல் சுக்கும் முதன்மையான பணியாக இருந்தது. அவர்கள் ஹெகலின் கருத்துமுதல்வாதத்தை மறுக்க ஹெகலின் இயக்கவியலையே பயன்படுத் தினர். ஹெகலை நேராக நிமிர்த்தினர். மார்க்சின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், ஹெகலின் தலையை அவரின் கழுத்தில் பொருத்தினர்.

லெனினது காலம் கருத்துமுதல்வாதத்தின் மறுமலர்ச்சி காலமாக இருந்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ்  காலத்தில் மேலெழுந்து நின்ற பொருள் முதல்வாதம் இந்த கருத்துமுதல்வாத மறுமலர்ச் சியின் காரணமாக வீழ்ந்து கிடந்தது. எனவே, மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து பொருள் முதல் வாதத்தை நிலை நிறுத்துவதை காலத்தின் அவசியம் என்று லெனின் உணர்ந்தார். அதை கீழ்க்காணும் வகையில் அவரே விளங்குகிறார்.

 “ஃபாயர்பாக்கின் தத்துவம் வளர்ந்த  காலத்தில் மார்க்சும், எங்கெல்சும் வளர்ந்தனர். அவர்கள் பொருள்முதல்வாதத்தின் குண இயல்புகளை விளக்குவதில் நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, பொருள்முதல் வாதத்தை வரலாற்றோடு பொருத்தி பார்த்து வளர்த்தெடுத்தனர்.   எனவேதான் அவர் கள் பொருள்முதல்வாதத்தில் கவனம் செலுத்தி யதை விட  இயக்கவியலில் பொருள்முதல்வாதத் திலும்,  இயக்கவியல் வரலாற்று பொருள்முதல் வாதத்திலும்  கூடுதல் கவனம் செலுத்தினர். அன்று கருத்துமுதல்வாதத்திற்கு மேல் பொருள் முதல் வாதம் எழுந்து நின்றது. இன்று முதலாளித்து வத்திற்கு மாற்றாக உள்ள மார்க்சியத்தை காண பலர் முயன்றாலும் தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாதத்தின் சேறு அவர்களை  கீழே அழுத்துகிறது” என்கிறார்.

மேற்கண்ட லெனினின் விளக்கத்தின் மூலம் மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும் லெனின் உண்மை யாக இருக்கவில்லை என்ற விமர்சனத்தை சட்டோபாத்யாயா நிராகரிக்கிறார். அதோடு மார்க்ஸ், எங்கெல்ஸ்  வகுத்தளித்த அடிப்படை தத்துவத்திற்கு லெனின் உண்மையாக இருந்தார் என்கிறார். கருத்துமுதல்வாதத்தின் மறுமலர்ச்சி ஏற்பட்டதால், இயக்கவியல், வரலாற்று பொருள் முதல்வாதத்தை ஆளுமை செலுத்தும் தத்துவ மாக மீட்டுருவாக்க, கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் லெனின் இருந்தார். 

லெனின் பழைய தத்துவ வாதிகளை நாடு கிறார்; அவர்  இளம் லெனினை மறுத்தார் என்றும், மீண்டும் ஹெகலிடம் சென்றுவிட்டார் என்றும் லெனின் விமர்சிக்கப்பட்டார். இதையும், கீழ்க்கண்ட லெனினின் வார்த்தைகள் மூலம் சட்டோபாத்யாயா மறுக்கிறார்.

”ஹெகலின் இயக்கவியலிலிருந்து எவ்வாறு மார்க்சிடம் பொருள்முதல்வாதம் கருக் கொண்டதோ, அதுபோல் நம்மாலும் பயன் படுத்த முடியும்; பயன்படுத்த வேண்டும். ஹெகலின் ஆரம்பகால நூல்கள் பற்றிய அறிஞர்களின் கட்டுரைகளை இவ்விதழ் பிரசுரிக்க வேண்டும். அதில் நாம் பொருள்முதல்வாத கருத்துக்கள் கொண்டு ஊடாடி, மார்க்ஸ் எவ்வாறு இயக்க வியலை செயல்முறைப்படுத்தினார் என்பதையும், அரசியல், பொருளாதாரத்தில் இயக்கவியல் பற்றிய உதாரணங்களையும்  எடுத்தாள வேண்டும். நவீன வரலாறும், குறிப்பாக நவீன ஏகாதிபத்திய போரும், புரட்சியும் இதற்கு பல்வேறு உதாரணங்களை வழங்குகிறது.

