மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019


வெங்கடேஷ் ஆத்ரேயா

பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க  மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று,  நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசின் சார்பாக பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சமர்ப்பித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும்  அவற்றை செயல்படுத்த மறுப்பதும் பாஜகவிற்குப் புதிதல்ல.

இருபெரும் பிரச்சினைகள்

இன்று இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இருபெரும் பொருளாதார பிரச்சினைகள் தொடரும் தீவிர வேளாண் நெருக்கடியும் கடுமையான வேலையின்மையும் ஆகும். இவை பற்றி பட்ஜெட் என்ன சொல்லுகிறது?

 கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக செல்வாக்கு பரவலாக உள்ள சில வட இந்திய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாய சங்கம் எழுச்சிமிக்க மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்  ஒன்றிணைந்து தில்லியில் வரலாறு காணாத பேரணியை நடத்தின. ஐந்து வட மாநிலங்களில் பாஜக அரசுகள் தூக்கி எறியப்பட்டன. விவசாயிகள் முன்வைத்த இருமுக்கிய கோரிக்கைகளில் ஒன்று கடன் ரத்து, மற்றொன்று வேளாண் விளைபொருட்களுக்கு பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த சூத்திரத்தின் அடிப்படையிலான விலையில் அரசு கொள்முதல்.

 கடன் ரத்து கோரிக்கையை மத்திய அரசு பட்ஜெட் உரை முற்றிலும் புறக்கணித்து உள்ளது. விளைபொருள் கொள்முதல் விலை பற்றி முற்றிலும் தவறான தகவலை பட்ஜெட் உரை முன்வைக்கிறது. விவசாயிகள் வெளிப்படையான செலவுடன் அவர்களது உழைப்புக்கு பணமதிப்பு கணக்கிட்டு, நிலவாடகைக்கும் கணக்கிட்டு, விவசாயிகள் போட்டுள்ள முதலுக்கான வட்டியையும் கணக்கிட்டு இவற்றை கூட்டி கிடைக்கும் தொகையுடன் அதில் பாதி அளவை சேர்த்து வரும் தொகை தான் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைக்கும் கொள்முதல் விலை. இதை கொடுக்கிறோம் என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உச்சநீதி மன்றத்தில் இது இயலாது என்று அறிவித்தது பாஜக அரசு. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளின் விவசாயப் பேரெழுச்சிக்குப்பின் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில் கொள்முதல் விலை கொடுத்துவிட்டோம் என்று பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். உண்மையில் நிலவாடகை, முதலுக்கான வட்டி ஆகியவை அரசு சொல்லும் விலையில் இடம் பெறவில்லை.

இப்படி உண்மைகளை மறைத்துக்கொண்டே, இரண்டு  ஹெக்டேருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். நடப்பு ஆண்டில் இருந்தே இத்திட்டம் துவங்கும் என்றும் நடப்பு ஆண்டில் இதற்கென ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மாபெரும் வரம் என்ற பாணியில் ஆளும் கட்சி ஆசாமிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்ன? பயன்பெற தகுதியுள்ள குடும்பங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 6000 ரூபாய் என்றால் மாதம் 500 ரூ. தினசரி என்று பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு 17 ரூபாய்க்கும் குறைவு. ஐந்து உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 4 க்கும் குறைவு. இதையா விவசாயிகள் கேட்டார்கள்?

கட்டுபடியாகும் விளைபொருள் விலை, கடன் ரத்து, நிலச்சீர்திருத்தம், விவசாயத்தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்குதல், வேளாண் துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வேளாண் விரிவாக்க அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவது  என்பதையெல்லாம் ஆட்சிக்காலம் முழுவதும் புறக்கணித்து விட்டு, விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் 2 ஹெக்டேர் மற்றும் அதற்குக் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு நாளொன்றிற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 3 சொச்சம் தரும் “திட்டத்தை” விவசாயிகளுக்கு வரப்ரசாதம் என்பதுபோல் பட்ஜெட்டில்  அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.

