இந்திய தத்துவ மரபு – உண்மை வரலாறு


(குரல்: அஸ்வினி)

என்.குணசேகரன்

“இந்திய தத்துவ மரபின் சில கூறுகளின் அடியொற்றிப் போகிற ஓர் இந்தியர் இறுதியில் வந்து சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்க முடியும்” என்று எழுதினார் இந்திய தத்துவ ஆசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

சுரண்டலற்ற சமூகம் அமைகிற ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளனர். இந்திய தத்துவத்தை தங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு விளக்குவது, போதிப்பது என அவர்கள் உருமாற்றி வந்துள்ளனர்.

சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபில்  நிகழும் போராட்டத்துடன் இணைந்தது என தேவிபிரசாத் கருதினார். உண்மையான முற்போக்கு தத்துவ மரபினை மீட்டெடுக்க தனது வாழ்நாளையே அவர்  அர்ப்பணித்தார்.

தத்துவத்தில் முற்போக்கு உழைக்கும் வர்க்க மரபுக்கும், ஆளும் வர்க்க பிற்போக்கு மரபுக்கும் நடந்து வரும் போராட்டத்தின் உண்மையான பொருள் என்ன? இந்திய தத்துவ மரபிலும்  வர்க்கப் போராட்டம் தொடருகிறது என்பதுதான். ஒரு சமூகத்தில் தத்துவ சிந்தனைகள் எப்போதுமே குறிப்பிட்ட வர்க்கங்கள், சமுக குழுக்களின் சிந்தனனகளாகவே இருந்து வந்துள்ளன. சோசலிச இலட்சியத்தை எட்ட தனது கருத்தியலை தத்துவத் தளத்தில்  உழைக்கும் வர்க்க இயக்கம் முன்னெடுக்க வேண்டும்.

முதலாளித்துவ முறை, குறிப்பாக அதன் நவீன தாராளமய கட்டத்தில், வறுமை, ஏற்றத்தாழ்வினை அதிகரிக்கச் செய்துள்ளது. அவை ஏற்படுத்தும் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களிடையே அவநம்பிக்கையும், விரக்தியும் இயல்பாக ஏற்படுகிறது. இதிலிருந்து  மீள ஒரு புகலிடமாக மதநம்பிக்கை மக்களுக்கு கைகொடுக்கிறது.

பிற்போக்காளர்களும், வகுப்புவாதிகளும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். அதற்கேற்றவாறு, கருத்தியல் தளத்தில் அவர்கள்  செயல்படுகின்றனர். அவர்களது  உத்திகளில் ஒன்றாக, இந்திய தத்துவம் ஆன்மிகத் தத்துவமே என்ற பிரச்சாரம் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் இராதாகிருஷ்ணன் போன்றோர் முன்னெடுத்த இந்தக் கருத்து இன்றளவும் நீடித்துவருகிறது. ஆன்மிகமும், ஆன்மிக மறுப்பும் கொண்ட பன்முக தன்மை கொண்டதாக இந்திய தத்துவம் இருந்து வந்துள்ளது. இந்த உண்மை நிலைநாட்டப்பட வேண்டும். 

தத்துவப் போராட்டத்தின் அடிப்படை

தத்துவங்கள் பேசும் அடிப்படை பிரச்னை எது? உலகம், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றால் சூழப்பட்டு மனித வாழ்க்கை இயங்கி வருகிறது. பொருட்களால ஆன உலகிற்கும் சிந்தனைக்குமான தொடர்பினை தத்துவம் விவாதிக்கிறது. ஆன்மா, அல்லது கடவுள்தான் உலகிற்கு அடிப்படை என்பது கருத்துமுதல்வாதம். இந்தத்  தத்துவக் கண்ணோட்டம் கொண்டவர்கள் கருத்துமுதல்வாதிகள்.

உலகம், பிரபஞ்சம், இயற்கை அனைத்தும் பொருட்களால் ஆனது; அனைத்துக்கும் பொருளே அடிப்படை; பொருளே முதன்மையானது; பொருளிலிருந்தே சிந்தனை பிறக்கிறது என்பது பொருள்முதல்வாதம். இந்த தத்துவக் கண்ணோட்டம்  கொண்டவர்கள் பொருள்முதல்வாதிகள். இந்த இரண்டு முகாம்களுக்கான போராட்டம் வர்க்கங்களாக சமூகம் பிளவுண்ட காலத்திலிருந்தே நடந்து வருகிறது.