“ஹெகலிய தத்துவத்தின் பொருள்முதல்வாத நண்பர்களின் கூட்டமைப்பு”களின் பிரதிபலிப்பை “மார்க்சிய பதாகையின் கீழ்” இதழின்  ஆசிரியர் கள் மற்றும் ஊழியர்கள் காட்ட வேண்டும் என்று கருதுகிறேன்.

பொருள்முதல்வாத தாக்கத்தினால் ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறை  நவீன இயற்கை அறிவியலாளர்களுக்கு பல பதில்களை கொடுக் கும். அது முதலாளித்துவ புறத்தோற்றத்தில் வழுக்கி, எதிர் புரட்சியினர் முகாமில் சென்று விழுவதைத் தடுக்கும்” என்கிறார் லெனின்.

விமர்சிப்பவர்கள் சொல்வதுபோல், லெனின் மீண்டும் ஹெகலின் கருத்துமுதல் வாதத்திற்கு செல்லவில்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ்  பயன்படுத் தியது போல் லெனினும் ஹெகலின் இயக்க வியலை பொருள்முதல்வாத கண்ணோட்டத் திற்கு ஆதாரமாக்குகிறார்.  “பொருள்முதல்வாத மும் அனுபவவாதமும்” என்ற நூலை லெனின் எழுத முக்கிய காரணம் கருத்துமுதல்வாதத்தின் மறுமலர்ச்சி என்று குறிப்பிடுகிறார்.  லெனினின்  “தத்துவார்த்த குறிப்பேடு” உள்ளிட்டவைகளை மேலும் விளக்கும்போது,  லெனின் ஏன்  இதில் கூடுதல் கவனம் செலுத்தினர் என்பதையும்  சட்டோபாத்யாயா கூறி இருக்க முடியும்.

வர்க்கப் போராட்டத்தின் தத்துவார்த்த பகுதியே லெனினின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும்” என்ற புத்தகமாகும். இப்புத்த கம் விரிவடைந்தால் அரசியல் பொருளாதாரம், அரசு என்பதன் தத்துவார்த்த உள்ளடக்கம், புரட்சியின் அறிவியலும் கலையும் என பலவற்றை உள்ளடக்கியதாக அமையும். இயக்கவியல் என்பது சமூக மற்றும் இயற்கை அறிவியலின் வளர்ச்சியையும், புரட்சியின் வளர்ச்சிக் கட்டத் தையும் ஆய்ந்தறியும் முறையே என்ற மார்க்சின் வார்த்தைகளை லெனின் குறிப்பிடுகிறார்.

பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், இயக்கவியல் முறையில், தத்துவத்தை அமல்படுத்தி,  ஏகாதிபத்தியம், போர், புரட்சி உள்ளிட்டவை களை லெனின் விளக்கியதே  அவருடைய  “ஏகாதிபத்தியம்”, “அரசும் புரட்சியும்” உள்ளிட்ட புத்தகங்களாகும்.

சுருக்கமாகச் சொல்வதெனில், முதலாளித்துவ உலகம் அதன் இறுதியான வரலாற்றுக் கட்டத் தில் இருக்கிறது. அந்த உலகில் இருந்தே ஒரு சோஷலிச உலகம் முகிழ்த்து வருகிறது என்ற பின்னணியில்தான் (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்; தத்துவார்த்தக் குறிப்பேடுகள் போன்ற) லெனினின் தத்துவார்த்த எழுத்துக்கள் உருவாயின. இந்த உலகக் கண் ணோட்டத்தை அகற்றி விடுவோமேயானால், லெனினின் தத்துவம் அதன் அறிவியல்பூர்வமான தன்மையை இழந்த ஒன்றாகிவிடும். இதுதான் மா சே துங்கிற்கு நிகழ்ந்தது. முரண்பாடுகள் குறித்த அவரது கொள்கை மற்றும் உலக யதார்த்தம் பற்றிய லெனினிய கருத்தோட்டத்திற்கு மாறான அவரது கருத்தோட்டம் ஆகியவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. “முரண்பாடு கள் குறித்த மாவோவின் கொள்கை” மார்க்சியத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு கொள்கை என்று கருதும் பிரிவினரையும் உள்ளடக்கிய இந்திய மார்க்சிஸ்ட்- லெனினிஸ்டுகள் லெனி னின் மகத்தான எழுத்துக்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது போலவே, லெனினியத்தைத் திரித்துக் கூறும் இந்த எதிர்மறை உதாரணத்தி லிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

One thought on “தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் – ‘தத்துவவாதி லெனின்’ நூல் விமர்சனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.