இதுமட்டுமல்ல. இந்த சலுகை கூட நிலத்தில் பாடுபடும் அனைவருக்கும் கிடைக்காது. குத்தகை விவசாயிகளுக்கு இத்தொகை கிடையாது. நில உடமையாளருக்குத்தான். மேலும் பாசனம் பெறும் நிலம் பாசனம், இல்லாத நிலம் என்று வேறுபடுத்தாமல் 2 ஹெக்டேர் என்ற வரம்பு போடப்பட்டுள்ளது. களத்தில் நில உடமை பதிவு ஆவணங்கள் முறையாக சமகாலப்படுத்தப்படாத நிலையில், திட்டத்தின் பயன் ஓரளவு நிலபலம் உள்ள பகுதியினருக்கே கிடைக்கும். ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த பயன் தான் இருக்கும். விவசாய நெருக்கடியின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயத்தொழிலாளிகளுக்கு இத்திட்டம் எந்தவகையிலும் பயன் அளிக்காது.

ஏற்கெனவே மத்திய அரசின் திட்டத்தைவிட மேம்பட்ட பணப்பயன் அளிக்கும் திட்டங்களை தெலுங்கானா அமலாக்கி வருகிறது. ஒதிசா மாநில அரசும் தெலுங்கானா திட்டத்தைவிட பணப்பயன் குறைவு என்றாலும் மத்திய அரசைவிட அதிகமான பணப்பயன் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலாளித்துவ மாநில அரசுகளின் திட்டங்களும்  வேளாண் நெருக்கடிக்கு தீர்வுகாணும் தன்மையிலான திட்டங்கள்  அல்ல. எனினும்  மத்திய அரசின் அப்பட்டமாக அரசுபணத்தை பயன்படுத்தி தேர்தல் நெருக்கத்தில் வாக்குக்கு காசுதரும் தன்மையிலான லஞ்ச நடவடிக்கைபோன்று அவை இல்லை. 

வேலையின்மை பிரச்சினை

2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியும் பாஜகவும் மீண்டும் மீண்டும் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு ஒருகோடிக்கும் அதிகமாக புதிய பணியிடங்களை உருவாக்குவது என்பதாகும். ஆனால் நிகழ்ந்துள்ளது என்ன?

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசின் நிறுவனமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization-NSSO) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிக அதிக எண்ணிக்கையில் குடும்பங்களை அறிவியல் பூர்வ அடிப்படையில் தேர்வு செய்து  தேச அளவில் வேலையில் உள்ளவர், வேலை தேடுவோர், உழைப்பு படையில் இல்லாதவர் என்று மக்களை வகைப்படுத்தி ஆய்வு செய்துவருகிறது. இதன்படி 2011-12 முழு ஆய்வு நடந்தது. பின்னர்  2016-17இல் நடந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்தால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சேதம் வேலையின்மையை மிகக்கடுமையாக ஆக்கியிருப்பது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் மோடி அரசு அந்த ஆண்டில் ஆய்வு நடத்த அனுமதிக்கவில்லை. பின்னர் இந்த ஆய்வு 2௦17-18 ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஜூலை 2018 முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எதிர்த்து தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர் என்பது ஊரறிந்த செய்தி. மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை வெளியிட விரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த அறிக்கை வேலையின்மை நிலைமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமாகியுள்ளதை தெளிவாக்குகிறது. 1972-73 முதல் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தொடர்ந்து நடத்திவந்துள்ள முழு சுற்று ஆய்வுகளில் (1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10, 2011-12, 2017-18) மிக அதிகமான வேலையின்மை விகிதம் 2017-18 சுற்றில் தான் நிகழ்ந்துள்ளது.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய நாட்டில் உழைப்பாளி மக்களுக்கு சமூக வாழ்வாதார பாதுகாப்பு மிகக் குறைவு. எனவே முழுமையாக  வேலை செய்யாமல் இருப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள். (செல்வந்தர்கள் மட்டுமே வேலை செய்யாமல் வாழ முடியும்! ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடையாது!!) ஏதோ ஒருவேலையில் (சுயவேலை, கூலிவேலை) – மிகக்குறைவான ஊதியமோ வருமானமோ கிடைத்தாலும் – இருந்தே ஆகவேண்டும். வேலையில்லா ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் எதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே ஆய்வுகளில் கிடைக்கும் வேலையின்மை விகிதம் உண்மையான வேலையின்மை அளவையும் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. வேலையில் இருப்பதாக கருதப்படுவோரின் மோசமான பணி நிலைமைகள் பற்றிய விவரங்களும் இத்தகைய ஆய்வுகளில் பெருமளவிற்கு கிடைப்பதில்லை. மேலும் இந்திய உழைப்புப்படையில் சரிபாதிக்கும் சற்று அதிகமானவர்கள் சுயவேலை செய்பவர்கள். இவர்கள் கணிசமான நேரம் வேலையின்றியே உள்ளனர். உதாரணமாக, இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் உள்ள விவசாயக் குடும்பத்தில்  உழைக்கும் வயதிலான  குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வருடம் முழுவதும் வேலை இருக்க வாய்ப்பே இல்லை. பகுதிநேர வேலையின்மை என்பது – பொருளாதார அறிஞர்கள் இதனை ‘மறைமுக வேலையின்மை‘ என்று அழைக்கிறார்கள். – நமது நாட்டில் நிலவும் சமூக பொருளாதார அமைப்பின் ஒரு மிகப்பெரிய கேடு.  இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியம் என்பது ஒருபுறம்.

