மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம்


….சில குறைபாடுகள், தளர்வுகள் இருந்த போதிலும் இந்த அரசியலமைப்புச்சட்டம் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதில் நீண்ட தூரம் முன்னேறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது: உண்மையில் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் வெகுசில நாடுகளையே இதற்கு இணையாக சொல்ல முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவான புதிய தலைமை மக்களுக்கு அளிக்கப்படும் ஜனநாயக உரிமைகள் மக்களின் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை வலுவுடையதாக்கும் என்று கருதினார்கள்.

ஆனால், அடிப்படை உரிமைகள், பொதுத் தேர்தல்கள் என்ற அறிவிப்புகளின் பின்னே புதிதாக விடுதலை பெற்ற மக்களின் மீது முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டின் அதிகாரத்தை உள்ளடக்கியதாகத்தான் அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. காலனி ஆதிக்கத்தின் போது கிடைக்காத விடுதலையினையும் உரிமைகளையும் வழங்குவதாக இருந்தாலும், அதனுடைய சாரமான அம்சம் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுதான். அரசியல் சட்டம் சொத்துரிமையினை அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடித்தது: பொது அமைதியினையும் நாட்டின் பாதுகாப்பினையும் நிலைநிறுத்துவதாகக் கூறி மற்ற அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தப்படுவதையும் உள்ளடக்கி இருந்தது. காலப் போக்கில் வர்க்க மோதல்கள் அதிகமாகும் போது அறிவிக்கப்பட்ட உரிமைகளின் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக மாறிவிடுகின்றன. அவசர நிலை காலகட்டத்தில் அரசியல்சட்டம் முடமாக்கப்பட்டதில் அது வந்து முடிந்தது.

இப்படித்தான் (முதலாளித்துவ) வர்க்க ஆட்சியின் தேவைகளை நிறைவேற்ற முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. 1936 இல் சோவியத் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்வரைவினை விளக்கி ஸ்டாலின் கூறியது: “முதலாளித்து அரசியலமைப்புச் சட்டங்கள் சமூகம் என்பது சொத்துள்ளவர்கள், இல்லாதவர்கள் என முரண்பட்டு மோதும் வர்க்கங்களைக் கொண்டது என்ற கோட்பாட்டினை குறிப்பாக சொல்லாமலேயே உருவாக்கப்படுகின்றன: எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசுக்கான வழிகாட்டுதல் என்பது முதலாளி வர்க்கத்தின் கைகளில்தான் இருக்க வேண்டும்: சொத்துடைமை வர்க்கங்களின் விருப்பத்திற்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு சமூகம் தகவமைக்கப்படுவதை அந்த அரசியலமைப்புச் சட்டங்கள் உறுதி செய்கின்றன”. (லெனினிசம் முன்வைக்கும் பிரச்சனைகள் – பெய்ஜிங் 1936.ப.808)

இயற்கையாகவே, அந்த அமைப்புச் சட்டங்களை உருவாக்கியவர்கள் மக்களின் தடையற்ற, ஜனநாயக உரிமைகளை பல வகையிலான எல்லை கட்டுப்பாட்டிற்கும் நிபந்தனைகளுக்கும் உட்படுத்தியே வைத்தனர். ஆனால், வயது வந்தோருக்கு வாக்குரிமை, தேர்தல்கள், மக்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவைகள் போன்ற அம்சங்கள் கோடிக் கணக்கான மக்களை ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஈர்க்கப்படுவதற்கும் அவர்களின் உணர்வுமட்டத்தை உயர்த்துவதற்கும் துணை புரிந்தன.

