மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்


பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு-6

போல்ஷ்விக் கட்சியின் வரலாறு என்பது, எங்களது வாழ்க்கையின் வரலாறு. “
– புரட்சியில் பங்கேற்ற மூத்த தலைமுறை கம்யூனிஸ்ட் ஒருவர் 1965-ஆம் ஆண்டு சொன்னது.

மனித குல வரலாற்றில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஒரு முக்கிய திருப்பு முனை. முதன்முறையாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அரசு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்ட ஒரு மகத்தான மாற்றமே, ரஷ்யப்புரட்சி. இதனை சாதித்தது, மாபெரும் மக்கள் சக்தி.

இந்த மக்கள் சக்தி, மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்ட நிறுவனங்களாக சோவியத்துக்கள் எனும் அமைப்புக்கள் விளங்கியன. இந்த சோவியத்துக்கள், தொழில், மற்றும் கிராம உள்ளூர் மட்டத்தில் உருவானவை. ரஷ்ய மொழியில் சோவியத் என்றால் குழு அல்லது கவுன்சில் எனப்பொருள்படும்.

மார்க்சிய இலட்சியமான சோஷலிசத்தை, ரஷ்யாவில் நிறுவும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டனர். அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான கருவியாக சோவியத் அமைப்பு பயன்பட்டது.

உள்ளூர் மட்ட அமைப்பாகப் இருந்தாலும் அணு ஆற்றல் போன்று பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி புரட்சியை சாதித்த அமைப்புக்களாக சோவியத்துக்கள் விளங்கின. புரட்சிக்குப் பிறகு, சோவியத் யூனியன் நாட்டு அரசினை, உழைக்கும் வர்க்க அரசு என்ற தன்மையோடு உள்ளூர், வட்டார, மாவட்ட, தேசிய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்துக்கள் நிர்வகித்தன.

இந்த நிகழ்வு உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. உள்ளுர்மட்ட மக்கள் அமைப்பு கட்டும் பணி முக்கியமானது. அதனைக் கைவிடுவது சோஷலிச இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாது.

மக்கள் புரட்சியா? சதியா?

முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் சோவியத்துக்களின் பங்கினை அங்கீரிக்க மறுக்கின்றனர். ஏனெனில், சோவியத்துக்களின் பங்கினை ஏற்றுகொண்டால், ரஷ்யப் புரட்சி என்பது, ஒரு மக்கள் புரட்சி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

அக்டோபரில் நடந்த புரட்சி போல்ஷ்விக்குகள் எனும் புரட்சியாளர் கூட்டம், திட்டமிட்ட சதி செய்து நிகழ்த்திய ஒன்று என்றவாறு இன்றளவும் பல நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த கருத்தை மையமாக வைத்து மிகப்பெரிய நூல் ஒன்றை ஒர்லாண்டோ பிஜெஸ் என்பவர் “மக்களின் சோகமான நிகழ்வு” ( Orlando Figes: A Peoples

Tragedy) எனும் நூலை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். போல்ஷ்விக்குகள் அதிகார வெறி கொண்ட கூட்டம் எனவும், 1917-பிப்ரவரியில் நடந்த புரட்சிதான் உண்மையான மக்கள் புரட்சி எனவும் அக்டோபரில் ஒரு கலகம் நடந்து, பிப்ரவரியில் வந்த ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டது எனவும் பிஜெஸ் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர்.

பிஜெஸ் நூலில் பிப்ரவரி புரட்சியை அடுத்த நிகழ்ந்த அக்டோபர் புரட்சியை விளக்குகிற அத்தியாயத்திற்கு, “தனக்கென்று (லெனினுக்கென்று) ஒரு புரட்சி”என்று அவர் தலைப்பிட்டுள்ளார். அதாவது லெனின் தனது அதிகாரப்பசியை தீர்த்திக் கொள்ள அக்டோபர் புரட்சியை நடத்தினார் என அவர் எழுதுகிறார்.

டேவிட் ஷுப் என்பவர் தனது நூலில் அக்டோபர் புரட்சியை விளக்குகிற அத்தியாயத்திற்கு “லெனின் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்:என்று தலைப்பிட்டு, லெனின் செய்த சதிதான் அக்டோபர் புரட்சி என எழுதுகிறார்.

இந்த முதலளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை தலைகீழாக விளக்குகின்றனர். ரஷ்யாவில் அன்று நடந்த மாற்றங்களில் சோவியத்துக்கள் மைய இடத்தினை வகித்தன என்ற அடிப்படையான உண்மையை அவர்கள் மறைக்கின்றனர்.

ரஷ்யப் புரட்சி, அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் புரட்சி என்பதற்கான சாட்சியங்களாக சோவியத்துக்கள் திகழ்ந்தன. இந்த உண்மை, வரலாற்றுப் புரட்டர்களால் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது.

உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்று அழைக்கப்படும் பிப்ரவரி புரட்சியை நிகழ்த்தியதும் மக்கள்தான். ஆனால் அரசு அதிகாரம் முதலாளித்துவ சக்திகளிடம் சென்றது. அக்டோபரில் நிகழ்ந்த புரட்சியின் போதுதான் அதிகாரம் தொழிலாளி வர்க்கத்திடம் மாறியது. இந்த இரண்டு மாற்றங்களிலும் சோவியத் அமைப்புக்கள் முக்கிய பங்கினை ஆற்றின.

ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த சோவியத்துக்களை அழிக்கவே முதலாளிகள் முயற்சித்தனர். கெரன்ஸ்கி தலைமையில் பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த அரசு சோவியத்துக்களை அழிக்க முனைந்தது. கெரன்ஸ்கியே கூட”நாங்கள் சோவியத்துக்களை செத்துப் போகச் செய்திடுவோம்” என்று கூறினார். ஏனென்றால் எப்போதுமே மக்கள் சக்தி உறைந்திருக்கிற எந்த ஒரு ஜனநாயக கட்டமைப்பையும் முதலாளித்துவம் சகித்துக் கொள்வதில்லை.

இதற்கு மாறாக, “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற உண்மையான ஜனநாயக முழக்கத்தை போல்ஷ்விக்குகள் முன்வைத்தனர். அவர்களது, ”நிலம், சமாதானம், உணவு”என்ற கோஷங்களுக்கு ஈடாக “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கம் எதிரொலித்தது.

சோவியத்துக்களை பற்றி லெனின்

19௦5-ஆம் ஆண்டிலேயே சோவியத்துக்கள் உருவாகத் துவங்கின. . இது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. ஓரளவு கிராமப் புறங்களிலும் இந்த அமைப்புக்கள் வேரூன்றத் தொடங்கின.

புரட்சி நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக, 1917 ஜூலை இறுதியில் லெனின் “புரட்சியின் படிப்பினைகள்” என்ற கட்டுரையை எழுதினார்.

உள்ளூர் மட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டும் சோவியத்துக்களுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

சோவியத் அமைப்பை விவரிக்கும் போது, லெனின் எழுதுகிறார்.

“(ஜார் வீழ்ச்சிக்குப் பிறகு, கிடைத்த) சுதந்திரத்தை பயன்படுத்தி,  மக்கள் சுயேச்சையாக அமைப்பு ரீதியாக திரண்டிடத் துவங்கியுள்ளனர். ரஷ்ய மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் தலைமை அமைப்பாக இருப்பது சோவியத்துக்கள். தொழிலாளிகள்,  இராணுவ வீரர்கள்  மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் அமைப்பாக சோவியத்துகள் விளங்குகின்றன.”

சோவியத் என்பது வெறும் சங்கமோ, சாதாரணமாக இயங்கும் அமைப்போ அல்ல. வர்க்க உணர்வு வளர்ச்சியின் வெளிப்பாடு என்பதை லெனின் குறிப்பிடுகிறார்.

“இந்த சோவியத்துகள் ஏற்கனவே பிப்ரவரிப் புரட்சியின் போதே உருவாகத் தொடங்கி விட்டன. பிறகு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ரஷ்யாவின் பெரும்பாலான பெருநகரங்களிலும், பல கிராமப்புற மாவட்டங்களிலும் வலுவான வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளிகளும் விவசாயிகளும் சோவியத்துகளில் ஒன்றுபட்டுள்ளனர்.”

இதில் “வர்க்க உணர்வு” என்பது முக்கியமான சொற்றொடர். முதலாளித்துவத்தை அகற்றும் பணிக்காக வர்க்க ஒற்றுமை உறுதிப்பட வேண்டுமென்று கருதுகிற உணர்வு நிலை தொழிலாளி, விவசாயிகள் மத்தியில் உருவானதால்தான் புரட்சி அமைப்புக்களாக சோவியத் அமைப்புக்கள் தோன்றின. வர்க்க உணர்வை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்தும் பணியை போல்ஷ்விக்குகள் வெற்றிகரமாக செய்தனர்.

சோவியத்துகளைப் பற்றி விவரிக்கும் லெனின், சோவியத்துக்களின் ஜனநாயகத் தன்மையையும் குறிப்பிடுகிறார்.

“சோவியத்துகள் முழுக்க முழுக்க சுதந்திரமான வழிமுறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்களாக விளங்குகின்றன. தொழிலாளிகள், மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்களைப் பிரதித்துவப்படுத்தும் உண்மையான அமைப்புகளாக அவை திகழ்கின்றன. ராணுவச் சீருடையில் தொழிலாளிகளும் விவசாயிகளும் ஆயுதபாணியாகவும் இந்த சோவியத்துக்களில் திரண்டுள்ளனர். ”

புரட்சியில் முக்கிய பங்காற்றிய இந்த சோவியத்துக்கள், புரட்சிக்குப் பிறகும் மேலும் ஜனநாயக அடிப்படையில் செயலாற்றின. உண்மையில், உள்ளூர் மட்டத்திலான மக்கள் திரள், அமைப்புரீதியாக ஒன்று திரண்ட நிகழ்வுதான் சோவியத் எனும் அற்புதமான வரலாற்று நிகழ்வு.