மறுபுறம், அரசு வெளியிட மறுத்த தேசிய மாதிரி ஆய்வு 2௦17-18 அறிக்கை – ஊடகம் ஒன்றின் முயற்சியால் பொதுவெளிக்கு வந்துள்ள அறிக்கை – தரும் விவரமும் மிக முக்கியமானது. நமது நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் – பாஜக ஆட்சியில் – வேலையின்மை பிரச்சினை பூதாகாரமாக அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேலையின்மை பற்றிய 2011-12 ஆய்வு விவரங்களையும் 2௦17-18 ஆய்வு விவரங்களையும் ஒப்பிட்டால் வேலையின்மை  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.  தேசிய மாதிரிஆய்வு அமைப்பின் அறிக்கை மட்டுமல்ல. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் ( Centre for Monitoring Indian Economy – CMIE) தரும் விவரங்களின்படி, நவம்பர் 2௦17 முதல் நவம்பர் 2௦18 வரையிலான ஒரு ஆண்டில் வேலையில் உள்ளவர் எண்ணிக்கை  ஒரு கோடியே பத்து லட்சம் குறைந்துள்ளது என்பது தெரிகிறது. எனவே வேலையின்மை பிரச்சினை பாஜக ஆட்சி அமலாக்கிவரும் கொள்கைகளால் மிகவும் கூர்மையாகியுள்ளது. இதில் பொதுவான தாராளமய கொள்கைகளின் தாக்கம் மட்டுமல்ல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்  மிகுந்த குழப்பங்களுடன் அவசரகோலமாக திணிக்கப்பட்ட  சேவை மற்றும் சரக்குவரி – ஜிஎஸ்டி – அமலாக்கமும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இவ்விரு நடவடிக்கைகளும் பொதுவாக பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது மட்டுமின்றி குறிப்பாக விவசாயம், சிறு குறுதொழில்கள் உள்ளிட்ட முறைசாராத்துறைகளை பெரிதும் பாதித்துள்ளன. வேலையின்மையை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளன.

