கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை


(குரல்: ராம் பிரகாஷ்)

கோ.வீரய்யன்

தமிழகத்தில் விவசாயத்தில் இருந்த நிலப்பரப்பில் சுமார் 60 லட்சம் ஏக்கர்கள் ஜமீன்தார்களின் கையில் இருந்தது. 1,500 ஜமீன்தார்களிடம் சுமார் 59,87,107 ஏக்கர் நிலம் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நம் நாட்டில் வேரூன்றுவதற்கு உதவி செய்த இந்த பேர்வழிகளுக்குத்தான் ஜமீன்தார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்விதம் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தாரி முறைக்குத்தான் சாசுவத நிலவரித் திட்டம் என்று பெயர். இந்தத்திட்டம் 1739இல் முதன் முதலில் வங்காளத்தில் அமுல்நடத்தப்பட்டு பிறகு சென்னைக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறை – சாசுவத நிலவரி முறை  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1802இல் அமல் நடத்தப்பட்டது. அப்போது வரி வசூலில் இருபங்கை அரசு கருவூலத்தில் கட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில்உள்ள ஜமீன்தார்கள் தம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் 74 லட்சம் ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்படி வசூலிப்பதில் 49 லட்சம் ரூபாய் ஜமீன்தார்கள் அரசு கருவூலத்தில் கட்டிவிட வேண்டும். இப்படி ஜமீன்தார்கள் அரசுக்குக் கட்டும் வரிக்கு ‘பேஷ்குஷ்’ என்று பெயர். 74 லட்சத்தை வசூலித்து 49 லட்சத்தை அரசுக்குக் கட்டிவிட்டு, மீதி 25 லட்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள், 1938ஆம் ஆண்டு விவரப்படி, விவசாயிகளிடம் வசூலித்தது 254 லட்சம் ரூபாயாகும். 25 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஜமீன்தார்கள் எடுத்துக் கொண்டதோ 205 லட்சம் ரூபாய். எட்டு மடங்கிற்கு மேல் அவர்கள் எடுத்துக் கொண்டு, விவசாயிகளைச் சுரண்டினார்கள். 

இவை போதாதென்று மேலும் கீழ்க்கண்டவாறெல்லாம் வரி வசூலித்தார்கள்.

  • சமுதாய நிலத்தில் வளரும் மரத்திற்கு வரி
  • நத்தம் ஜாரியில் வீடுகட்டிக் கொள்வதற்கு வரி
  • புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்லுக்கு வரி
  • கரம்பு நில உபயோக வரி
  • ஆடுமாடு மேய வரி
  • காட்டு மரத்தில் தழை வெட்டவும், விறகு வெட்டவும் வரி

இந்த வரி வசூலுக்கு அரசின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. 

அரசுக்கு குறிப்பிட்ட சேவை செய்வதற்காக சிலருக்கு இனாமாகவோ பரிசாகவோ வழங்கப்பட்ட இனாம் ஒரு வகை. கோவில் மடங்களுக்கு வழங்கப்பட்ட இனாம் ஒரு வகை. இது தவிர தனிநபர்களுக்கு மான்யமாக வழங்கப்பட்ட இனாம். 

இப்படி தமிழகத்தில் 4500 இனாம்தார்கள் இருந்தனர். இதில் கடைசி பகுதி அவரவர்களே அனுபவித்து வந்தது. முதல் பகுதி இனாம் அநேகமாக இவர்களும் ஒரு குட்டி ஜமீன்தார்கள் போல்தான். விவசாய வேலைகளில் ஈடுபடாத இனாம்தார்கள் விவசாயிகளிடமிருந்து வசூலித்து விவசாயிகளை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்.

மடாதிபதிகளும், கோவில்களும் தங்கள் இனாம் நிலத்தை, பல கிராமங்களை, ஓராண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு என்று குத்தகைக்கு விட்டுவிடுவது வழக்கம். அந்த மொத்த குத்தகைதாரர் பல ஆயிரம் ஏக்கர்களை மொத்த குத்தகைக்கு எடுத்து, ஒரு பகுதியைச் சொந்த பண்ணையாக வைத்துக் கொள்வார். பெரும் பகுதியை விவசாயிகளிடம் கொடுத்து சாகுபடி செய்யச் சொல்வார். இவர் பண்ணை சாகுபடிக்கு பலரை பண்ணை ஆட்களாக அமர்த்திக் கொண்டிருப்பார். அவர்களுக்கு ஐம்பது, நூறு என்று கடன் கொடுத்து வேலை வாங்குவார். அவர்களுக்குப் பெயர் பண்ணையாள் (சுகந்தை) என்பதாகும். அப்படி பணம் வாங்கும் குடும்பம் முழுவதும் அந்த மொத்த குத்தகைதாரரிடம் பண்ணை அடிமையாக உழைக்க வேண்டும். 