கருத்துமுதல்வாதம் அனைத்துப் படைப்புக்களுக்கும், வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் கடவுள்தான்  அடிப்படை என்கிறது. சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களை மத நம்பிக்கை என்ற வட்டத்தில் வைத்து ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை மறைக்க அது கேடயமாகப் பயன்படுகிறது. எனவே கருத்துமுதல்வாதம் ஆளும், உடைமை வர்க்கங்களின் தத்துவக் கண்ணோட்டமாக செயல்படுகிறது.

மாறாக, பொருள்முதல்வாதம் உலக, சமூக வாழ்க்கையை எதார்த்த இயக்கத்தில் காண்கிறது. பொருளின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சியை மூடநம்பிக்கை சார்ந்து அல்லாமல் அறிவியல் கண்கொண்டு காண முற்படுகிறது. மாற்றம் ஏற்பட  அது வழிவகுப்பதால் பொருள்முதல்வாதம் உழைக்கும், அடிமைப்பட்ட வர்க்கங்களின் தத்துவக் கண்ணோட்டமாக விளங்குகிறது.

இந்த இரண்டுக்குமான போராட்டம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தத்துவ வரலாறுகளிலும் நிகழ்ந்துள்ளது. இந்தியத் தத்துவமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்திய தத்துவத்தின் தொடக்கம்

இந்திய தத்துவ வரலாறு வேதங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்துதான் துவங்குகிறது என்ற ஒரு கருத்து ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. கி.மு 1500 காலங்களில் உருவான ரிக் வேத காலம்தான் இந்திய தத்துவ சிந்தனையின் தொடக்கமாக பேசப்படுகிறது. அதிலும் இன்றைய இந்துத்துவ பிரச்சாரத்தில் இது மிகவும் தூக்கலாகப் பேசப்படுகிறது. ஆனால் தத்துவ வரலாறு வேதங்களுக்கும்  முந்தைய காலத்திலிருந்து துவங்குகிறது.

உண்மையில் சிந்து சமவெளி நாகரிக காலமாக  அறியப்படுகின்ற  கி.மு. 2300 – ஆண்டுகளிலிருந்து தத்துவங்களின் வேர்களைக் காண முடியும். சமூக வாழ்க்கை ஓட்டத்துடன் தத்துவ சிந்தனைகள் தோன்றுகின்றன. வேளாண்மையும், நகர நாகரிகமும் வளர்ந்த காலம் அது. அந்தச்  சூழலில் உலகம் மற்றும் இயற்கை பற்றிய சிந்தனைகள் தோன்றாமல் அந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இது பற்றிய விவரங்கள் ஆராய வேண்டியுள்ளது. எனினும் பொதுவாக தத்துவத் தோற்றம் என்பது கி.மு.3000-2000 ஆண்டுகளிடையிலான காலகட்டம் எனக் கருதப்படுகிறது. இது இந்திய தத்துவத்திற்கும் பொருந்தும். வேதங்களே இந்திய தத்துவத்தின் தொடக்கம் என்பது சரியான கருத்து அல்ல.

அதே போன்று தென்னிந்தியாவிலும் தொன்மையான தத்துவக் கருத்துக்கள் தோன்றியுள்ளன. கி.மு 500-வாக்கில் தமிழக சமூக நிலைமைகள் தத்துவக் கருத்துக்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தில் கீழடி அகழ்வாய்வு வெளிப்படுத்துகிற தற்போதைய  தகவல்கள் இதனை உறுதிப்படுத்தி வருகின்றன.

இவை, மார்க்சிய ஆய்வாளர் தேவ பேரின்பன் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு வலு சேர்க்கின்றன.”2500 ஆண்டுகளுக்கு மேலான தத்துவ வரலாற்றைக் கொண்டதே தமிழ்ச் சமூகம். இது கிரேக்க, சீன, இந்திய செவ்வியல் மரபின் அங்ககப் பகுதியே (organic unit )ஆகும்” (தேவபேரின்பன்). எனவே ஆரிய வருகையை ஒட்டி வளர்ந்த வேத சிந்தனைகள்தான் இந்திய தத்துவங்களின் தோற்றம் என்பது கட்டுக்கதை.