தொடரும் மக்கள் விரோத வரி கொள்கை

மேலே விவரிக்கப்பட்டுள்ள இருபெரும் பிரச்சினைகளைப் பற்றி எந்த நடவடிக்கையையும் ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக தேர்தல் நோக்கிலான பட்ஜெட் முன்மொழிவையே நாம் காண்கிறோம். 12 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு நேரடி பணம் பட்டுவாடா என்பது அப்பட்டமாக மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சி. அதேபோல் தான் தனிநபர் வருமான வரி தொடர்பான சலுகைகளும். இவற்றால் பயன் அடைவோருக்கு கிடைக்கும் பணப்பயன் குறைவாகவே இருக்கும். ஆனால் பேரோசையை இவை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது. இதிலும் தில்லுமுல்லு உள்ளது. 2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிநபர் வருமான வரி வரம்பை ஆண்டுக்கு  3 லட்சம் என்பதிலிருந்து 5 லட்சம் ஆக்குவோம் என்று அருண் ஜெயிட்லி ட்வீட் செய்தார்.மேடைக்கு மேடை பேசினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யவில்லை. இந்த ஆண்டும் செய்யவில்லை. வருமானவரிக்கு உள்ளாகும் வருமானம் ஐந்துலட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய வரிக்கு முழு  ரிபேட் அளிக்கப்படும் என்று மட்டுமே பட்ஜெட் முன்மொழிவு கூறுகிறது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தனிநபர் வருமான வரி தொடர்பான மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில்  கொண்டு வருவது என்பதே நெறிமுறைகளை மீறுவதாகும். இதில் மேலும் கவனிக்க வேண்டியது தனிநபர் வருமான வரி மற்றும் இதர நேர்முக வரி சலுகைகளால் அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் என்று பட்ஜெட் விவரங்கள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்ற பட்ஜெட்டிலேயே அவர்கள் மீதான வரிவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டது. வரிவிலக்கு ஷரத்துகள் தொடர்கின்றன. மேலும் சொத்துவரி பாஜக ஆட்சியால் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. வாரிசுவரி கிடையாது. மறுபுறம் பாஜக ஆட்சியில் ஆண்டு தோறும் மறைமுகவரிகள் ஏற்றப்பட்டுவந்துள்ளன. தனது முதல் நான்கு பட்ஜெட்டுகளில் கச்சா எண்ணய் மீதான  கலால் வரி உயர்வுகள் மூலம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. தனது ஐந்து பட்ஜெட்டுகளிலும் இந்த பட்ஜெட்டிலும் பாஜக தொடர்ந்து செல்வந்தர்கள் மீதான வரிச்சுமையை குறைத்து சராசரி உழைப்பாளி மக்கள் மீதான  வரிச்சுமையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில், மொத்த குடும்ப சொத்துமதிப்பில் மேல்மட்ட 1% குடும்பங்கள் கையில் 63% க்கும் அதிகமாக உள்ளது  என்ற விவரம் இந்தியாவில் நிலவும் பிரம்மாண்டமான சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நாட்டில் சொத்துவரியும் வாரிசுவரியும் இல்லை என்பது அரசின் கொள்கைகள் மீது செல்வந்தர்கள் செலுத்தும் செல்வாக்கை காட்டுகிறது. அதேபோல், தனி நபர் வரி வருமான விகிதம் (3௦% + சர்ச்சார்ஜ்) கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 25௦ கோடிக்கு குறைவாக விற்பனை மதிப்பு கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வருமான வரிவிகிதம் 3௦% இல் இருந்து 25% ஆக சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஆக்கப்பட்டது. ஆக, பெரும் செல்வந்தர்களும் பெரும் கம்பனிகளும் இந்திய அரசின் வரவு செலவு கொள்கை உட்பட அரசின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள்

விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வாரி வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கும் திட்டங்களுக்குமான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை. மொத்த பட்ஜெட்டில் தொடர்ந்து சொற்பமாகவே அவை உள்ளன. கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு மிகவும் அவசியமான, வேலை பெறுவதை சட்ட பூர்வ உரிமையாக்கிய வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் மன்ரேகா அல்லது ரேகா அல்லது நூறுநாள் திட்டம் என்று அழைக்கப்படும் ஊரக வேலை உறுதி திட்டம் 2௦௦6 இல் இருந்து அமலில் உள்ளது. இடதுசாரி இயக்கங்களும் சில சிவில் சமூக அமைப்புகளும் முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்த நிர்ப்பந்தத்தினால் தான் ரேகா சட்டம் வந்தது. இச்சட்டத்தின்படி விருப்பம் தெரிவிக்கின்ற ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 1௦௦ நாட்கள் வேலையை அரசு கொடுக்கவேண்டும். இதன்மூலம் கிராமப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு வேலையும் அதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ரேகா பணிகள் மூலம் கிராமங்களில் பாசனம் உள்ளிட்ட உற்பத்தி சொத்துக்கள் உருவாக்கப்படும். இந்த அருமையான திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு சின்னாபின்னமாக்கி அழிக்க முற்பட்டுவருகிறது. வேலை நாட்களை குறைத்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளை கடுமையாக வெட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நடப்பு நிதி ஆண்டில் ரேகாவிற்கான ஒதுக்கீடு (திருத்தப்பட்ட மதிப்பீடு) 61,௦84 கோடி ரூபாய். ஆனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் வரும் நிதி ஆண்டிற்கு ரேகாவிற்கு ரூ 6௦,௦௦௦ கோடி தான் ஒதுக்கியுள்ளது. துவக்கத்தில் இருந்த மாதிரி ரேகா திட்டத்திற்கு பொருத்தமான ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் அது இத்தொகையைப்போல் இரண்டு மடங்கு இருக்க வேண்டும். ரேகாவில் உழைத்துள்ள மக்களுக்கு வர வேண்டிய கூலி பாக்கித்தொகை பல ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டது. உண்மையில், பாஜக அரசு இந்த திட்டத்தை மூடி விடும் நோக்கில் உள்ளது.  ஊரக உழைப்பாளி மக்களின் கடும் களப்போராட்டங்கள் நடத்தி இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பெரிதும் உயர்த்துவது அவசியம். ரேகா திட்டத்தில் பயன்பெறுவோரில் கணிசமானவர்கள் சிறு குறு விவசாயிகள், குறிப்பாக பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறுபல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது அல்லது மிகவும் சொற்ப அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் ஒதுக்கீடுகளில் நாம் இதைக்காண முடிகிறது. கடந்த ஆண்டும் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடை விட மிகவும் சொற்பமாகவே வரும் ஆண்டுக்கான அரசின் ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாக்குகளை குறிவைத்து நேரடி பண பட்டுவாடா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 20,000 கோடி ரூ என்பதன் பெரும்பகுதி இவ்வாறு பிற திட்டங்களை வெட்டி கணக்கில் வந்துள்ளது.

வளங்களை திரட்டுதல்

  ஒருபட்ஜெட்டின் முக்கிய அம்சம் மக்கள் நலனுக்காக வகுக்கப்படும் திட்டங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை செய்திட பொருத்தமான முறையில் அரசு வளங்களை திரட்ட வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் பாஜக அரசு பெரும் கம்பனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் தொடர்ந்து வருமான வரிச்சலுகைகள் அளித்துவருவதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த ஆண்டும் செல்வந்தர்களிடம் இருந்தோ பெரும் கம்பனிகளிடம் இருந்தோ வளர்ச்சிக்கான வளங்களை திரட்டும் எந்த முயற்சியும் இல்லை. மாறாக வருமான வரி தொடர்பாக அறிவி க்கப்பட்டுள்ள சலுகைகளால் அரசுக்கு  சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம். ஜிஎஸ்டியின் கீழ் மத்திய பட்ஜெட் மூலமாக மறைமுக வரிகளை உயர்த்துவது சாத்தியமில்லை என்பதாலும் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதாலும் கொடுத்தல் வரிவிதிப்பு முயற்சிகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. எனினும் பல மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது தேவைக்கு மிகக்குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வரி இழப்பாலும் தேர்தல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களாலும் அரசுக்கு  ஏற்படும்  வருமான இழப்பை எதிர்கொள்ள பாஜக அரசு தொடர்ந்து அரசு கடைப்பிடிக்கும் முக்கிய தந்திரம் பொதுத்துறை சொத்துக்களை விற்பதாகும். 2017-18 இல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது. இது பட்ஜெட்டில் சொல்லப்பட்டதைவிட 25௦௦௦ கோடி ரூ கூடுதல் ஆகும்.   2018-19 இல் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன்மூலம் 80,000ரூ திரட்டப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவனங்கள் கூறுகின்றன. 2019-20 இல் ரூ 90,000 கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது. இது தாராளமய கொள்கைகளின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று. மக்கள் சொத்தை படிப்படியாக  தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் ஏற்பாட்டை தான் மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. தற்சமயம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை பங்குகளை வாங்கும் நிலையில் இல்லை. எனவே மோடி அரசு  பொதுத்துறை நிறுவனங்களான  LIC, ONGC போன்ற நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்தி  அரசு விற்கும் பங்குகளை வாங்க வைக்கிறது. அரசின் தாராளமய கொள்கைகளால் இந்தப்பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் சரியும்பொழுது நட்டமடைவது இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களே. படிப்படியாக அவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் தான் தாராளமய அரசுகள் பயணிக்கும். இதைத்தான் மோடி அரசு செய்துவருகிறது.