தினசரி ஆணுக்கு கூலி மூன்று சின்னபடி நெல், ஒரு அணா காசு. பெண்கள் வயல் வேலை செய்யும்போது மட்டும், தினசரி இரண்டு சின்னபடி நெல் மட்டுமே கொடுப்பர். ஆண்டு முழுவதும் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்தால் மாதம் மூன்று மரக்கால் அல்லது நான்கு மரக்கால் நெல் கிடைக்கும். பண்ணையாளின் பிள்ளைகள் மாடுமேய்க்க வேண்டும். மொத்தக் குத்தகைதாரரிடம் நிலம் பெற்று சாகுபடி செய்பவர்களும் மொத்த குத்தகைதாரர் பண்ணை சாகுபடி நிலத்தை நடவு வேலை முடித்து விட்டுத்தான் அவர் தனது சொந்த சாகுபடியைச் செய்ய வேண்டும். அப்படி பண்ணை சாகுபடி வேலை செய்வதில் பெரும்பகுதி இனாம் வேலைதான்.

சாகுபடிதாரர் தான் சாகுபடி செய்யும் நிலத்தை அறுவடை செய்யும்போது, இனாம்தார் – மொத்த குத்தகை சாகுபடிதாரர்களின் ஏஜண்ட், குண்டர்கள் சகிதம் களத்திற்கு வந்துவிடுவார். கண்டுமுதல் ஆகும்  தானியத்தில் நூற்றுக்கு18 முதல் 20 சதவீதம் வரை அவர்களுக்கு வாரம் கொடுக்கப்படும். அதைத்தான் சாகுபடிதாரர் பெற்றுப் போக வேண்டும். 80 சதவீதம் வரை மொத்தக் குத்தகைதாரர் எடுத்துச்சென்று விடுவார்.

ரயத்துவாரி நிலப்பிரப்புக்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்கள். பல கிராமங்கள்இவர்களுக்குச் சொந்தம். இவர்களும் கிராமத்திற்கு ஒரு பண்ணை, அதற்கு ஒரு பங்களா – நிர்வகிக்க தலையாரி, ஏஜண்ட், கணக்கர் என்று ஆட்கள், 8, 10 பண்ணையாட்கள் வைத்து பண்ணை வைத்துக் கொள்வார்கள். ஒரு பகுதியை சாகுபடிக்கும் கொடுப்பார்கள். சில கிராமங்களில்இரு பண்ணைகள் இருப்பதும் உண்டு. இவர்களிடம்  பண்ணையாட்களாக இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகவே இருப்பவர்கள்.  

ஒரு பண்ணையில் இருப்பவர்கள், அடுத்த பண்ணைக்கு வேலைக்குப் போய்விடக் கூடாது. இந்தப் பண்ணையார் குடும்பமும் மொத்த குத்தகைதாரர் பண்ணையாட்களை நடத்துவதைவிட கடுமையாக நடத்துவார்கள். 

சாகுபடிதாரர்கள், பண்ணை நடவு, அறுவடையை முடித்து விட்டுத்தான் தங்கள் சாகுபடி நிலத்தில் நடவோஅறுவடையோ செய்ய வேண்டும். அப்போதுதான் பண்ணை ஏஜண்ட், தலையாரிகள், சாகுபடிதாரரின் அறுவடையைக் கண்காணிக்க வர முடியும். முன்னாலே இவர்கள் அறுவடை செய்தால் அடுத்த ஆண்டு அந்த நிலம் சாகுபடிக்கு இவரிடம் இருக்காது. இவரும் அந்த ஊரில் இருக்க முடியாது. 