ஆரிய  வருகைக்குப் பிறகு இனக்குழு சமுதாயம் உருப்பெற்ற காலங்களில், குறிப்பாக கி.மு 1500 லிருந்து கி.மு 500 காலங்களில்  வேதங்கள் படைக்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் பிராமண மதம் என்று அறியப்படும் பிராமண கருத்தியல் உருவானது. தொடக்க கால வேதப் பாடல்களில் முழுமையான கடவுள் பார்வை உருவாகவில்லை. உலகம்,பிரபஞ்ச இருப்பு பற்றிய கேள்விகளை அந்த பாடலாசிரியர்கள் எழுப்புகின்றனர்.” சூரியன் எந்தப் பொருளாலும் தாங்கிப் பிடிக்காமல் இருக்கும்போது எது எப்படி கீழே விழாமல் இருக்கிறது? “எங்கிருந்து காற்று வருகிறது? எங்கு போய் அது மறைகிறது?” இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பாடல்களாக உள்ளன.

ஏகம்  என்ற ஒன்று எப்போதும் இருந்து வருகிறது; எதிலிருந்தும்  அது பிறப்பதில்லை போன்ற  கருத்துக்கள் அதில் வருகின்றன. எனவே இந்த சிந்தனை ஆதி நிலை பொருள்முதல்வாதம் (proto -materialism)  எனக் கருதலாம். வேதங்களை முன் வைத்து இந்திய தத்துவம் ஆன்மீகமே   எனப் பேசப்படுகிறது. ஆனால் தொடக்க கால இனக்குழு சமூகத்திற்கே உரிய பொருளிலிருந்துதான் பொருள் தோன்றியது என்ற சிந்தனை ஓட்டங்கள் பழைய வேதங்களில் இருந்துள்ளன. பின்னாளில் அவை நான்கு வேதங்களாக  உருப்பெற்று நால் வர்ணங்களும் மனு சட்டமும் கொண்ட  கடவுள் தத்துவமாக மாறியது என்பது உண்மையே. ஆனால் இந்த நிலை உருவான முரண்பாடான வளர்ச்சியை மறைக்க கூடாது.

தொன்மையான தத்துவம் பொருள்முதல்வாதம்

வேதங்கள் உருப்பெற்ற ஆயிரம் வருடங்களும் சமூக வளர்ச்சியில்  வர்க்க வேறுபாடுகள் கூர்மையடைந்து வந்துள்ளன. வேளாண்மை, வணிகம் வளர்ந்தன. உற்பத்தியின் உபரியை அபகரிக்கும் ஆளும் வர்க்கங்களும், அவை  ஆதிக்கம் செலுத்தும் மன்னராட்சியும்  நிலைபெற்றது. சமூகத்தில் நால்வருண சாதிமுறை வலுவாக  வேரூன்றியது. இந்நிலையில் தத்துவத்  துறையில் வேதங்களைத் தழுவி உருவான உபநிடதங்களும், பின்னர் வேதாந்தமும் செல்வாக்கு செலுத்தின.

இந்த வரலாற்றில் கூட  தத்துவ சிந்தனை ஆன்மிகம் போற்றும்  ஒரே பிரிவாக மட்டும் இருக்கவில்லை. இந்தியா ஆன்மிக நாடு என்று முத்திரை குத்துவதற்கு இந்தக் காலக்கட்டத்தை பிரதானமாக எடுத்துக் காட்டுகின்றனர். உபநிடதங்கள் தத்துவத்தில் முக்கிய இடம்பெற்று,  நால் வருண சாதிய அமைப்பு  நிலைத்த காலங்களையே  இந்தியாவின் பொற்காலம் என சங்கப் பரிவாரம் இன்றளவும் பிரச்சாரம் செய்து வருகிறது.

உண்மை என்னவெனில் இந்தக் காலங்களில் கூட பொருள்முதல்வாதமும், கடவுள் மறுப்பு நாத்திகமும் இந்திய சிந்தனையில் இயங்கி வந்தன. இதனை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா   இவ்வாறு குறிப்பிடுகிறார்:  “இந்திய வரலாற்றில் பொருள்முதல்வாத தத்துவமும் கூட மிகத் தொன்மையான காலத்திலிருந்து வழக்கில் இருந்து வந்துள்ளதனை அறிய முடியும்; உபநிடதம் எவ்வாறு பழைமையானதோ அதற்கு குறையாமல் தொன்மையானத் தத்துவம் பொருள்முதல்வாதம்; சுமார் கி.மு. 6 அல்லது 7 நூற்றாண்டு பழமையானது என அதன் காலத்தைக் கணிக்க முடியும் “எனவே ஆன்மிக, கருத்துமுதல்வாத பாரம்பரியம் மட்டுமே இந்திய. தத்துவப் பாரம்பரியம் என்று கூறுவது ஒரு வரலாற்றுப்  புரட்டு.

