தோற்கடிக்கப்பட்ட புரட்சியின் படிப்பினைகள்


தமிழில்: பாலச்சந்திரன்

26 ஆகஸ்ட் 1849 ல், மார்க்ஸ் ஆங்கிலேய மண்ணில் காலடி வைத்தபொழுது லண்டன் மாநகரம், இருபது லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்டதாகவும்,உலகிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகின் ‘தொழிற்பட்டறை’யாகவும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. 1848 ம் ஆண்டின் வசந்த காலத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்திற்காக, சார்டிஸ்ட் இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, ஐரோப்பிய புரட்சி, இங்கிலாந்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்ததன் விளைவாக அதன் புரட்சிகர சக்தி நீண்ட காலத்திற்கு முற்றிலுமாக அணைந்து போனது.

பிரஷ்ய நாட்டின் அப்பட்டமான அடக்குமுறை ஆட்சியைப் போல அல்லாமல், இங்கிலாந்து முதலாளித்துவ உரிமை மற்றும் சுதந்திரத்துடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறைமையைக் கொண்டிருந்தது. புரட்சிகர இயக்கத்தின் மீது பிரஷ்ய அரசு அடிக்கடி நேரடியான ஒடுக்குமுறையை கையாண்டு கொண்டிருந்தது. ஆனால் இங்கிலாந்திலோ பொருளாதார அடக்குமுறை நிலவியது.ஆளும் வர்க்கத்திற்கு வேண்டப்படாதவர்கள் வாழ்வாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். சக்தி வாய்ந்ததும்,நுட்பமானதுமான இந்த ஒடுக்குமுறை இயந்திரத்தின் இயக்கத்தை கவனித்த மார்க்ஸ், பிரஷ்ய அரசின் பழங்கால முடியாட்சி அமைப்பினதை விட இந்த ஒடுக்குமுறை எவ்வளவு நுட்பமானது என்பதைக் கண்டறிந்தார்.

அதிகப்படியான பணிகள்

ஐரோப்பிய புரட்சியின் தோல்விக்கு பின்னர் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போல  இங்கிலாந்தும், அதிலும் குறிப்பாக லண்டன், புலம் பெயர்வோர்களின் புகலிட மையமானது. அதேசமயம் அல்லது சற்று பின்னர், மார்க்சைப் போலவே, கம்யூனிஸ்ட் லீகின் முக்கிய முன்ணணி உறுப்பினர்களும் வந்து சேர்ந்தனர்., புலம் பெயர்ந்த ஜெர்மன் லீகின் உறுப்பினர்களும் கூடும் இடமாக லீகின் லண்டன் கிளை விளங்கியது. சட்டபூர்வமாக இயங்கிய கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷனும் புதிய நடவடிக்கையுடன் கூட எழுந்தது.

மார்க்சை பல பணிகளின் சுமை அழுத்தியது.மற்றவர்களுடன் இணைந்து லீகிற்கு ஒரு புதிய செயலகத்தை ஏற்படுத்தினார்.ஜெர்மனியிலிருந்து வரும் அரசியல் அகதிகளுக்கு ஆதரவளிப்பதே அதன் உடனடி பணியாக இருந்தது. வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷன் கூட்டத்தில் இந்த பணியில் உதவிட ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார். கூட்டம், அதனை ஏற்று கமிட்டிக்கு தலைவராக மார்க்சை தேர்வு செய்தது. கமிட்டியில் பலரும் கடும் நெருக்கடியில் இருந்தபோதும், அவர்கள் அனைவரும் பொறுப்பு நிதியிலிருந்து அவர்களுக்காக எதுவும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர். மார்க்சை பொறுத்தவரை அது கம்யூனிச அறநெறியின் சுய வெளிப்பாட்டின் கூற்றாகும். அக்காலங்களில் அவரே கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார்.