அதனூடே மற்றொரு அம்சத்தையும் காண முடியும்: ஜனநாயக உரிமைகளை செயல்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் வலிந்து புகுத்தப்படும் பொழுதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் சில பலவீனங்களையும் சுட்டிக் காட்டுகின்றன: அவைகள் பின்னாளில் ஜனநாயகத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் மிகப்பெரும் ஆபத்துகளாக உருவெடுத்தன. முதலாவதாக, அரசின் ஆட்சி மொழி குறித்து ஒன்றுபட்ட கருத்து உருவாகவில்லை, ஆங்கிலத்தையே இரண்டாவது ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அதுவே ஒரே ஆட்சி மொழியாகவும் இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த வளர்ச்சிப் போக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்க வேண்டும். புதிய இந்தியாவுக்கு இது மிகவும் வெட்கப்பட வேண்டிய நிலையாக இருந்தது: அது, தேச ஒற்றுமைக்கு ஏற்பட்ட ஊனத்தையும், அனைத்து மொழிகளும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த ஊனத்தை களைய ஆளும் வர்க்கங்களுக்கு சக்தி இல்லை என்பதையும் வெளிப்படுத்தியது. இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அதன் செயல்முறைக்கு உட்படுத்தப்படும். குடிமக்களையும் மனித உயிர்களையும் தாண்டி, பசு பாதுகாப்பு போன்ற அம்சங்களை “வழிகாட்டும் நெறிமுறைகள்” பகுதியில் சேர்த்தனர். ‘பசு பாதுகாப்பு’ என்பது இந்து சமய மீட்பியக்கத்தின் அழுத்தமான சொற்றொடராகும்: அது காங்கிரஸ் கட்சியின் சில முக்கியமான தேசிய தலைவர்களின் தத்துவார்த்த நிலையுமாகும். இது ஓரளவு எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரு காலனி நாட்டில் முதலாளித்துவ சக்திகளும் அதன் பிரதிநிதிகளும் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் சமரசம் செய்து கொள்கிறபொழுது அவர்கள் முற்றிலுமாக மதச்சார்பற்றவரக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. காலப்போக்கில் பழமைவாதத்தோடு செய்து கொண்ட சமரசம், இந்திய மக்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகளை உருவாக்கியது.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, மன்னராட்சிக்கு உட்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கினாலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான பல பிரச்சனைகள் மக்களை கவ்விப்பிடித்தன. தேச விடுதலை வெற்றியில் ஆளும் வர்க்கங்கள் கொண்டிருந்த ஆரம்ப கால முகத்தோற்றம் பொலிவிழந்தது விடுதலைப் போராட்ட காலத்தில் முன்னுக்கு வராத அல்லது முறையாக கவனத்தில் கொள்ளாத இந்திய சமூகத்தில் முரண்பாடுகள் மேலெழும்பி முன்னுக்கு வந்தன. தேச ஒற்றுமை என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று எண்ணிய முதலாளித்துவ தலைமை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான நிகழ்வுகளை சந்தித்தன. சிறுபான்மை மக்களை ஒன்றாக இணைத்து பொது தேசிய வாழ்வின் நீரோட்டத்தில் அவர்கள் வாழ நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்வுக்கு உட்படாத பிரச்சனையாக தொடர்ந்தது. மன்னராட்சி மாநிலங்கள் நீக்கப்பட்ட போதிலும், தேசிய இனங்கள் பற்றிய பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இந்திய ஒற்றுமையினை குலைக்கும் வகையில் சுதந்திர மாநில கோரிக்கைகள் எழுந்தன…… ஏகாதிபத்தியவாதிகளுக்கு இதில் தலையிட்டு வகுப்புவாத பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் தைரியம் கிடைத்தது. முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டு இந்த உயிர்நாடியான பிரச்சனையை எதிர்கொள்ளும் திறனற்றது என்பது வெட்ட வெளிச்சமானது.

(நாடு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூர்ந்து தோழர்.பி.டி.ரணதிவே “தி மார்க்சிஸ்ட்” ஆங்கில இதழில் (தொகுப்பு ஏ இதழ் 2-3) எழுதிய கட்டுரையிலுள்ள சில பகுதிகள்)