இப்படி பண்ணையார் ஆட்கள் காவல் காக்க சாகுபடிதாரர் அறுவடை செய்து கண்டுமுதல் ஆகும் நெல் முழுவதும் பண்ணையாரின் பெரும் பட்டறைக்கு போய்விடும். கண்டுமுதல் எவ்வளவு கண்டது என்ற கணக்குகூட இவரிடம்தான் இருக்கும். பிறகுபண்ணையார் பட்டறையில் இருக்கும் அனைத்து சாகுபடிதார்களின் நெல்லும்எடுக்கப்பட்டு பண்ணைக்கு பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் சேர் கட்டியபிறகு,  சாகுபடிதாரர்களின் கணக்கு பார்க்கப்பட்டு 18 வாரம் அல்லது 20 வாரம் கணக்கிட்டு, விவசாய வேலை ஆரம்பம் முதல் விதை, தசுக்கூலி,  இடையில் குடும்பச்செலவுக்கான சாகுபடிதாரர் வாங்கியிருக்கும் கணக்குப் படிக்கப்பட்டு, மீதி இவ்வளவுதான் வாரத்தில் பாக்கி கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அதுவும் கொடுக்க மாட்டார்கள். வைக்கோல் போரில் நெல் இருக்கிறது, இன்னும் கூடுதலாகவே கூட இருக்கும். எனவே வைக்கோல் போர் அடித்து, வாரத்தில் பாக்கி எடுத்துக்கொண்டு, அதில் மீதமுள்ள நெல்லை பண்ணையில் கொடுத்துவிட வேண்டும் என்றும், மேலும் வைக்கோல் போரில் பாதியை கொண்டுவந்து பண்ணைக் கொல்லையில் போர்போட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தனது ஏஜண்ட் மூலம் பண்ணையார் சாகுபடிதாரருக்கு அறிவிப்பார். இதுதான் ரயத்துவாரி நிலப்பிரபுக்களிடம் இருந்த கிராம நிலை.

சொந்தநிலம் இல்லாத கூலி உழைப்பு மூலம்தான் உயிர்வாழ முடியும் என்றிருந்த ஏழைகள் ஆண்டாண்டுகாலமாக குடும்பம் முழுவதுமாக உழைத்தார்கள், உழைத்தும் வருகிறார்கள். இவர்கள் பண்ணையாட்களாக, ஆண்களும் பெண்களும் அவர்கள் பிள்ளைகளும் – இவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு புரோநோட் எழுதிக் கொடுத்துவிட்டு ‘சுகந்தை’ என்ற பெயருடன் வேலை செய்து வந்தார்கள். ஒரு மிராசுதாரிடம் வேலை செய்யும் பண்ணையாள் அந்த மிராசுதாரின் இடத்தில்தான் குடிசை போட்டு குடியிருக்க வேண்டும். வேறொரு இடத்திற்குப் போகக் கூடாது.அப்படிப் போய்விட்டால் அந்த குடியிருக்கும் குடிசை இடித்துத் தரைமட்டமாக்கப்படும்.

உடம்பு சரியில்லை என்று தவறி ஒருநாள் அவன் வேலைக்கு வராமல் இருந்து விட்டால், அவன் உடனே அழைத்து வரப்பட்டு சாட்டையால் அடிக்கப்படுவான். அதோடு அவன் செய்தஇந்த ‘மா பாதக’ செயலுக்காக, உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு வராமல்இருந்ததற்காக, மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கரைத்து அவனுக்கு கொடுக்கப்படும். அதை அவன் குடிக்க வேண்டும். இத்தகைய கொடுந்தண்டனைகளைத் தாங்கிக் கொண்டு, அவன் வேலை செய்ய வேண்டும்.

கோழிகூப்பிடும் நேரத்திற்கு ஆண்டை வீட்டுக்கு வந்து, இரவு கொசுக்கடி ஆரம்பித்தபிறகுதான் அவன் வீடு திரும்ப வேண்டும். இந்த வேலைக்கு அவனுக்கு தினக்கூலி 3 சின்னபடி நெல், ஒருஅணா காசு. மதியம் சோறு போட்டால் அதற்காகக் கூலியில் ஒரு சின்னபடி நெல் பிடிக்கப்படும். அவன் சோறு சாப்பிட்டால், அதை அவன் இலைபோட்டு சாப்பிடக்கூடாது. பித்தளைப் பாத்திரத்தில் சாப்பிடக்கூடாது. பழையகால சிறைக் கைதிகளுக்கு தருவதுபோல், மண்ணாலான மல்லைசட்டியில்தான் சாப்பிடவேண்டும். அதுதான் பண்ணையாள் சாப்பிடும் பாத்திரம். அது இல்லாவிட்டால், இரும்பு மரக்காலில்அவனுக்குச் சோறு போடப்படும். அவன் மனைவியும், பிள்ளைகளும் மிராசுதார் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். மாடு மேய்க்கவேண்டும். 

பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது, படிக்க வைக்கக் கூடாது.

பண்ணையாள் வீட்டில் எரிக்கும் அடுப்புச்சாம்பலும் உரமாக சேர்த்து வைக்கப்பட்டு மிராசுதார் நிலத்திற்கு எந்த விலையும் இல்லாமல் கொடுக்க வேண்டும். பண்ணையாளின்வீட்டுக்கூரையை மூடிவைக்க கொல்லையில்பரங்கி, பூசணி செடிபோட்டு கூரை மேல் விட்டு ஆறு மாதம் அந்த நிழலில் அவன் வாழ்வான். அதுதான் அவனுக்குச் சொந்தம். அதில் காய்க்கும் காய்கள் முழுவதையும் மிராசுதார் வீட்டுக்குக் கொடுத்துவிட வேண்டும். வயலில் மேயும் நண்டும் நத்தையும்தான் அவன் காய்கறிகள். தனது பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிராசுதார் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. இந்த ஆண்டு திருமணம் வேண்டாம் என்று மிராசுதார் கூறிவிட்டால்அதைத் தாண்டி திருமணம் செய்யமுடியாது, செய்யக் கூடாது.

பண்ணை அடிமைகளாக இருந்தவர்களில் பெரும் பகுதியினர் ஜாதியில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்ததால், ஜாதியக் கொடுமை கொடூரமாக இருந்தது. மேல்ஜாதிக்காரர்கள் தெருவில் மிராசுதார்கள் வீட்டிற்கேயானாலும் வண்டி ஓட்டிச்சென்றால், தெருவில் வரும்போது, கீழே இறங்கி வண்டிக்கு முன்னால்  நடந்தேதான் வண்டியை இழுத்துச் செல்ல வேண்டும். அக்ரகாரத்தின் பக்கம் அடிகூட வைக்கமுடியாது. இடுப்பில் வேட்டி கட்டக் கூடாது. கோவணத்துடன்தான் இருக்கவேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை தீபாவளியன்று ஆண்டை எடுத்துக் கொடுக்கும் ஒரு வேட்டியுடன்தான் அடுத்த ஆண்டு வரை இருக்க வேண்டும். அதையும் தலையில்தான் கட்டிக் கொள்ள வேண்டும். மேலே சட்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அதேபோல் பண்ணையான் மனைவியும் இரவிக்கை போடக் கூடாது. சேலையை முழங்கால்அளவிற்குத்தான் கட்ட வேண்டும். முழங்காலுக்கும் கீழே வரும்படி சேலை கட்டக்கூடாது. அந்தப் பெண் நல்ல உடற்கட்டுடன் இருந்துவிட்டால் போதும். 

மிராசுதார்களின் இச்சைக்கும் இணங்கியாக வேண்டும். தனது கணவனை கட்டி வைத்து அடித்தாலும் மனைவியோ, பிள்ளைகளோ எதிரில் நின்றாலும், ‘அடிக்கிறார்களே’ என்று வாய்விட்டு அழக்கூடாது. வாயிருந்தும் ஊமைகளாய் இருக்க வேண்டும். அதேபோல் பண்ணையாள் மனைவியையோ, பிள்ளைகளையோ அடித்தாலும் அவன் கண் இருந்தும் குருடனாகவே இருக்கவேண்டும். ஆண்டையோ அவர் உத்தரவின் பேரில் அவர் ஏஜண்டோ அடிக்கும்போதுகூட வலி தாங்காது ஐயோ என்ற கத்தக் கூடாது. ஐயா என்றுதான் கத்த வேண்டும். இவைகள் கதைகளல்ல. அன்று சமூக நியதியாக இருந்தவை இவைதான்.