அதே சமயத்தில், மார்க்ஸ், தொழிலாளர்-அகதிகளைக் காத்துக் கொண்டும், தலைமறைவாயிருக்கும் உழைக்கும் வர்க்க புரட்சியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அது போலவே, கம்யூனிஸ்ட் லீகின் மத்திய செயலகம், கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷன் ஆகியவற்றை பலப்படுத்துதல், ஜெர்மனியிலேயே இருந்த லீகின் உறுப்பினர்களுடன் தொடர்பை மீண்டும் உருவாக்குவது என அனைத்து பணிகளிலும் அவர் தன்னை கடுமையாக ஈடுபடுத்தி கொண்டிருந்தார். புலம் பெயர்ந்தோர் மத்தியில் இருந்த குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், அனைத்து ஜெர்மன் அகதிகளையும் தங்கள் தலைமையின் கீழ் கொண்டு வரவும், அவர்களின் சுயேச்சையான வர்க்க அமைப்பை அவர்கள் கை விடச்செய்யவும் முயன்று வந்ததால், மார்க்சின் இத்தகைய கடும் முயற்சி முக்கியமானதானது.

லீகின் மறுசீரமைப்பு:

இவ்வாறான முயற்சிகளைத் தடுக்க, மார்க்ஸ், கம்யூனிஸ்ட் லீகினை விரைவாக மறு சீரமைப்பு செய்யவும், தொழிலாளர்-அகதிகள் எதிர் கொள்ளும் வர்க்க கடமைகளை விளக்கவும் தமது முயற்சிகளை இரட்டிப்பாக்கினார்.ஜெர்மன் புரட்சி மீண்டும் வெகு விரைவில் வெடிக்கும் என அவரும், அந்த சமயத்தில் மற்றெல்லா லீகின் உறுப்பினர்களைப் போலவே எதிர்பார்த்தார்.. அவ்வாறான சமயத்தில் தொழீலாளி வர்க்கத்திற்கு என தனித்து இயங்கும் ஒரு கட்சி வேண்டும்.அதுதான் பெரும்பாலான தொழிலாளர்கள் வெறுமனே குட்டி முதலாளிகளின் பின்னே செல்வதை தடுக்கும்.

1850 ம் ஆண்டு துவக்கத்தில், கோட்பாட்டு கேள்விகளை விவாதிக்க லீகின் முன்ணணி உறுப்பினர்களை அவருடைய வீட்டிற்கு அழைக்கத் துவங்கினார். கிட்டத்தட்ட அதே சமயத்தில் பொருளாதாரம் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி அப்பொழுது ஜெர்மன் தொழிலாளர் அகதிகள் அதிகமாக இருந்த கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் எஜுகேஷனல் அசோசியேஷனில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றினார். பாடன் நகரில் கையில் ஆயுதமேந்தி எதிர் புரட்சியாளர்களை எதிர் கொண்ட இளம் மாணவ அகதியும், அதனால் சுவிட்சர்லாந்து வழியே லண்டன் ஒடி வந்தவரும், விரைவிலேயே மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சிற்கு உண்மையான மாணவர், நண்பர் தோளோடு தோள் நிற்கும் தோழருமான வில்ஹெம் லீப்னஹெட் மார்க்ஸ் செயல்படும் முறையை கீழ்காணும் வரிகளில் வர்ணிக்கிறார்.

ஒரு கருத்தை அவர் முடிந்தவரை சுருக்கமாக அறிமுகப்படுத்துவார். அதனை பின்னர் விரிவாக விளக்குவார். தொழிலாளர்கள் புரிந்து கொள்ள முடியாத சொற்றொடர்களைத் தவிர்க்க மிகுந்த அக்கறையை எப்பொழுதும் மேற்கொள்வார். பின்னர் கேள்விகள் கேட்க சொல்வார். ஒன்றும் கேள்விகள் வரவில்லை எனினும், கவனித்தவர்களை சோதிப்பார். எந்த தவறான புரிதலோ அல்லது குறைபாடோ இன்றி அத்தகைய ஆசிரியத்திறத்துடன் மிக நேர்த்தியாக அதனை செய்வார்.”