சுத்தமான ஆன்மிக தத்துவம் என்று விளக்கப்படுகிற உபநிடதங்களில் கூட பொருள்முதல்வாதம் பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாக உத்தாலகர் என்ற  முனிவர் பெயரால் அறியப்படுவது சாண்டோக்கிய உபநிடதம். உத்தாலகர் பொருள்முதல்வாத சிந்தனைகளை வெளிப்படுத்தினார் என்பதை தேவி பிரசாத் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம், மற்றும்  கடவுள் கொள்கைகளை வலியுறுத்தியவர்களின் தத்துவம் யாருக்குப் பயன்பட்டது? அன்று  அரசியல் அதிகாரத்தில் இருந்த  மன்னர்கள், பிராமணர்கள், நிலவுடைமையாளர்கள், வணிகர்கள் உள்ளடங்கிய ஆளும் வர்க்கம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திடவும் சமூக உற்பத்தியின் உபரியை  அவர்கள் அபகரித்துக் கொள்ளவும், மறுபுறம் சூத்திரர்கள் எனப்படும் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கவும்தான் அந்தத் தத்துவம் பயன்பட்டது. ஆதிக்க வர்க்கங்களின் கருவியாக கருத்து முதல்வாதமும் ஆன்மிகமும் செயல்பட்டன.

சமூகத்தில் நிலவிய வர்க்கப் பகைமை தத்துவத்தில் ஆன்மிகத்திற்கும்,நாத்திகத்திற்கும்,கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்குமான  போராட்டமாக நடந்துவந்துள்ளது. ஆளும்  வர்க்கத்தின் கருவியாக கருத்து முதல்வாத  தத்துவங்கள் இருந்ததால் பொருள்முதல்வாத தத்துவங்கள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்தப் போராட்டம் தொன்மைக் காலத்திலும் மத்திய காலத்திலும் தொடர்ந்தது.  சமூகத்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கமுறையும், ஒடுக்குமுறை அடிப்படையிலான மனுவின் சாதிய முறையும் வலுப்பெற்ற மத்திய காலத்தில் பெண்ணடிமைத்தனம், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள், சடங்குகள் உள்ளிட்ட அனைத்து பழமை, பிற்போக்கு கருத்துக்களும் இந்திய தத்துவத்தில் ஏற்றப்பட்டன.

இந்திய தத்துவத்தின் பிரிவுகள்

இந்திய தத்துவ ஆசிரியர்கள் இந்திய தத்துவம் இரண்டு பிரிவுகள் கொண்டதாக வகைப்படுத்துகின்றனர். இந்திய தத்துவ முறைகள் ஒன்பது என வரையறுக்கப்படுகிறது. இவற்றுள், வேதங்களின் அதிகார மேலாண்மையை ஏற்றுக் கொண்டவை ஆறு என வகைப்படுத்தப்படுகிறது. அவை வருமாறு: 1. வேதாந்தம் 2. சாங்கியம் 3. மீமாம்சம் 4. நியாயம் 5. வைசேசிகம் 6. யோகம்.

வேதங்களை ஏற்றுக் கொள்ளாதவை மூன்று என சொல்லப்படுகிறது. அவை:1. பௌத்தம் 2. சமணம் 3. சாருவாகம் அல்லது லோகாயத வாதம் (பொருள்முதல்வாதம்)

ஆனால் வேதங்களின் அதிகாரம் எனும்போது அனைத்துக்கும் மூலாதாரம் கடவுள் அல்லது பிரமம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட தத்துவங்கள் என்றுதான் பொருள்படும்.ஆனால் வேத அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும் ஆறு தத்துவங்களும் உண்மையில் கடவுளை ஏற்கும் முழுமையான ஆத்திகம் பேசும்  தத்துவங்களா? இல்லை என ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக மறுக்கிறார் தேவி பிரசாத்.