எதிர்கொண்ட தடைகள்

சோவியத்துக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது எளிதாக நடக்கவில்லை. துவக்கத்தில் போல்ஷ்விக்குகள் முன் வைத்த “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே”என்ற முழக்கத்தினை அப்போது   சோவியத்துகளில் இருந்த சிறுபான்மை எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் மட்டுமே ஏற்றுக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

சோவியத்துகளின் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர், அன்று, சோசலிச-புரட்சிவாதிகளின் (Socialist-Revolutionary) கட்சிகளிலும், மென்ஷிவிக் பிரிவின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு பிரிவினரும் சோவியத்துகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதை எதிர்த்தனர்.

முதலாளித்துவ அரசை அகற்றி சோவியத்துகளின் அரசாங்கம் நிறுவ வேண்டும் என்பதனை  இந்தக் கட்சிகள் எதிர்த்ததற்கு என்ன காரணம்? முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்து, ,  அதனுடன் சமரசம் செய்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி அரசை உருவாக்குவதற்குத்தான் அவர்கள் பாடுபட்டனர்.

அவர்களது இந்தப் பாதைதான் பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு , அது அடுத்த கட்டத்திற்குப் போகாமல், ஐந்து மாத காலத்திய தேக்கத்திற்கு காரணமாக அமைந்தது. லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடி இறுதியில் வெற்றி கண்டனர்.

லெனினது உக்கிரமமான கருத்துப் போராட்டம், புரட்சியின் தேக்கத்தை உடைத்தது. சோவியத்துக்கள் என்ன செய்ய வேண்டும், புரட்சி நோக்கி எவ்வாறு பயணப்பட வேண்டும் என்பதை பிப்ரவரி முதல் இடையறாது அவர் எழுதி வந்தார். சோவியத்துக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென உறுதியோடு வலியுறுத்தி வந்தார் லெனின்.

“. . . . . . . . அரசியல் அமைப்பு சட்ட அவை கூடுவது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. . இந்நிலையில் சோவியத்துக்களை தவிர்த்து, வேறு எந்த சக்திகளும் அரசு அதிகாரத்தில் இருக்க முடியாது. சோவியத்துக்கள் அரசு அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும்.  . . . எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவானது. அப்போதுதான் நமது புரட்சி,  உண்மையான மக்கள் புரட்சியாகவும், உண்மையான ஜனநாயகப் புரட்சியாகயும் மாறும். ”என்று அவர் எழுதினார்.

அத்துடன், கெரன்ஸ்கி அரசாங்கம் மக்கள் விருப்பத்திற்கு மாறாக போரை தொடர்வது என்று முடிவெடுத்த நிலையில், சோவியத்துகள் அதிகாரத்தினைக் கைப்பற்றி, போரினை நிறுத்த முயற்சிக்க வேண்டுமென லெனின் அறிவுறுத்தினார்.

சோவியத்துக்கள் அதிகாரத்தை கைப்பற்றினால்தான், “. . ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதிக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். அப்போது தான் தொழிலாளிகளும் விவசாயிகளும் சேர்ந்து,  “போரில் இருந்து” கொள்ளை இலாபத்தை ஈட்டிக்கொண்டு, நாட்டை சீரழித்து, பட்டினி நிலைக்கு தள்ளியிருக்கின்ற முதலாளிகளை அடக்கிட முடியும். ”என்று விளக்கினார், லெனின்.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் லெனினது வழிகாட்டுதல்கள், வற்றாத ஜீவநதியாக வந்து கொண்டிருந்தன. புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு ரஷ்ய உழைக்கும் மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

“உழைக்கும் மக்களே, இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள்தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”

லெனினது வழிகாட்டுதலில் சோவியத்துக்கள் அரசு அதிகாரத்தை உறுதியாகப் பற்றிகொண்டு,  உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசை உருவாக்கும் அரும் பணியில் ஈடுபட்டன.

இன்று, உள்ளூர் மட்டத் திரட்டல் கடினமானது என்பதால் அதனை அலட்சியப்படுத்தும் தவறு பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கிறது. இது லெனினிய சிந்தனைக்கு மாறானது. அடிமட்டத்திலிருந்து மக்கள் சக்தியை ஒருமுகமாக திரட்டி, புரட்சிகரப் பேராற்றலை உருவாக்க வேண்டுமென்பது ரஷ்யப் புரட்சி வரலாற்றில் சோவியத்துக்கள் எடுத்துரைக்கும் படிப்பினை. இதனை புரட்சிகர இயக்கங்கள் மறந்திடக் கூடாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.