புதிய பத்திரிக்கை

லண்டனில் புலம் பெயர்ந்த வாழ்வை துவங்கிய முதல் சில மாதங்களில் புதிய பத்திரிக்கை ஒன்றை தோற்றுவிக்க மார்க்ஸ் சிறப்பு கவனம் செலுத்தினார். அப் புரட்சியிலிருந்து எதிர்கால போராட்டங்களுக்கு எத்தகைய படிப்பினை, உத்தி மற்றும் தந்திரங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்தது என்பதை அப்பத்திரிக்கையில் விளக்குவதுதான் அவரது நோக்கமாகும். உலகெங்கும் பரவியுள்ள தொழிலாளி வர்க்க புரட்சியாளர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு அத்தகைய பத்திரிக்கை அவசியமானதாகும். அதன் வெளியீட்டிற்கான பணத்தேவை, அதனைக் கொண்டு வர மிக கடினமாக இருந்தது.

தற்போது புகழ் பெற்ற பெயரான ‘நியு ரெனிஷ் செய்தித்தாள்’ என்ற பெயரில் தினசரியாக இல்லாமல்,குறிப்பிட்ட கால வெளியீடாக அரசியல் பொருளாதார ஆய்வுடன் கொண்டு வர திட்டமிடப்பட்டது. கம்யூனிஸ்ட் லீகின் பத்திரிக்கையாக, புத்தகக் கடை வாயிலாக மட்டுமில்லாமல் லீக் உறுப்பினர்கள் வாயிலாகவும் வினியோகிக்கப்பட இருந்தது. இவ்வாறாக அது லீகின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு கொண்டுவரப்பட்டது.

முடிவற்ற தயாரிப்புகளுக்கு பின்னர் ‘நியு ரெனிஷ் செய்தித்தாள்’: அரசியல்-பொருளாதார பரிசீலனை’ மார்ச் மாத துவக்கத்தில் 1850ல் 2500 பிரதிகளுடன் உதயமானது. இரண்டாவது இதழும் அதே மாதம் தொடர்ந்தது. நான்கு இதழ்கள் அந்த வருடத்திலேயே வெளியாயின.

மிக முக்கியமான முழுமையான கட்டுரைகள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் இடமிருந்து வந்தன. “பிரான்சின் 1848-50 வர்க்க போராட்டம்” என்ற அவரது கட்டுரையை அதில் வெளியிட்டார். ஏங்கல்ஸ் “ரெய்க்( ஜெர்மன் மொழியில் “அரசு/,நாடு”)  அரசியல் சாசனத்திற்கான ஜெர்மன் இயக்கம்” மற்றும் “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” என்ற கட்டுரைகளை அதில் எழுதினார். புரட்சியின் வீழ்ச்சியினால் பத்திரிக்கை கடும் நெருக்கடியை சந்தித்தது. எடுத்துக்காட்டாக,புரட்சிகர வெளியீடுகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என புத்தக விற்பனையாளர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

மிக மோசமான பின்னடைவுகளும், குருதி தோய்ந்த தோல்விகளும் கூட மக்கள் அதிலிருந்து படிப்பினையை கற்றுக் கொண்டால் ஒரு சாதகமான பக்கத்தைக் கொண்டதாக இருக்கும் என்ற பார்வையைக் கொண்டிருந்தார் மார்க்ஸ். புரட்சியின் படிப்பினைகளை ஆராய்ந்து அதனை பொதுமைப்படுத்துவதும், இரண்டு புரட்சிகர ஆண்டுகளின் அனுபவங்களை உழைக்கும் ஜனத்திரள்புரிந்து கொள்ள உதவுவதும் கம்யூனிஸ்ட் லீகின் உடனடி வேலை என எண்ணினார். இந்த பணியில் ஏங்கல்ஸுடன் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். மார்ச் மாத இறுதியில் முடிவுகளை எடுத்து லீகின் மத்திய செயற்குழுவின் முன் கொணர்ந்தனர். “மார்ச் 1850 லீக்கிற்கு மத்திய குழுவின் முடிவுகள்” என்ற அந்த ஆவணத்தை மத்திய குழு அங்கீகரித்தது. அதனை ஜெர்மனி எடுத்து சென்று அங்கு ரகசியமாக செயல்படும் கம்யூனிஸ்ட்களுக்கு கொடுக்க வேண்டும் என அக் குழுவின் பொறுப்பு மிக்க உறுப்பினரான ஹென்றி பாயர் அவர்களை நியமித்தது.