“இந்தியாவின் மரபு எனக் கறாராக வரையறுக்கப் படக்கூடிய தத்துவத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிறபோது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண்டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத்துடன் கூறலாம்; நன்கு அறியப்பட்ட பிற அனைத்தும் நாத்திக உள்ளடக்கத்தைக் கொண்டவையே?” என்பது தேவி பிரசாத் நிறுவியுள்ள உண்மை.

இந்த உண்மைக்கு மாறாக இந்திய தத்துவங்களை வேதங்களை மையப்படுத்தி வகைபடுத்தி விளக்குவது உண்மையில் உள்நோக்கம் கொண்ட செயல். சரியாக வகைப்படுத்த வேண்டுமென்றால் இந்திய தத்துவக் கருத்துக்கள் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற இரண்டு பிரிவுகளில்தான் வகைப்படுத்த முடியும்.

வேதாந்தம் என்ற தத்துவ சிந்தனையை   ஓரளவிற்கு ஆத்திகப் பிரிவில் சேர்க்கலாம் என்கிறார் தேவி பிரசாத். நியாயம், வைசேசிகம் இரண்டிலும் தொடக்க காலத்தில் பொருள்முதல்வாத சிந்தனைக் கீற்றுக்கள் இருந்துள்ளன. வைசேடிகம் அணுவே மூலாதாரம் என பேசுகிறது. ஆனால் பிற்காலத்தில் அவை கருத்துமுதல்வாத, ஆத்திகக் கருத்துக்கள் உள்ளடங்கியதாக உருமாறின. எனவே பிற்கால நியாயம், வைசேசிகம் இரண்டும் ஆத்திகம் சார்ந்தவையாக உள்ளன.

இதற்கு மாறாக நாத்திக கண்ணோட்டங்களை பேசுகிற தத்துவங்களாக   பௌத்தம், சமணம், மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் அல்லது சாருவாகம் ஆகியவை அமைந்துள்ளன. எனவே,  ‘இந்தியாவில் நாத்திகம் இருந்ததில்லை; ஆன்மீகமே இந்திய தத்துவம்’ என்று பேசினால்  பெரும்பாலான இந்திய தத்துவ ஆசான்களை புறந்தள்ள வேண்டியிருக்கும் என்று தேவி பிரசாத் எச்சரிக்கிறார்.

தமிழகத்தில் பொருள்முதல்வாதம் 

தமிழக தத்துவ வரலாறும் சீரிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றது. தமிழர் வளர்த்த தத்துவ வரலாற்றின்  2500 ஆண்டுகளில் 1500 ஆண்டுகள் பொருள்முதல்வாதமே மேலோங்கியிருந்தது என்பது மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பனின் வரலாற்று ஆய்வு முடிவு.

”இறைக் கொள்கையும் இறையியல் தத்துவமும், கி.பி.9,10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு 1000 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்தது. இந்த ஆயிரம் ஆண்டுகளில்தான் வைதீக சமக்கிருதமும், பிராமணியமும், 1500 ஆண்டுகளாகத் தமிழர் வளர்த்த தத்துவத்தை அழித்தது. பொருள்முதல்வாதமும், அறிவியலும் பின்னடைவைக் கண்டது….” என்று தனது  “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூலின் முன்னுரையில் தேவ பேரின்பன் குறிப்பிடுகிறார்.

எனவே தமிழகத்திலும் நிலவிய வர்க்கப் பகைமையின் வெளியீடாக தத்துவத் தளத்தில் போராட்டம் நடந்துள்ளது.

காலனியாதிக்க சூழலில் தத்துவப் போக்குகள் புதிய வடிவம் பெற்றன.காலனிய ஒடுக்குமுறை ஆட்சி மேற்கத்திய கல்வி வழியாக காலனியத் தேவைகளுக்கு ஏற்றவாறு, நவீனத்தை புகுத்த முயற்சித்தது. அதன் பிறகு,  தனது நலனுக்கு ஏற்ற வகையில் பழைய நிலப்பிரபுத்துவ தத்துவங்களை உயிர்ப்பிக்க முயற்சித்தது. இதற்கு பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் துணையாக நின்றனர்.