இப்படியெல்லாம் கணக்கு காட்டுவதில் பல ஜால வித்தைகள் செய்தாலும் அரசின் பிஸ்கல் பற்றாக்குறை இலக்கை மீறியுள்ளது. பிஸ்கல் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்  3% க்குக் குறைவாக இருக்கவேண்டும் நமது நாட்டில் ஒரு அபத்தமான சட்டம் உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிக்க மக்கள் நலன் சார்ந்த செலவுகளையும் மக்களுக்கான மானியங்களையும் அரசு தொடர்ந்து வெட்டி வருகிறது. கார்ப்பரேட்டுகள் மீதும் செல்வந்தர்களின் மீதும் உரிய வரிவிதித்து அதனை வசூல் செய்தாலே பற்றாக்குறை குறைந்துவிடும். ஆனால் அப்படி செய்தால் கார்ப்பரேட்டுகளும் முதலீட்டாளர்களும் ஊக்கம் இழந்து கடைகளை மூடிவிடுவார்கள் என்ற மிரட்டலின்கீழ் இன்று செல்வந்தர்கள் மென்மையாக அணுகப்படுகின்றனர், மறுபுறம் மக்கள் வாட்டப்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளிவைக்க நாட்டிற்கு தேவை தலைவர்களை மாற்றுவது அல்ல. கொள்கைகளை மாற்றுவதாகும்.

இறுதியாக

பட்ஜெட் புள்ளிவிவரங்களையும் அரசு தரும் விவரங்களையும் வைத்துதான் நாம் பலவிஷயங்களைப்பேச வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த புள்ளிவிவரங்களின் நமபகத்தன்மை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது பாஜக ஆட்சியின் “சிறப்பு சாதனை”. எடுத்துக்காட்டாக, 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 7.1% என்று அரசு முன்பு கூறியது. இது அதன் முந்தைய ஆண்டின் வளர்ச்சி விகிதத்தில் இருந்து ஒரு சரிவைக் காட்டியது. நிபுணர்கள் அனைவருமே இந்த சரிவு  மோடியின் நவம்பர் 2016  செல்லாக்காசு நடவடிக்கையால் தான் என்று ஒருமனதாக கூறினார். ஆனால் அரசு அதனை ஏற்க தயாராக இல்லை. எனினும் அன்றைக்கு அதிகார பூர்வமாக வளர்ச்சிவிகிதம் 7.1% என்றே பதிவாகியது. இப்பொழுது தேர்தல் நெருங்கும் வேலையில் செல்லாக்காசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் கதையாடலின் பகுதியாக 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம்   8.2% என்று அறிவிக்கப்பட்டுள்ளது! வேலையின்மை தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்ததும் இதனால் தான். பல சட்டபூர்வமான அமைப்புகளை நாசப்படுத்திவரும் மோடி அரசின் அந்நடவடிக்கைகளின் வரிசையில் புள்ளியியல் நிறுவனமும் சிக்கியுள்ளது. பட்ஜெட் பற்றிப்பேசும் பொழுது இவற்றை எல்லாமும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வரும் வாரங்களில், நாட்களில் பட்ஜெட் பற்றிய அரசின் பிரச்சாரமும் கதையாடலும் மேலும் மேலும் பொய்களின் தொகுப்பாக உலாவரும். இதனை உண்மைகளின் அடிப்படையிலான நமது பிரச்சாரத்தால் நாம் முறியடிக்க வேண்டும். இது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.