நியாயமான பெருமிதத்துடன் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களின் பேச்சின் துவக்கத்தில் புரட்சியின் வருடங்களில், லீக் இரு வழிகளில் தன்னை நிரூபித்துக் கொண்டது.என கூறினார்கள்: “……..முதலாவதாக பத்திரிக்கைகளில், தடைஅரண்களில் போர்க்களங்களில் என அதன் உறுப்பினர்கள் எல்லா இடத்திலும் உத்வேகத்தோடு இயக்கங்களில் பங்கேற்றார்கள். ஒரே உறுதி மிக்க புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் முன் வரிசையில் அவர்கள் நின்றார்கள். இயக்கத்தின் உருவாக்கத்தில் லீக் மேலும் தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டது………மிகச் சரியான ஒன்று மட்டுமே ஆனதாக மாறியது.

குறிக்கோள் நிறைவேறவில்லை.

ஆனால் புரட்சி அதன் குறிக்கோளை நிறைவேற்றவில்லை. ஜெர்மனி ஒன்றிணைக்கப்படவுமில்லை. ஜனநாயக நாடாகவும் மாறவில்லை. இத் தோல்விக்கான பொறுப்பு பெரு முதலாளிகளையே சாரும் என மார்க்ஸும், ஏங்கல்ஸும் பிரகடனப் படுத்தினார்கள்.நிலப்பிரபுத்துவ ஆட்சியை தூக்கி எறிய வெகு மக்களை அழைத்து செல்வதற்கு மாறாக, முதலாளிகள் எதிர் புரட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டனர். அதாவது அவர்களின் அப்போதைய இயல்பான நேச சக்திகளான தொழிலாளர்கள் விவசாயிகளுக்கெதிரான கூட்டில் சேர்ந்தனர். இதன் விளைவு, இறுதியில் அவர்கள் கையில் இருந்த அரசின் சுக்கானை அவர்கள் இழந்தார்கள்.

எதிர் வரும் புரட்சியில், இந்த பாத்திரம் குட்டி முதலாளிகளால் வகிக்கப்படும் என மார்க்ஸும், ஏங்க்ல்ஸும் எழுதினார்கள். எப்படி குட்டி முதலாளிகள் புரட்சியின் போதும்,குடி பெயர்ச்சியின் போதும், தொழிலாளி வர்க்கத்தை அதிகாரபூர்வ முதலாளித்துவ ஜனநாயகத்தின் தொங்குசதையாக மாற்றிட முயற்சித்தார்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.,- குட்டி முதலாளிகளும், தொழிலாளர்களும் அரசியல் ரீதியாக இணைவதை மார்க்சும் அவரது தோழர்களும் கடுமையாக எதிர்த்தனர். லீக், அதன் சக்தி அனைத்தையும் திரட்டி,  ரகசியமாக, சுயேட்சைத்தன்மையுடன் இயங்கும் பொது அமைப்பாக தொழிலாளர் கட்சியினை அமைக்க வேலை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவித்தனர். அத்தகைய கட்சி அதிகாரபூர்வமான ஜனநாயகவாதிகளுடன் இணந்து செயல்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு அப்பகுதி லீக்கும் தொழிலாளர் அமைப்புகளின் மையமாகவும்,இதயமாகவும் இருக்க வேண்டும் எனவும், அத்தகைய நிலையில், முதலாளித்துவ தாக்கம் தவிர்த்த, தொழிலாளர்களின் நிலைப்பாடும், நலன் களும் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்கள்.”

இத்தகைய தெளிவான நோக்கோடு, தொழிலாளர் நலனை ஆளும் வர்க்க நலன்களுக்கு அடி பணியச் செய்யும் அனைத்து சந்தர்ப்பவாத முயற்சிகளுக்கெதிராக ஐயத்திற்கிடமற்ற ஒரு போர் துவங்கப்பட்டது.