இந்தக் கொடுமைகள் தாளாது தங்களின் குடும்பங்களையும் விட்டுவிட்டு பர்மாவிற்கும், மலேயாவிற்கும், இலங்கைக்கும் ஓடிய பண்ணை அடிமைகளும் குத்தகை அடிமைகளும் ஏராளம். இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் கொசுக்களின் கொடுமையும், மலேயாவின் ரப்பர் தோட்டத்தில் அட்டைகளின் கடியும், தமிழகத்து நிலப்பிரபுக்களின் கொடுமையைவிட எவ்வளவோ மேல் என்று ஓடியவர்கள் ஏராளம்உண்டு.

இப்படித்தான் ஜமீன்தார்கள் – இனாம்தார்கள்-மொத்த குத்தகைதாரர்கள் – நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், பாதுகாப்புடன் கோலோச்சிய உறவுமுறைகளை பிரிட்டிஷ் அரசு சென்னை மாகாணத்தில், தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. இது 200 ஆண்டுகால வெள்ளையர்களின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சமூக அஸ்திவாரமாகும்.

உலகின் மிகப் பெரும் வல்லரசுகள், தங்களிடையே உள்ள வியாபாரப் போட்டியால் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தைப் போக்கிக்கொள்ளவும், சுருங்கிவரும் தங்களின் சந்தைகளை விஸ்தரித்துக் கொள்ளவுமான போட்டியின் காரணமாக 1939-இல் இரண்டாவது உலக யுத்தம் துவங்கியது. யுத்தத்தை துவக்கிய ஜெர்மன்தேசத்து சர்வாதிகாரி ஹிட்லர், உலகில் உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக இருந்த சோசலிச நாடான சோவியத் யூனியனை அடிபணியவைக்கவும், உலகை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரவும் உலகம் முழுவதிலும் ஒரு பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும், இத்தாலியையும் ஜப்பானையும் தனக்குத் துணையாகக் கொண்டு உலகப் போரை உச்சகட்டத்தில் நடத்திக் கொண்டிருந்தான். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்கள் பாசிசத்தையும், ஹிட்லரையும் தோற்கடிக்க அணிதிரண்டு நின்றார்கள்.

அந்த உலக யுத்தத்தில், நமது நாட்டை ஆண்டபிரிட்டிஷார் ஒரு பங்காளியாக இருந்தார்கள். நாட்டின் சகல உற்பத்தி ஏற்பாடுகளும் யுத்த தேவைக்கு திருப்பிவிடப்பட்டன. பெட்ரோலும், டீசலும், துணியும், உணவும் யுத்த முகாமுக்கு என்று திருப்பி விடப்பட்ட நேரம். கட்டத்துணியும், சாப்பிட உணவும், விளக்கு எரிக்க எண்ணெயும் இன்றி கிராமத்து மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகி நின்றார்கள். ராணுவத்திற்கு ஆள் என்றும், யுத்தத்திற்கு வரி என்றும், ஆளும்அரசு கிராம மக்களை கிட்டி போட்டு நெரித்துக் கொண்டிருந்தது. ஜமீன்தார்களும், இனாம்தார்களும், மிராசுதார்களும் கிராமத்து மக்களை யுத்தநேரத்தில் நெருக்கி அவர்களின் தானியம் முழுவதையும் அள்ளிச் சென்று யுத்தகால விலை உயர்வால் பெரும் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்திய சுதந்திர இயக்கத்திலும், முற்போக்கு இயக்கங்களிலும் முன்னணியில் நின்ற வங்க மாநிலத்தில் விவசாயிகள் இயக்கம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேண்டும் (தேபாகா) என்று போராடி, வெற்றி கண்ட வங்கத்து கிராம மக்களை உணவுப் பஞ்சம் கவ்வியதால் உண்ண உணவு இன்றி பல லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள்.

தமிழ்நாட்டிலும் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. சிவகாசிக்கு அருகில் உரத்திற்காக வயலில் போட்ட கடலைப் பிண்ணாக்கை பசி தாங்காது எடுத்து தின்ற மக்கள் பலர் காலரா நோய்க்கு பலியாகி மாண்டனர்.

இந்த சமுதாய அரசியல் சூழ்நிலையில்தான், இப்படி பெரும் வேலைகள் நிறைந்திருந்த சூழ்நிலையில்தான், கிராமத்து மக்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட, தமிழக விவசாயிகள் இயக்கம் முன்னுக்கு வர முற்பட்டது.

(தோழர் கோ.வீரய்யன் எழுதிய “விவசாயிகள் இயக்கத்தின் வீர வரலாறு” நூலில் உள்ள சிறு பகுதி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.