எதிர் சக்திகளாக தோன்றிய காலனிய எதிர்ப்பு சக்திகள் பழமையை உயர்வாகப் போற்றும் உத்தியை பின்பற்றத் துவங்கினர். அதே நேரத்தில் நவீன சூழலில்,பல முற்போக்கு இயக்கங்களும் சமூக சீர்திருத்த இயக்கங்களும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களையும், நாத்திக கருத்துக்களையும்  முன்னிறுத்தினர். வளர்ந்து வந்த மார்க்சிய இயக்கம் இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத் தடத்தில் பயணிக்கத் தொடங்கியது. மார்க்சிய மேதை சிங்காரவேலர் போன்றோர் விடுதலைப் போராட்டம், சுரண்டல் எதிர்ப்பு, தொழிலாளி வர்க்க இயக்கம், சமூக சீர்திருத்தம் ஆகிய நடைமுறைகளுடன் இணைந்து தத்துவத் தளத்திலும் தீவிரமாக செயல்பட்டனர். இந்த வரலாறு தத்துவ செயல்பாட்டிற்கு இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது.

தத்துவ தளத்தில் கடமைகள்

தற்போதைய முதலாளித்துவ முறையின் கீழ் பழைய நிலப்பிரபுத்துவ கலாச்சார கூறுகளும் குடி கொண்டுள்ள நிலையில், இந்திய தத்துவ முறைகளின் மிகவும் பிற்போக்கான அம்சங்கள் அனைத்தும் உயிர்பெற்றுள்ளன. பழைய பிற்போக்கான கருத்து முதல்வாதத்தின் இன்றைய வடிவமாக ‘இந்துத்துவா’ தத்துவ தளத்தில்  செயல்படுகிறது. எனவே நவீன காலத்திலும் பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்திற்குமான போராட்டம் தொடருகிறது. இன்றும் அதிகார மேலாதிக்கத்தில் உள்ள முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கருவியாக கருத்துமுதல்வாதம் செயல்படுகிறது. கூடவே இந்துத்துவா என்கிற அரசியல் அதிகார வெறி கொண்ட பார்வையும் இணைந்துள்ளது.

இந்நிலையில் பொருள்முதல்வாதக்  கண்ணோட்டத்தை பலப்படுத்தி வளர்த்தெடுக்கும் கடமை உழைக்கும் வர்க்கங்களின் முன்னால் உள்ளது. பாட்டாளி வர்க்கம் அதிகார மேலாண்மை பெற வேண்டுமென்றால் தத்துவ தளத்தில் இந்தப் போராட்டம் முக்கியமானது.

இதற்கு இந்திய பாரம்பரியம் ஆன்மிக கருத்துமுதல்வாத பாரம்பரியம் கொண்டது  மட்டுமல்ல; பொருள்முதல்வாத  நிலைப்பாடுகளும் தீவிரமாக போராடி வந்துள்ளன என்ற உண்மையை மக்கள் சிந்தனையில் பதிய வைத்திட வேண்டும்.

பழைய பொருள்முதல்வாதம் அறிவியலை அரவணைக்க முயற்சித்தது என்பதனை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா தனது நூல்களில் விரிவாக விளக்கியுள்ளார். ஆனால் அறிவியல் வளர்ச்சி காணாத  நிலையில் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினால், உலகம், பிரபஞ்சம், இயற்கையின் இயக்கத்திற்கான காரணங்களை விளக்க இயவில்லை. இன்று அறிவியல் வளர்ந்துள்ள சூழலில் தொன்மையான நமது பொருள்முதல்வாதிகள் விட்ட பணியை நவீன காலத்தில் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.

நவீன கால பொருள்முதல்வாத தத்துவமாக கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வளர்த்தெடுத்த இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அமைந்துள்ளது. எனவே இந்திய தத்துவ வரலாற்றின் அடுத்த வளர்ச்சிக் கட்டம் மார்க்சியம்தான். அதுவே நீண்டகாலமாக இந்திய சமூகம் இயங்கிவரும் சுரண்டல், ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து, சமத்துவ அடிப்படை கொண்ட  இந்திய சோசலிசத்திற்கு இட்டுச் செல்லும்.

உதவிய நூல்கள்

தமிழர் வளர்த்த தத்துவங்கள் – தேவ பேரின்பன்.

Indian Philosophy -A popular introduction – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

இந்திய நாத்திகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

Indian philosophy in modern times – V. Brodov (சோவியத் நூல் )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.