கட்சியின் யுத்தம்

ஜெர்மனியில் லீக் அமைப்பு மீண்டும் தன்னை பலப்படுத்திக் கொண்டதை மத்திய செயலகத்திற்கு வரும் கடிதங்களிலிருந்தும், ஜெர்மனியிலிருந்து திரும்பியிருந்த ஹென்றி பாயரிடமிருந்தும், மார்க்ஸ் அறிந்து கொண்டார். பல பெரிய நகரங்களில் பகுதி அமைப்புக்கள் திரும்பவும் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே இருந்து வரும் தொழிலாளர் அமைப்புகளிடம், உடற்பயிற்சியாளர்களிடம், விவசாயிகளிடம்,மற்றும் பகல் நேர உழைப்பாளர்களிடம், தனிக்குழுக்களும், தனிநபர்களும் தங்களின் தாக்கத்தை நிறுவுவதில் வெற்றி அடைந்தது விசேட முக்கியத்துவமாகும்.

இந்த வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில், ஏங்கல்ஸுடன் சேர்ந்து லீகிற்கான மற்றொரு உரையை மத்திய செயலகம் முன் ஜூன் மாதம் வைக்கப்பட்டது. அந்த உரை தொழிலாளர் விவசாயிகளின் சட்ட பூர்வ அமைப்புக்களின் மீது மிகவும் நெருக்கமான கவனத்தை செலுத்துமாறு ஜெர்மன் கம்யூனிஸ்ட்களுக்கு அறைகூவல் விடுத்தது. மார்க்ஸ் தாமும் தம் உடனுழைப்பவர்களும் இந்த உத்தியை அமலாக்குவதிலுள்ள தர்க்க ரீதீயான தொடர்ச்சியை1848-49 புரட்சியின் சமயத்தில் கண்டார். அது தேசீய புரட்சிகர தொழிலாளர் கட்சிக்கான போரில் மேலும் ஒரு வளர்ச்சி என்பதாகும்.

தமது மார்ச் மாத உரையில் தமது முந்தைய உரையை இன்னும் விளக்கமாகவும் ஆழமாகவும் ஆற்றினார். அதாவது எதிர்கால புரட்சியில், தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ-ஜனநாயக புரட்சியை படிப்படியாக தொழிலாள வர்க்க-சோசலிச புரட்சியாக மாற்ற வேண்டும் என்பதே. ஏனெனில் முதலாளித்துவ அமைப்பையும், தொழிலாளர்களின் கூலி அடிமை நிலையையும் தொடாமல் அப்படியே வைத்திருக்க குட்டி முதலாளிகள் அனைத்தையும் செய்வார்கள். “அனைத்து சிறிய பெரிய சொத்துடைய வர்க்கம் ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டப்படுவது வரையும்,தொழிலாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது வரையும், புரட்சியை நிரந்தரமாக ஆக்கிடுவதென்பது” தொழிலாளி வர்க்க நலனிற்கே அவசியமானது

எவ்வாறாயினும் அதற்காக தொழிலாளி வர்க்கம் தன்னை தயார் செய்து கொண்டு, அதன் அதிகார அமைப்புக்களை, அதாவது புரட்சிகர தொழிலாளர் அரசுகளை, தேவையெனில் முதலாளித்துவ அரசிற்கு பக்கம் பக்கமாகவே கூட உருவாக்கிட வேண்டும்.. அதுதான் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தொழிலாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளாகும். பல பத்தாண்டுகளுக்கு பின்னர்,மாபெரும் அக்டோபர் சோசலிச புரட்சியின் தயாரிப்புகளிலும், அமலாக்கத்திலும், ஜனநாயக புரட்சியை, சோசலிச புரட்சியாக வளர்த்தெடுக்கும் நோக்கு மேலும் 20 ம் நூற்றாணடின் நிலைமைகளுக்கு ஏற்ப லெனினால் மேலும் மேம்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பங்காற்றப் போகிறது.

( இக்கட்டுரையானது, கார்ல் மார்க்ஸ் 200 என்ற பொது தலைப்பில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியாகும் தொடர் கட்டுரையின் பகுதி. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிய லெனினிய கல்வி நிறுவனம் தயாரித்த ‘கார்ல் மார்க்ஸ் கதையும் வாழ்க்கையும்: கார்ல் மார்க்ஸ் சரிதை’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, 1983 ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய மத்திய குழு உறுப்பினர் ராம் தாஸ் தொகுத்தளித்தது. )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.